![திருச்சி ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் மேலும் 600 கோடியில் ஒரு டைட்டல் பார்க்கா ! அங்கலாய்க்கும் பொதுமக்கள் !](https://angusam.com/wp-content/uploads/2023/04/ANGUSAM-BUSINESS-TRICHY-16-480x430.jpg)
திருச்சி ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் மேலும் 600 கோடியில் ஒரு டைட்டல் பார்க்கா ! அங்கலாய்க்கும் பொதுமக்கள் !
திருவெறும்பூர் தொகுதியில் உள்ள நவல்பட்டு ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் திருச்சியில் மேலும் ஒரு டைட்டல் பார்க் அரசு திட்டமிட்டு வருவதற்கு நவல்பட்டு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு திருவெறும்பூர் ஏப் 12 திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் ஐடி பார்க் இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் மேலும் ஒரு டைட்டல் பார்க் உருவாக்க அரசு திட்டமிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
![ஐடி- பார்க்](https://angusam.com/wp-content/uploads/2023/04/IT_Park.jpg)
இது பற்றிய விவரம் வருமாறு திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சியில் 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் 12 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைத்து ஐடி கம்பெனிகளுக்கு கட்டிடத்தில் இட ஒதுக்கீடும் பெரிய நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடும் செய்து ஆணைகள் வழங்கினார்.
ஆனால் ஆணைகளை பெற்ற பல நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கவில்லை நவல்பட்டு ஐடி பார்க்கில் தற்போது செயல்பாடுகளில் உள்ள நிறுவனங்கள் எஸ்பிஎஸ் இதில் ஆயிரம் ஊழியர்களும்,அடுத்து டெல்லா நிறுவனத்தில் 200 பேரும்,ஐ லிங்க்,மற்றும் உரம் நிறுவனங்களில் தலா 100 பேரும் மொத்தம் 1400 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
![IT_Park_22](https://angusam.com/wp-content/uploads/2023/04/IT_Park_22.jpg)
தற்பொழுது அருகாமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் புதிய ஐந்து மாடி கட்டிடங்களும் உருவாகி வருகிறது.அருகாமையில் இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காலி நிலங்களும் உள்ளது. இதனை மேம்படுத்தினால் இங்கு சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய அளவுக்கு வசதி உள்ளது.
ஆனால் அரசு இதில் கவனம் செலுத்தாமல் திருச்சி பஞ்சப்பூரில் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் புதிய டைட்டல் பார்க் உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது இச்செய்தி அறிந்த திருவெறும்பூர் தொகுதி மக்களும் நவல்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.
![எம்எஸ் ராஜராஜன்](https://angusam.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-12-at-5.43.23-PM.jpeg)
இது குறித்து நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகர் அப்துல் கலாம் குடியிருப்போர் நல சங்கம் பொதுச்செயலாளர் எம்எஸ் ராஜராஜன் கூறுகையில் கடந்த திமுக ஆட்சியில் தான் நவல்பட்டு ஐடி பார்க் உருவாக்கப்பட்டது அருகாமையில் ஏர்போர்ட், தேசிய நெடுஞ்சாலைகள், அரை வட்டச் சாலைகள் போன்ற வசதிகள் இப்பகுதியில் இருப்பதால் இங்கு ஐடி பார்க் அமைந்தது இதனை மேம்படுத்தி இங்கு பல்வேறு நிறுவனங்களை தொழில் தொடங்க வைக்க வேண்டும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலை இல்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
தற்பொழுது இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியத்திலேயே பலர் பணி புரிகின்றனர் தமிழக அரசு இதனை மேம்படுத்த தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் இங்குள்ள ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் மேலும் ஒரு டைட்டல் பார்க் அமைப்பது வீண் வேலை இவ்வாறு அவர் கூறினார்.
![600 கோடியில் டைட்டல் பார்க்](https://angusam.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-12-at-5.53.51-PM.jpeg)
இப்பகுதியில் ஐடி பார்க் அமைப்பதற்காக நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த 34 குடும்பத்தினரின் அனுபவத்தில் இருந்த நிலம் தலா ரெண்டு ஏக்கர் வீதம் 68 ஏக்கர் நிலத்தை அரசு பறிமுதல் செய்தது.ஐடி பார்க் அமைந்தால் இப்பகுதி பெரும் வளர்ச்சியடையும் என்று நம்பி இருந்த சுற்று பகுதி மக்களுக்கு ஐடி பார்க் வளர்ச்சி அடையாமல் இருப்பது வருத்தத்தை அளித்துள்ளது.
தொகுதி எம் எல் ஏ வும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.