அங்குசம் பார்வையில் ‘ஜாக்கி’
தயாரிப்பு : பிகே 7 ஸ்டுடியோஸ்’ பிரேமா கிருஷ்ணதாஸ், சி.தேவதாஸ், ஜெயா தேவதாஸ். டைரக்ஷன் : டாக்டர். பிரகபால், ஆர்ட்டிஸ்ட் : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன்,மதுசூதன் ராவ், சித்தன் மோகன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், இசை : சக்தி பாலாஜி, ஆர்ட் டைரக்டர் : பாப்பநாடு உதயகுமார், கிரியேட்டிவ் புரொடியூசர் : ஆர்.பி.பாலா, பி.ஆர்.ஓ; நிகில் முருகன்.
தெற்கத்திச் சீமையின் கலாச்சார தலைநகரான மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும்…நடந்து கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, சாவக்கட்டு [ சேவல் சண்டை], ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை மையப்படுத்தி சினிமாக்கள் வந்துள்ளன. முதல்முறையாக கிடா சண்டையை மையப்படுத்தி வந்துள்ள சினிமா தான் ‘ஜாக்கி’.
மதுரை ஏரியாக்களில் நடக்கும் கிடா சண்டையில் தனது கிடா ஜெயித்து தொடர்ந்து ‘ஜாக்கி’ பதக்கத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்தி [ ரிதன் கிருஷ்ணா]. உசிலம்பட்டியில் நடக்கும் கிடா சண்டையில் அவரின் கிடாவுடன் தனது கிடாவை மோத வைத்து ‘ஜாக்கி’ பதக்கத்தை தட்டிச் செல்கிறார் ராமர்[யுவன் கிருஷ்ணா] அப்போது ஆரம்பமாகிறது இருவருக்குமிடையிலான பகை. தொடர்ந்து பற்றி எரிகிறது பகைத்தீ. இந்த பகைத்தீ எப்படி அணைந்தது? இதான் இந்த ‘ஜாக்கி’யின் க்ளைமாக்ஸ்.
மதுரை யானைமலை ஏரியா தான் கதையின் முக்கியக் களம். அங்கே தனது அக்கா சரண்யா ரவிச்சந்திரன், அவரின் பெண் குழந்தை இவற்றுடன் தனது உயிருக்கு உயிரான கிடாவுடன் வசிக்கிறார் யுவகிருஷ்ணா. இவரின் மதுரை ஸ்லாங்கெல்லாம் நன்றாகத் தான் இருக்கு[ டப்பிங் வாய்ஸான்னு தெரியல]. ஆனா பாடிலாங்குவேஜ் தான் செட்டாகலப்பு. ஆனா சண்டைக் காட்சிகளில் மேக்ஸிமம் ரிஸ்க் எடுத்திருக்கிறார் யுவன் கிருஷ்ணா.
இதேபோல் தான் எதிரி கார்த்தியாக வரும் ரிதன் கிருஷ்ணாவுக்கும். போட்டியை நடத்தும் பெரிய மனுஷனாக ரிதனின் மாமாவாக வரும் மதுசூதன் ராவ் தான் படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறார்.
அம்மு அபிராமிக்கும் யுவன் கிருஷ்ணாவுக்கும் இடையிலான லவ் எபிசோட் லைட்டாத்தான் ஒட்டுது. அது தான் கதைக்களத்தில் வேறு கலரைக் கொடுக்குது. மற்றபடி எப்பப் பார்த்தாலும் ஹீரோவும் வில்லனும் எதிரும் புதிருமாக கடுகடுப்புடனேயே படம் முழுவதும் திரிவது சலிப்பா இருக்குப்பு.
கிடா சண்டை மைதானத்தை ட்ரோன் ஷாட்டிலும் சண்டையை கிரவுண்ட் ஷாட்டிலும் வெவ்வேறு கோணங்களில் கேமராவுக்குள் கொண்டு வந்து விஷுவல் விருந்து வைக்கிறார் கேமராமேன் உதயகுமார். பேக்ரவுண்ட் ஸ்கோரில் ரொம்பவே அலறவிட்டுவிட்டார் மியூசிக் டைரக்டர் சக்தி பாலாஜி. எடிட்டர் ஸ்ரீகாந்த் நினைத்திருந்தால் 2 மணி நேர 27 நிமிட படத்தினை 2 மணி நேரமாக குறைத்திருக்கலாம். அவருக்கு என்ன பிரச்சனையோ?
கேரளாவைச் சேர்ந்த இயக்குனர் பிரகபால் தமிழ்நாட்டின், குறிப்பாக மதுரையின் கிடா சண்டையை சினிமாவாக பதிவு செய்ததற்கு கடுமையான உழைப்பைக் கொட்டியுள்ளார். இதற்காகவே அவரைப் பாராட்டலாம். ஆனால் அவரின் உழைப்புக்கேற்ற பலன்?
அங்குசம் பார்வையில் ‘ஜாக்கி’ 40/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.