சென்சாரிலிருந்து தப்பிய ‘சிறை’
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்க, ‘டாணாக்காரன்’ தமிழ் கதை எழுத, சுரேஷ் ராஜகுமாரி டைரக்ட் பண்ண, விக்ரம் பிரபு, அறிமுகம் அக்ஷய்குமார் [ லலித்குமார் மகன்], ஹீரோயின்கள் அனந்தா, அனிஷ்மா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சிறை’ நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீசாகிறது.
இதனால் படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி டிச.22-ஆம் தேதி மதியம் சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு வெளியே உள்ள புல்வெளி மைதானத்தில் மிகப்பெரிய ஜெயில் செட் போட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார் லலித்குமார். மேடையில் பெரிய எல்.இ.டி ஸ்கிரீனிலும் ஜெயில் செட் பளிச்சிட்டது.
படத்தின் ஹீரோக்கள், ஹீரோயின்கள், கேமராமேன் மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் பிலோமின் ராஜ், மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகர் ஆகியோர் படத்தின் சிறப்பு குறித்து சுருக்கமாக பேசினார்கள். தனது குரு வெற்றிமாறனிடம் வேலை பார்த்த அனுபவத்தையும் இந்தப் படத்தை தயாரித்த லலித்குமாருக்கு நன்றியையும் பகிர்ந்து கொண்டார் டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி.
சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, சுரேஷ் காமாட்சி, அருண் விஷ்வா, டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், வெற்றிமாறன், பா.இரஞ்சித், தியேட்டர் அதிபர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“2025-ல் ரிலீசான முக்கால்வாசிப்படங்கள் தோல்விப்படங்கள். வெற்றி பெற்ற சில படங்களும் டைரக்டர்களுக்காக ஓடியது. அதனால் டைரக்டர்களின் கதையில் ஹீரோக்களின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும். எப்போதுமே டைரக்டர்களின் படங்கள் தான் ஜெயிக்கும்” என்ற உண்மையை ஓப்பனாக பேசினார் திருப்பூர் சுப்பிரமணியன்.
ஆர்.கே.செல்வமணி பேசும் போது,
“இந்தப் படத்தில் ஒரு முஸ்லீம் கேரக்டர் வருகிறது. அதை கச்சிதமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்துள்ளார் டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி. நம்ம நாட்டில் மத வெறுப்பு விஷமாக பரவி வரும் இந்த நேரத்தில் நம்ம தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு மதநல்லிணக்கம் பேசும் படம் வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் சென்சாரிலிருந்து தப்பிச்சு வெளியே வந்ததே பெரிய அதிசயம்” என போட்டுத்தாக்கினார்.
இதே கருத்தை டைரக்டர் இரஞ்சித்தும் வலியுறுத்திப் பேசினார்.
தனது சிஷ்யன் குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசினார் டைரக்டர் வெற்றிமாறன்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.