ஐகோர்ட்டுக்கும் , நில உரிமையாளருக்கும் ”ஜோக்” காட்டும் ஜோலார்பேட்டை போலீஸ் !
ஐகோர்ட்டுக்கும் , நில உரிமையாளருக்கும் ”ஜோக்” காட்டும் ஜோலார்பேட்டை போலீஸ் ! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்த்தவர் ஒப்பந்ததாரர் குமரேசன். ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் இவருக்குச் சொந்தமான நிலத்தின் தனிப்பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவரையும் கூட்டுப்பட்டாவில் அவரது பெயரையும் சேர்த்திருக்கிறார், அப்போதைய திருப்பத்தூர் தாசில்தாரராக இருந்த சிவப்பிரகாசம்.
இதனை தாசில்தாரிடம் குமரேசன் முறையிட, பட்டாவிலிருந்து கோவிந்தராஜ் பெயரை நீக்க 20 இலட்சம் லஞ்சமாக கேட்டிருக்கிறார். இந்நிலையில், இலஞ்சம் கேட்ட தாசில்தார் சிவப்பிரகாசம் மீது ஜோலார்பேட்டை காவல்நிலையம் , மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை, மற்றும் துனை ஆட்சியராக இருக்கும் பானுவிடமும் புகார் அளித்திருந்தார்.
புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் , கடந்த 2023 நவம்பர் 25 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் குமரேசன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் , ”புகார் குறித்து தாசில்தாரரிடம் விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்.” என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர் பாண்டியனுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அப்புகார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்திருந்தார் ஆட்சியர்.
” பட்டாவில் பெயர் சேர்க்க, நீக்க லஞ்சம் ? தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு” என்ற தலைப்பில், கடந்த ஜூலை 2 ந்தேதி , அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன் எதிரொலியாக தாசில்தார் தூண்டுதலில் பேரில் மிரட்டல் விடுத்த, அபுபக்கர் சித்திக் என்பவர் மீது ஜோலார்பேட்டை காவல்துறை எப்ஐஆர் பதிந்தது. இதன் எதிரொலியாக “லஞ்சம் கேட்ட தாசில்தாரருக்கு ஆதரவாக கொலைமிரட்டல் விடுத்த நில புரோக்கர் மீது எப்ஐஆர் கோர்ட் உத்தரவிட்டும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?” என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 15 ந்தேதி அங்குசம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், தாசில்தார் சிவப்பிரகாசம் நில அபகரிப்புக்கு, உடந்தையாக இருந்ததாகவும்; லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குமாறு கூலிப்படையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும்; தற்போதைய வாணியம்பாடி தாசில்தாராக இருக்கும் சிவப்பிரகாசம் மீது ஜோலார்பேட்டை போலீஸ் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு, எனவே கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை கொலை செய்ய தூண்டிய தாசில்தார் சிவப்பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குமரேசன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 27 அன்று விசாரணைக்கு வந்திருந்திருந்தது . இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஜூலை 15 அங்குசம் இதழில் நாம் சுட்டிகாட்டிய படியே ” கொலை மிரட்டல் விடுத்த அபுபக்கர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்ததில் கைது நடவடிக்கை எப்போது பாயும் ? தாசில்தார் சிவப்பிரகாசம் மீது கோர்ட் உத்தரவிட்டும் இன்னும் வழக்கு பதியாதது ஏன்? விசாரனை கூட இல்லையே ஏன் ?” என அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியின் முடிவில் குறிப்பிட்டு இருந்தோம்.
நாம் முன்வைத்திருந்த அதே கேள்விகளை எழுப்பியிருக்கும் நீதிமன்றம் விசாரணை நிலையின் அறிக்கையை ஆகஸ்ட் 27 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜோலார்பேட்டை போலீசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கா. மணிகண்டன்