வைகோவை முட்டுச் சந்தில் சிக்க வைத்த கே எஸ் ராதாகிருஷ்ணன் … !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இலங்கையில் இறுதி யுத்த காலகட்டம்.

நான் ZEE தமிழ் தொலைக்காட்சியில் வேலை செய்து கொண்டிருந்தேன்,

Sri Kumaran Mini HAll Trichy

விடுதலைப் புலிகள் மீதான என் ஆர்வத்திற்கு வைகோவும் ஒரு காரணமாக இருந்தார். திமுக மேடைகளில் உணர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறிய வைகோவின் வீர உரைகளை கேட்டு  அந்த எரிமலை தணலில் குளிர்காய்வது சுகமான அனுபவமாக இருந்தது.

அப்போது நெல்லையில் அடிக்கடி வைகோவை சந்தித்து பேசும் வழக்கம் இருந்தது, 1989 நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார் வைகோ.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதிமுக சார்பில் அவரை எதிர்த்து களம் கண்டவர் இன்றைய சீமானின் மாமனாராக அறியப்படும் கா.காளிமுத்து.

கா.காளிமுத்து.
கா.காளிமுத்து.

விருதுநகரில் கே கே எஸ் எஸ் ஆர் வீட்டில் காளிமுத்துவை பார்த்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் இருந்த வைகோவை சந்திக்க (அப்போது சிவகாசியில் முதுங்கலை படித்துக் கொண்டிருந்த (Arivarasu Coonghya) மை.அறிவரசு கூஞ்ஞாவையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.

நாங்கள் போய் சேரும்போது வைகோ பொதுக்கூட்ட மேடையில் ஏறிவிட்டார். மேடையை சுற்றிலும் பெருங்கூட்டம். மேடையின் ஓரமாக இருந்த களந்தை லாரன்சிடம் தகவல் சொல்லி விட்டு கீழே காத்திருந்தோம்.

சற்று நேரத்தில் மேடையிலிருந்து இறங்கி வந்த களந்தை லாரன்ஸ் ’MP உங்கள கார்ல உடகாரச் சொன்னார் சற்று நேரத்தில் வந்திருவார்..’ என்று (அப்போதெல்லம் நெல்லை திமுக வட்டாரத்தில் MP என்றால் அது வைகோவை குறிக்கும் சொல்) எங்களை மேடையின் பின்புறம் நின்று கொண்டிருந்த வைகோவின் காரின் பக்கமாக அழைத்துப் போனார்.

நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அறிவரசு கூஞ்ஞா கீழே நின்று கொண்டிருந்தார்,

அடுத்த சில நிமிடங்களில் மேடையிலிருந்து இறங்கி வந்து காரில் ஏறிய வைகோ என்னிடம் மனம் விட்டு பேசினார். அப்போதே திமுகவில் வைகோவிற்கு என்று ஒரு தனி அணி உருவாகி விட்ட நிலையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட நான் தீவிர வைகோ ஆதரவாளராக இருந்தேன்.

 வைகோ
வைகோ

கள நிலவரம் தெரியாமல் வைகோ வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நானும் தொகுதியில் பார்த்த, கேட்ட பல விஷயங்களை அவரோடு பகிர்ந்து கொண்டேன்.

ஒரு கட்டத்தில் என் கையைப் பிடித்துக் கொண்டு கலைஞர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஆலடி அருணாவுக்கு வட சென்னையை கொடுத்து விட்டு தனக்கு சிவகாசியை தந்து ஓரங்கட்டி விட்தாகவும் சொல்லி கதறி அழ ஆரம்பித்தார் வைகோ!

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் மறுபக்கம்  வைகோவே நம்மிடம் அழுகிறாரே என்று பெருமையாகவும் இருந்தது!

மேடைகளில் கர்ஜிக்கும் சிங்கம் காருக்குள் கதறி அழுத காட்சியால் அவரைப் பற்றி எனக்குள் இருந்த சிங்கம் (பிம்பம்) உடைந்து சிதறியது..!

இந்த சந்தர்ப்பத்தில் தான் பண நெருக்கடியில் தவிப்பதாகவும் தேர்தல் செலவுகளுக்கு பணம் இல்லாமல் தடுமாறுவதாகவும் வைகோ என்னிடம் குறிப்பிட, அவருக்கு உதவ நினைத்த நான் என் பங்கிற்கு ‘பண நெருக்கடியில் திணறும் வைகோ..’ எனத் தலைப்பிட்டு தேர்தல் கட்டுரையை அனுப்ப அது அப்படியே ஜூனியர் விகடனில் வெளியானது!

அப்போது ஜூனியர் விகடன் நம்பர் 1 பத்திரிகையாக மட்டுமல்லாமல்  நம்பகரமான பத்திரிகையாகவும் இருந்ததால் அது வைகோவிற்கு கை மேல் பலன் தந்தது.

புலம் பெயர் தமிழர்களும் புலி ஆதரவாளர்களும் வைகோவிற்கு நிதியை அள்ளி வீசினார்கள்.

அதன் பிறகு பதினொன்று ஆண்டுகள் கழித்து ஒரு முறை வைகோவை சந்தித்தபோது  அந்த காலகட்டத்தில் அந்த கட்டுரை தனக்கு மிக உதவியாக இருந்ததாகவும், அதன் மூலம் தனக்கு ஓரளவிற்கு கணிசமான நிதி கிடைத்தாகவும் சொல்லி எனக்கு நன்றியும் கூறினார்.

அதன் பிறகும் எப்போதாவது வைகோ அவர்களை வழியில் பார்த்தால் அருகே போய் பேசுவது வழக்கம்.

2009 ஆண்டு ஈழப் போர் இறுதிக் கட்டத்தில் இருந்த போது ஆர்வக் கோளாறு காரணமாக, யுத்தத்தின் போக்கு மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இவை எது பற்றியும் புரிதல் இல்லாமல் திமுகவை திட்டிக் கொண்டு, புலிகளுக்கு ஆதரவாக ’பயங்கரமான’ வேலைகள் செய்வதாக நினைத்துக் கொண்டு, இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சில பயனற்ற போராட்டங்களின் பின்னணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன்.

அப்போது இயக்குனரும், மூத்த ஊடகவியலாளரும், ஈழத் தமிழ் ஆர்வலரும் எல்லாவற்றுக்கும் மேலாக பிழைக்கத் தெரியாத அப்பாவியுமான புகழேந்தி தங்கராஜ் அவர்களோடு இணைந்து நான் செயல் பட்டுக் கொண்டிருந்தேன்.

அது ஈழப் போருக்கு ஏதோ நம்மால் முடிந்ததை செய்கிறோம் என்ற எண்ணத்தை தந்ததே தவிர அவற்றால் யாருக்கும் எந்த பயனும் இல்லை!

அதாவது ஈழ விடுதலைக்காக ஓவியக் கண்காட்சி, போரை நிறுத்த நூறு கவிஞர்களை கவிதை படிக்க வைப்பது, அமெரிக்க தூதரகத்துக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு ரோஜாப்பூ தருவது. இவையெல்லாம் சென்னையில் புலிகளுக்கு ஆதரவாக நடந்த சில சில உருப்படாத போரட்டங்கள்!

ஈழ மண்ணில் இலங்கை ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகளை அள்ளி வீசி கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இங்கே .கவிதை படிப்பதும், பழ நெடுமாறன் தலைமையில் ரோஜாப்பூ கொடுப்பதும் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சென்னையில் ரோஜாப்பூ விலையேற்றத்துக்கு வேண்டுமானால் இது ஒரு காரணமாக இருக்கலாமே தவிர இதனால் எந்த பயனும் இல்லை.

மேலும் இவ்வித போராட்டங்கள் ஈழப் போரை பகடி செய்வது போலவே  இருந்தாலும் ஏதோ செய்கிறோம் என்ற அடிப்படையில் நானும் அறிவை மூடிக் கொண்டு இவைகளில் பங்கெடுத்து வந்தேன்.

உண்மையில் ராஜிவ் படுகொலைக்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் புலிகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்ட நிலையில் தம்பி தேவநேயன் ஏற்பாட்டில் 1999 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் நான் எழுதிய தேனிசை செல்லப்பா அவர்களைப் பற்றிய பேட்டிக் கட்டுரைதான் மீண்டும் படிப்படியாக தமிழ் ஊடகங்கள் புலிகளின் பக்கம் தங்கள் பார்வையை திருப்ப ஒரு காரணமாக இருந்தது.

அந்த கட்டுரையில் புலிகளின் தியாகம், பிரபாகரன் ஈழம் என பல விஷயங்கள் பகிரப்பட்டிருந்தன.

Flats in Trichy for Sale

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆனந்தவிகடனில் வெளியான புலிகளின் புகழ்பாடும் அந்த கட்டுரைக்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து பல கட்டுரைகளுக்கும் பேட்டிகளுக்கும் வழி வகுத்தது,

அதன்பின் மற்ற பத்திரிகைகளும் படிப்படியாக புலிகள் பற்றிய செய்திகளை வேளியிட ஆரம்பித்தன.

(அது எவ்வாறு விரிவடைந்தது தமிழ் ஊடக உலகில் நெருக்கடியான கால கட்டத்தில் புலிகளுக்கும் எனக்குமான தொடர்பு மற்றும் பங்களிப்பு பற்றி பின்னர் ஒரு விரிவான பதிவில் பார்க்கலாம்)

அப்படியாக ஒரு நாள் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் ZEE தமிழ் அலுவலகத்திற்கு வந்து  என்னிடம் , ‘செழியன் நாளை நூறு கல்லூரி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் சிறப்பு ரயிலில் போரை நிறுத்தக் கோரி நோட்டிஸ் கொடுத்தபடி வருகிறார்கள். நாளை காலையில் கவிஞர் காசி ஆனந்தன் நெல்லையில அவர்கள் பயணத்தை துவங்கி வைக்கிறாராம்.. சென்னை சென்ட்ரலில் அவர்களின் பயணம் முடிவடையும் போது நாம் சில அரசியல் பிரபலங்களை அங்கு அழைத்து செல்ல வேண்டும்.. மற்ற கட்சியிகளிலெல்லாம் நான் பேசி விட்டேன் வைகோட்ட ,மட்டும் நீங்க பேசி மதிமுக சார்பில் கே எஸ் ராதாகிருஷ்ணனை வரச் செய்திடுங்க..’ என்றார்.

அதாவது, நூறு கல்லூரி மாணவர்கள் நெல்லை ரயில் நிலையத்திலிருந்து காலையில் சென்னைக்கு கிளம்பும் ரயிலில் ஏறி, சக பயணிகளிடம் போரை நிறுத்தக் கோரி பிட் நோட்டிஸ்களை கொடுத்தபடியே வருவார்கள். அப்படியே இடையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நிற்கும் சில நிமிடங்களில் அங்கு பிளாட்பாரத்தில் நிற்பவர்களிடமும் போரை நிறுத்தக்கோரும்  நோட்டிஸ்களை கொடுத்துக் கொண்டே வருவார்களாம்.

(அதாவது ரயில் நிற்கும் போர் நிற்காது! இப்படியும் ஒரு போரட்டம்?)

அப்போது வைகோவிற்கு சனி கே எஸ் ராதாகிருஷ்ணன் ரூபத்தில் கூடவே இருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை!

’கே எஸ் ராதாகிருஷ்ணனை அழைக்க ஏன் வைகோவிடம் பேச வேண்டும்? ’

கே எஸ் ராதாகிருஷ்ணன் தினம் தோறும் தொடர்பில் இருப்பவர்தானே, அவரை நேரடியாகவே அழைத்து விடலாமே என்று கே எஸ் ராதா கிருஷணனுக்கு போன் போட்டேன்.!

போனை எடுத்த கே எஸ் ராதாகிருஷ்ணன்  என்ன என்று கேட்டார் ’அண்ணே நாளை மறுநாள் நூறு மாணவர்கள் பிரச்சார பயணம் வருகிறார்கள் மதிமுக சார்பில் நீங்கள் அவர்களை வரவேற்க வர வேண்டும்..’ என்றேன்.

’ஒரு நிமிஷம்..’ என்றவர், அருகே இருந்த யாரிடமோ ‘அருள் செழியன் பேசுறாரு உங்கட்ட பேசணுமாம்’ என்று சொல்லி விட்டு மீண்டும் என்னிடம் ’அருள் செழியன் இந்தா எம் பி பேசுறார்..’ என்று  அழைப்பை  வைகோவிடம் கொடுத்து விட்டார்,

’சொல்லுங்க அருள்..’ என்றார் வைகோ. நான் ‘அண்ணே நாளைக்கு நெல்லையிலிருந்து நூறு மாணவர்கள் பிரச்சார பயணம் வருகிறார்கள் மதிமுக சார்பில் அவர்களை வரவேற்க யாரவது ஒரு ஆளை அனுப்புங்கள்..’ என்றேன்.

வழக்கம்போல மீண்டும் உணர்ச்சிப் பிழம்பானார் வைகோ!

நான் சொன்ன எதையும் காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை.  ’வேறு ஆள் என்ன நானே வருகிறேன்..’ என்றவர்,  என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே உதவியாளர்கள் மூலம் திருநெல்வேலி நகரச் செயலாளர் மஜீஸ்,மாஹின், மஸ்தான் இப்படி ஏதோ ஒரு இஸ்லாமிய பெயருள்ள ஒரு நபருக்கு போனை போட்டு நூறு மாணவர்களுக்கும் காலை உணவு காபி டீ போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்து விட்டதோடு அவரிடம் என் தொலைபேசி எண்ணையும் லைவ்லேயே கொடுத்து விட்டார்.!

’அடடா தலைவன்னா இப்படியல்லவா இருக்க வேண்டும்..’ என நான் நெகிழ்ந்து போனேன்,

இடையில் என்னிடம் மதுரையில் மதிய உணவு ஏற்பாடு செய்கிறேன் என்றார். மதிய உணவை திருச்சியில் தோழர் சி மகேந்திரன் ஏற்பாடு செய்திருப்பதாக புகழேந்தியும் தோழர் மகேந்திரனும் இடைப்பட்ட நேரத்தில் சொல்லியிருந்தார்கள்.

ஆனாலும் மதிய உணவையும் நானே கொடுப்பேன் என்று அடம் பிடித்தார். தோழர் மகேந்திரன் ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டார் என்று சொன்ன பிறகே சற்று அமைதியானார்.

மறுநாள் வைகோ என்னை அழைத்து தன் கட்சி பொறுப்பாளர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து மாணவர்களை ரயில் நிலையத்தில் வழியனுப்பிவைத்து விட்டதாக தகவல் சொன்னதோடு தான் மாலையில் ரயில் வரும் வேளையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து விடுவதாகவும் கூறினார்.

மாலையில் நானும் புகழேந்தி தங்கராஜும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு போனோம்.

நாங்கள் போன சிறிது நேரத்திலேயே மதிமுக தொண்டர்கள் புடைசூழ ரயில் நிலையம் வந்தார் வைகோ.

மேலும் பல இயக்கத் தோழர்களும் மனித உரிமை அமைப்பினரும் அங்கு வந்திருந்தார்கள். வைகோவுடன் பேசிக் கொண்டிருந்தோம். அந்த ரயிலும் வந்தது.

ரயிலில் வரும் மாணவர்களை வரவேற்க தனக்கே உரித்தான மிடுக்கோடு பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்த வைகோவுடன் நானும் புகழேந்தியும் பேசியவாறு போய்க் கொண்டிருந்தோம்.

ரயிலில் வந்த மாணவ செலவங்களில் ஒருவன் வைகோவை பார்த்தும் ’வைகோவே வெளியேறு.. வைகோவே வெளியேறு’ எனக் கத்த, அதனைத் தொடர்ந்து அந்த ரயிலில் வந்த அத்தனை செல்வங்களும் ’வைகோ ஒழிக’ ’வெளியேறு வெளியேறு’ ’வைகோ வே வெளியேறு’ என கோஷம் போட. நிலை குலைந்து போன நான் தலையில் கை வைத்தபடி அங்கிருந்த ஒரு பெஞ்சில் மறைந்து உட்கார்ந்து விட்டேன்.

புகழேந்தி தங்கராஜ் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

முகம் கறுத்துப் போன வைகோ தூரத்தில் தன் கூட்டத்தோடு வெளியேறிக் கொண்டிருப்பதைப் இருட்டில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லோரும் போனபின் தனி மரமாக நின்ற நான் ஸ்டேஷனுக்கு வெளியே இன்னொரு மரமாக நின்று கொண்டிருந்த புகழேந்தி தங்கராஜை கண்டேன்.

அப்போது என் தொலைபேசி  அடித்தது, அடிபட்ட சிங்கமாக சினம் கொண்ட வைகோ சீறுகிறார்  எதிர் கொள்வோம் என நினைத்து போனை எடுத்தேன், அழைத்துக் கொண்டிருப்பவர் வைகோ அல்ல..

மாறாக வைகோவை இந்த முட்டுச் சந்தில் முந்திக் கொண்டு நிறுத்திய கே எஸ் ராதாகிருஷ்ணன்!

(நல்வாய்ப்பாக  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தப்பித்தார்! – பகுதி 2 தொடரும்)

 

– தாமஸ் அருள் செழியன் – மூத்த பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.