கலைமகள் சபா மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வந்தாச்சு குட் நியூஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Sri Kumaran Mini HAll Trichy

கலைமகள் சபா நிலமோசடி வழக்கில், தீர்வுக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு மகிழ்வை தரத்தக்க செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. கலைமகள் சபாவில் உறுப்பினர்களாக பதிவு செய்து, மாதாந்தோறும் தவணைத் தொகை கட்டியவர்கள் தங்களது முதலீட்டை திரும்பப்பெறுவது தொடர்பாக தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த விவகாரம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைமகள் சபா தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் கீழ் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், புது பள்ளிபாளையம் தெரு என்ற இடத்தில் 16/1984 என்ற எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சங்கத்தில் சுமார் 6,50,000 உறுப்பினர்கள் சாந்தாதாரர்களாக பதிவு செய்து உள்ளனர்.

கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் (பதிவு எண்.008/2003) என்ற சங்கத்தினர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு W.P.No.43650/2006ல் 01.11.2021 தேதிய தீர்ப்பாணையில் சங்க உறுப்பினர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகை வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டது. மேற்படி தீர்ப்பிற்கிணங்க 20.06.2024 முதல் பதிவுத்துறை தலைவர் அவர்கள் இச்சங்கத்தின் தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவுத்துறை தலைவர் தனி அலுவலராக நியமனம் செய்த பிறகு சங்கத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலைமகள் சபா சங்கத்தின் மூலமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு அந்த சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தும் ஒளிவருடல் (Scan) செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், சங்கத்தின் சார்பாக வாங்கப்பட்ட சொத்துக்களில் இதுவரை பட்டா மாறுதல் செய்யாமல் இருந்த இனங்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கலைமகள் சபா பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கலைமகள் சபா உறுப்பினர்களின் பெயர்கள், உறுப்பினர் எண், அவர்கள் செலுத்திய சந்தா தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 6,50,000 உறுப்பினர்களுடைய விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு அதற்காக தனியாக ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

கலைமகள் சபா உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் செலுத்திய சந்தா தொகை திரும்ப பெரும் வகையில் அவர்கள் (https://kalaimagalsabha.in) என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்தவுடன் அதை உறுதி செய்யும் விதமாக ஒரு குறுஞ்செய்தி (SMS) பெறப்படும். மேலும், அவர்களுடைய வங்கி கணக்கினை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த தகவல்கள் அனைத்தும் கலைமகள் சபா அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து தகவல்கள் சரிபார்க்கப்பட்டு செலுத்திய தொகை வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

கலைமகள் சபா
கலைமகள் சபா

Flats in Trichy for Sale

இதற்கென்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கலைமகள் சபா உறுப்பினராக பதிவு செய்து அவர்கள் செலுத்திய தொகையை எதிர்பார்க்கும் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய தொகை முழுவதும் திருப்பி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கலைமகள் சபாவினால் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் அரசு இணையதளம் (https://tntenders.gov.in) மூலம் ஏலம் விடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளும் தனியாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

எனவே, கலைமகள் சபா உறுப்பினர்கள் அனைவரும் (https://kalaimagalsabha.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு” அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை தலைவர் மற்றும் கலைமகள் சபா தனி அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.

மோசடியின் மற்றொரு பரிமாணம் !

கலைமகள் மோசடியில் மற்றொரு பக்கமும் இருக்கிறது. அது, கலைமகள் சபாவின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களை, அரசின் பதிவுகளை மோசடியான முறையில் மறைத்து, மறுவிற்பணை செய்யப்பட்டிருக்கும் விவகாரம். அதாவது, 80, 90 – களில் கலைமகள் சபாவுக்காக வாங்கப்பட்ட சொத்துக்கள் அப்போதைய நிலையில், பத்திரபதிவோடு சபாவின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்யப்படாத நிலையில் இருந்தது. கணிணிமயமாக்கப்படாத அந்த கால கட்டத்தில், வில்லங்கம் சரிபார்த்து சான்று வழங்கும் பொறுப்பில் இருந்த பதிவுத்துறை ஊழியர்களும், சார்பதிவாளர்களும், மாவட்டப் பதிவாளர்களும் புரோக்கர்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, கலைமகள் சபாவின் சொத்துக்களை மறுவிற்பணை செய்து பெரும் மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இதன்படி, தற்போதைய நிலையில் ஒரே புல எண் கொண்ட நிலத்துக்கு இரு வகையான பத்திரப்பதிவுகள் இருக்கின்றன. இரண்டுமே, சட்டப்படியான ஆவணங்கள். முதலில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், நில உரிமையாளர்களிடமிருந்து கலைமகள் சபா நேரடியாக கிரையம் செய்தவை. அடுத்த ஆவணங்கள், கலைமகள் சபாவுக்காக கிரையம் செய்தவர்கள் மீண்டும் மற்றவர்களுக்கு கைமாற்றிவிட்ட ஆவணங்கள். இரண்டாவது முறை பத்திரப்பதிவு செய்தவர்கள் அனைவரும் வில்லங்கப்பதிவை சரிபார்த்து, உரிய சான்றாவாணங்களின் அடிப்படையில்தான் நிலத்தை தங்களது பெயருக்கு கிரயம் செய்திருக்கிறார்கள். வருவாய்த்துறையிடமிருந்து மேற்படி நிலத்திற்குரிய சிட்டா – பட்டா ஆவணங்களையும் பெற்றிருக்கிறார்கள். தற்போது, இதுபோன்ற புல எண்களையெல்லாம் பட்டியலிட்டு, அவற்றை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி கலைமகள் சபாவின் பொறுப்பு அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சம்பந்தபட்ட நிலத்தின் மூல உரிமையாளர், புரோக்கர்கள், வில்லங்கச்சான்று சரிபார்த்து வழங்கும் பதிவுத்துறை ஊழியர்கள், சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் என அனைவரும் கூட்டுக்களவாணிகளாக இருந்து இந்த மோசடியை செய்திருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக்கொண்ட, சர்ச்சைக்குரிய  நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் செய்வதறியாது பரிதவித்துக் கிடக்கிறார்கள். இந்த மோசடி குறித்து, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கிரிமினல் குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இவர்களால், ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சட்டப்படியான தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே அவர்களது முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது.

கலைமகள் சபாவின் தனி அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். இந்த விவகாரத்தில் தலையிட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய வழிகாட்டுதல் பெற்று தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பாரா?

 

—       அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.