கலைமகள் சபா மோசடி ! வில்லங்கமாக்கிய பதிவுத்துறை அதிகாரிகள் !
தமிழகத்தில் நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடியைப்போலவே, கலைமகள் சபா நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அதன் 5,33,356 உறுப்பினர்களும் அவர்கள் கட்டிய பணத்துக்கு விடை தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். தற்போதைய நியோமேக்ஸ் நிறுவன மோசடியையொத்த மற்றும் ஒரு வகை மோசடிதான் கலைமகள் சபா மோசடி. நியோமேக்ஸ் போலவே, ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை வாங்கிப்போட்டு, அதனை பிளாட்டுகளாக மாற்றி அதன் உறுப்பினர்களுக்கு பதிவு செய்து தருவது என்பதுதான் கலைமகள் சபாவின் உத்தியாகவும் இருந்து வந்தது.

இன்னும் சொல்லப்போனால், நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடியின் தாய் கலைமகள் சபா என்றே சொல்லலாம். அரசு நியமித்த தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் கலைமகள் சபாவின் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வழக்குகளுக்கு மேல் வழக்கு என ஓயாத சட்டப்போராட்டம் தொடர்கிறது.
இந்த சூழலை பயன்படுத்தி, ஏற்கெனவே கலைமகள் சபாவிற்காக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை அந்நிறுவனத்திற்காக வாங்கிக் கொடுத்த புரோக்கர்களே ஒன்று சேர்ந்து பதிவுத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு மீண்டும் வேறொரு நபருக்கு விற்பணை செய்து பெரும் மோசடியையே அரங்கேற்றியிருக்கிறார்கள்.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் வேணுகோபால். குமாரபாளையத்தில் சொந்தமாக சிமெண்ட் ஆலையை நடத்தி வருபவர். திருச்சியில், சிமெண்ட் ஆலை நிறுவுவதற்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்ற கிராமத்தில் 71/2சி என்ற சர்வே எண் கொண்ட 1.37 ஏக்கர் நிலத்தை கடந்த 2015 இல் பெரம்பலூரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரிடம் வாங்கியிருக்கிறார்.
அந்த இடத்திற்கு அருகில் கல்குவாரிகள் செயல்படுவதால் சிமெண்ட் ஆலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில் ஆலைஅமைக்கும் திட்டத்தை கைவிடுகிறார். கையில் இருந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துவிட்டதால், நிலத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெறுகிறார். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் கடனை டாப்-அப் செய்ய முயற்சிக்க, வங்கி நிர்வாகம் நிலம் தொடர்பான ஆவணங்களை கேட்க, அப்போதுதான் அந்த இடமே பெரும் வில்லங்கத்தில் சிக்கியிருக்கும் விவகாரம் வேணுகோபாலுக்கு தெரிய வந்திருக்கிறது.

கலைமகள் சபா நிறுவன மோசடி விவகாரத்தில் தனி அலுவலரை நியமித்து, கலைமகள் சபாவின் சொத்து தொடர்பான விவரங்களை சேகரித்து அவற்றை அடையாளம் காண முற்பட்டபோதுதான் இந்த பெரும் மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
வேணுகோபாலுக்கு அந்த இடத்தை பதிவு செய்து கொடுத்த கல்யாண சுந்தரம் என்பவர், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக நெடுங்கூரை சேர்ந்த முருகேசன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த நிலத்தின் பூர்வீக உரிமையாளரான முருகேசனோ மேற்படி நிலத்தை செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலக ஆவண பதிவெண்கள் 1098/1993, 1163/1993, 1768/1994 இன்படி கலைமகள் சபாவிடம் விற்றிருக்கிறார். அதாவது, கலைமகள் சபாவிடம் விற்ற நிலத்தை அதன் பதிவுகளை மறைத்து, மோசடியான முறையில் கல்யாணசுந்தரத்திற்கு கைமாற்றி பின்னர் வேணுகோபால் தலையில் கட்டியிருக்கிறார்கள்.
கல்யாண சுந்தரம் எழுதி கொடுத்த ஆவணம்
கலைமகள் சபாவிற்காக நிலத்தை வாங்கிக் கொடுத்த பொன்னுசாமி என்ற புரோக்கர்தான், கலைமகள் சபா நிறுவனம் மீண்டும் தனது நிலத்தை உரிமை கோர ஒரு காலத்திலும் வரப்போவதில்லை என்ற அசட்டு துணிச்சலில், பதிவுத்துறை அதிகாரிகளை சரிகட்டி வில்லங்கத்தில் இந்த சர்வே எண்களை மோசடியான முறையில் நீக்கி வில்லங்க சான்று பெற்று பத்திரப்பதிவை செய்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் பணியாற்றிய இலால்குடி சார்பதிவாளர், செட்டிக்குளம் சார்பதிவாளர், அரியலூர் மாவட்டப் பதிவாளர் ஆகியோர் புரோக்கர்களுடன் இணைந்து இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முதல் முறையாக பதிவுசெய்யப்பட்ட ஆவணம் கலைமகள் சபாவினுடையது என்பதால், பதிவுத்துறை ஆவணப்படி அவர்களே முதல் உரிமையாளர்களாக தொடர்கிறார்கள். மேற்படி நிலம், வேணுகோபால் பெயரில் வங்கிக்கடனிலும் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், வேணுகோபால் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்து, அவரது புகாரின் பேரில் முருகேசன், அவரது மகன் வினோத், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக 99/24 என்ற முதல் தகவல் அறிக்கையும் பதிவான நிலையில், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகி கிடக்கிறது வழக்கு.

வேணுகோபால் ஒருவர் மாத்திரமல்ல, தமிழகம் முழுவதுமே கலைமகள் சபா தொடர்பான நிலங்கள் பெரும்பாலானவை இத்தகைய மோசடியில் சிக்கியிருக்கின்றன. இவற்றுக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலைய புகார்களும் நீதிமன்ற வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
ஒருபக்கம் கலைமகள் சபா உறுப்பினர்கள் தாங்கள் கட்டிய பணத்திற்கு விடை தெரியாமல் தவித்து நிற்கிறார்கள். மற்றொருபுறம், மோசடி நபர்களால் மோசடியான முறையில் விற்ற கலைமகள் சபாவின் இடங்களை வாங்கியவர்கள் அந்த இடத்திற்கான உரிமையை இழந்து நிற்கிறார்கள். எந்த ஒரு நிலத்தை வாங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா? என்று சரிபார்த்துதான் ஆவணப்பதிவையே மேற்கொள்வார்கள். ஆனால், இந்த விவகாரத்திலோ பதிவுத்துறை அதிகாரிகள் – ஊழியர்களே புரோக்கர்களுடன் கூட்டுக்களவாணிகளாக சேர்ந்து கொண்டு வில்லங்கப்பதிவையே வில்லங்கமாக்கியிருக்கிறார்கள்.
— மித்ரன்.