தலைமறைவாக இருந்த நியோமேக்ஸ் முக்கிய புள்ளி கமலக்கண்ணன் அதிரடியாக கைது !
நியோமேக்ஸ் முக்கிய புள்ளி கமலக்கண்ணன் கைது !
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 117 பேர் புகார் அளித்தன் பேரில் 752 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது..
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணை முடிந்த சைமன் ராஜா, கபில், இசக்கி, பத்மநாபன், சகாயராஜ், ஆகியோருக்கு நிபர்ந்தனையுடன் ஜாமீன் வழங்கி இருந்தது மதுரை உயர்நீதிமன்றம்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய நிர்வாகிகள் அடுத்தடுத்த ஜாமீன் பெற்று வருவது அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின்இயக்குநர்கள் சார்பில் வழக்கறிஞர், ஓய்வுபெற்ற நீதிபதியின் தலமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஆணையத்திடம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் சம்பந்தப்பட்ட அனைத்து பத்திரங்களையும் உடனடியாக ஒப்படைக்கத் தயார் என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர், STATE Public Prosecutor வரமுடியாத காரணத்தால் வழக்கு விசாரனையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கும் படி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரனையை வரும் 21/09/23-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 5000 கோடிக்கு மேல் நியோமேக்ஸ் பொதுமக்களிடம் வசூல் செய்து இருப்பதாகவும் நியோமேக்ஸால், ஏமாற்றப்பட்ட பொதுமக்களை புகார் கொடுக்க விடாமல் நியோமேக்ஸ் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்து வருவதாகவும் வந்த புகாரை அடுத்து நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு என்று தனி டி.எஸ்.பி மனிஷா அர்ஜீன் தலைமையான குழு முழுநேரமாக விசாரிக்க ஆரம்பித்தனர். தலைமறைவாக இருப்பவர்கள் பட்டியல் தயார் செய்து கொண்டு இருந்தனர்.
மோசடி நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சுருட்டியவர்கள், வெளியில் ஜாலியாக இருந்து கொண்டு அந்தப் பணத்தைத் தனிப்பட்ட முறையில் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், குறிப்பாக, திருச்சி, சென்னை, மதுரை, விருதுநகர், தேனி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில மருத்துவமனை, பெரிய ஹோட்டல்கள், பள்ளிகள், பார்சல் சார்வீஸ் லாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அவற்றைக் கையகப்படுத்த மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வேகம் காட்டாமல் இருப்பதாகவும் ஏமாந்த பொதுமக்கள் கொதித்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இவ்வளவு நாள் மதுரை குற்றப்பிரிவு போலிசுக்கு டிமிக்கு கொடுத்துக்கொண்டு இருந்த கமலக்கண்ணன் மற்றும் அவருடைய கூட்டாளியும் தம்பியுமான சிங்காரம் என இரண்டு பேர் இன்று 17.09.2023 சென்னையில் தலைமறைவாக இருந்த போது பொருளாதரா குற்றப்பிரிவு வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா , டி.எஸ்.பி மனிஷா அர்ஜீன் தலைமையிலான இன்ஸ் ராஜநளாயினி, சிறப்பு எஸ்.ஐக்கள ராமகிருஷ்ணன், மலர்விழி, கணேஷ்பாபு, தலைமை காவலர் கோபி ஆகியோர் தனிப்படைகுழு சுற்றி வலைத்து கைது செய்து உள்ளனர்.
ஆருத்தரா விட நியோமேக்ஸ் கோடி கோடியாக மக்களிடம் நிதி வாங்கி மோசடி செய்து உள்ளனர். இவர்களுக்கு பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அதிகாரமிக்க சிலருக்கு பொன் முட்டையிடும் வாத்தாக நியோமேக்ஸ் நிறுவன புள்ளிகள் பயன்பட்டு வருவதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
– ஷாகுல்