காங், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!
பல்வேறு கூட்டணிக் கணக்குகளை பரபரப்பாக விவாதிக்கும் ஊடகங்கள் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் சந்தித்த ஒரு சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டன. அது ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் கட்சியின் துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா தமிழக முதல்வர் எடப்பாடியை சந்தித்த நிகழ்வு.
தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை தேசிய அளவில் உருவாக்கும் பொருட்டு முக்கியப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசாவில் பிஜு ஜனதா தள், மேற்கு வங்கத்தில் மம்தா, உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவரது இந்த மூன்றாவது அணி முயற்சி தீவிரமாகியிருக்கிறது.
இந்த நிலையில் 23 ஆம் தேதி சந்திரசேகர் ராவ் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்கும் முன்பாகவே 21 ஆம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவரான தேபி பிரசாத் மிஸ்ரா 21 ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, “காங்கிரஸ், பாஜக அல்லது எந்த அணிக்கு சார்பாக நாம் நின்றாலும் இழப்பைத்தான் சந்திக்க நேரும். எனவே தேர்தலுக்கு முன் இவற்றில் யாரோடும் கூட்டணி வைக்காமல் மக்களை சந்திப்போம். தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 120 முதல் 150 இடங்கள் வரை பெற்றுவிட்டால் நமக்குதான் காங்கிரஸோ, பாஜகவோ ஆதரவு தரவேண்டிய சூழல் உருவாகும். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் பிஜு ஜனதா தள் துணைத் தலைவர்.
அப்போது தமிழக முதல்வர், “நாங்கள் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையே தனித்து சந்தித்து 37 இடங்களில் வென்றோம். அப்போது நாடு முழுதும் மோடி அலை வீசுகிறது என்ற நிலையில் கூட தமிழகத்தில் எங்கள் தலைவி தலைமையில் 37 இடங்களைப் பெற்றோம். இப்போது மோடியின் செல்வாக்கு குறைந்திருக்கும் நிலையில் நாங்கள் இதுபற்றி ஆலோசித்துவிட்டு உங்களுக்கு சொல்கிறோம்” என்று தெரிவித்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கே.சி.ஆர். முதலில் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தார். பின் சில தினங்களுக்கு முன் தேர்தல் வெற்றி பெற்ற நிலையில், ‘மாநிலக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தங்கள் செல்வாக்கைக் காட்ட வேண்டும்’ என்று கூறினார். இந்த நிலையில்தான் அதிமுகவுக்கு பிஜு ஜனதா தள் சார்பில் மூன்றாவது அணிக்கான அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அதிமுகவிடம் இருந்து வரக் கூடிய ரெஸ்பான்ஸை பொறுத்து, விரைவில் கேசிஆர் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்கலாம் என்கிறார்கள்.
ஏற்கனவே பாஜகவிடம் இருந்து தமிழக முதல்வர் ஒதுங்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சந்திப்பின் பின்னணியை உணர்ந்துதான் தனித்துப் போட்டி என்று தினகரனும் அறிவித்துள்ளார்.