”தலைவி வா ! தலைமை ஏற்க வா !!” கலக்கும் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் !!!
”தலைவி வா ! தலைமை ஏற்க வா !!” கலக்கும் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் !!!
ஜனவரி-05, கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, சென்னை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
“தலைவி வா தலைமை ஏற்க வா” , “தூத்துக்குடி மக்களைக் காத்த மாதரசியே “, ”திராவிட தீ”, ”பாராளுமன்றத்தை ஆளும் கலைஞரின் வாரிசு”, ”புறம் காத்தது போதும்… அகம் காக்க வா”, மழை வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டெடுத்த மக்களின் மகராசியே” என்பது போன்ற வாசகங்கள் அவரை வாழ்த்துவதாக மட்டுமல்லாது கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதாலேயே இவை பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.
கடந்த 2022, ஜனவரி-05 – இல், சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை எதிர்கொள்ளவிருந்த சூழலில், அறிவாலயம் முன்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ”அண்ணாவின் உணர்வு! கலைஞரின் பிறப்பு! தளபதியின் போர்வாள்” என்ற தலைப்பிலான அந்த சுவரொட்டியில், அவர் அமர்ந்திருக்கும் மேசையின் மேலே சென்னை மாநகராட்சி முத்திரை பதித்த துண்டு காகிதங்கள் இருப்பதை போன்று ”சென்னை மேயராக கனிமொழியை” அமரவைத்து அழகு பார்க்கும் வகையில் அமைந்திருந்தது அந்த சுவரொட்டி.
விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையிலும், செந்தில்பாலாஜி, பொன்முடி என சீனியர் அமைச்சர்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையிலும், கனிமொழிக்கு மாநில அரசியலில் அங்கம் வகிக்கும் வகையில் வாய்ப்புகள் வந்து சேராதா? என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன இந்த சுவரொட்டிகள்.
உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்; கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர்; துணைப் பொதுச்செயலாளர் ; மக்களவை உறுப்பினர் என்ற அடையாளங்களுக்கெல்லாம் அப்பால், கட்சியிலும் குறிப்பாக ஆளும் அரசில் மாநில அளவிலான பிரதிநிதித்துவமே அவரது ஆதரவாளர்களின் விருப்பம் என்பதன் வெளிப்பாடுதான் இந்த சுவரொட்டிகள் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.
“நான் கட்சிக்குத் தலைவர். குடும்பத்திற்கும் தலைவர் என்பதால் என்னை எல்லாரும் ”தலைவர்” என்றே அழைப்பார்கள். என் குடும்பத்தில் என் மகள் கனிமொழிக்கு மட்டும் தந்தை பெரியார்தான் தலைவர். நான் தலைவர் இல்லை” என்று கனிமொழியின் அரசியல் நிலை குறித்து பெருமிதம் பொங்க பேசியவர் கலைஞர்.
மக்களவை உறுப்பினராக திமுகவின் அரசியல் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைப்பதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர். தீவிர அரசியல் செயல்பாட்டில் இயங்கியபோதும், தன்னுடைய வேர் என கருதும் இலக்கியத்தை கனிமொழி என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. இன்றும் பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் அவரை காண இயலும். கலைஞரின் பிள்ளைகளில் கலைஞரைப் போன்று இதழியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தது, கவிதை நூல்களை வெளியிட்டு அறிவு தளத்தில் இயங்கியது கனிமொழி மட்டுமே என்பது தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
எம்.பி. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் அரசியல் சூழலில், கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகள் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
– டெல்டாகாரன்.