கரூர் அரசியலில் வளர்ந்துவரும் வாரிசு !
அதிமுகவின் கோட்டையாக இருந்த கரூர் மாவட்டம் செந்தில் பாலாஜி வருகைக்குப் பிறகு திமுகவின் ஆதிக்கம் நிறைந்து. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியின் கடுமையான உழைப்பு காரணம் என்பதால் திமுக தலைமையிடம் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு உயர்ந்தது. அதனால் கட்சியிலும் தவிர்க்க முடியாத சக்தியாக செந்தில் பாலாஜி மாறினார். மேலும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை வழங்கியது மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சி சொல்லும் அளவிற்கு இல்லை, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது. இது மட்டுமல்லாது பெருமளவில் கூட்டத்தைக் கூட கூட்ட முடியாத நிலையில் கோவை திமுக இருப்பதால் திமுகவின் மேலிடம் கோயமுத்தூருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜியை கோயமுத்தூருக்கு அனுப்பி வைத்தது திமுக தலைமை.
இப்படி கோயமுத்தூருக்கு சென்ற செந்தில் பாலாஜி அரசுப் பணிகளை மட்டுமல்லாது, கட்சியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். மேலும் அதிக அளவிலான கூட்டங்களை நடத்தி, மக்களை சந்தித்து, பிற கட்சியினரின் திமுக பக்கம் அழைத்து வந்து கோயமுத்தூர் மாவட்ட திமுகவில் சில மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு வரவைத்து கோயமுத்தூரில் கட்சி வளர்ந்து வருகிறது என்பதைத் தெரியப் படுத்தியிருக்கிறார்.
அதேநேரம் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர் பதவிகளையும் திமுகவே கைப்பற்ற வேண்டும் என்றும், மேயர் பதவியும் திமுக வசம் தான் இருக்க வேண்டும் என்றும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இப்படி செந்தில் பாலாஜி கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் கரூர் மாவட்ட கட்சியின் வளர்ச்சியில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது என்று எண்ணிய அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடன் பிறந்த தம்பி அசோக்குமாரை தீவிர அரசியல் பணியில் ஈடுபட செய்திருக்கிறார்.

அண்ணன் எப்படி கரூர் மாவட்டம் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தாரோ அதே போல தம்பியும் கரூர் மாவட்ட அரசியல் வலம் வரத் தொடங்கி இருக்கிறார். காட்சி நிகழ்ச்சிகளில் தலையைக் காட்ட தொடங்கியிருக்கும் அசோக்குமார், கட்சியினரை மட்டுமல்லாது அரசு அதிகாரிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். இதனால் அவருடைய அசைவின்றி கரூர் மாவட்டத்தில் எந்த வித நடவடிக்கையும் தற்போது நடைபெறுவதே இல்லை என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
அசோக்குமார் குறுகிய காலத்தில் பெரிதாக வளர்ந்து வருவது இத்தனை ஆண்டுகளாய் கட்சிக்காக உழைத்த எங்களின் உழைப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்று புலம்பத் தொடங்கி இருக்கின்றனர் கரூர் மாவட்டத்தின் மூத்த உடன் பிறப்புகள்.