கவிதை சொல்லவா!
கவியாட்டம்
திகட்ட… திகட்ட..
திட்டு திகட்டாமல்
திட்டித் தீர்த்து விடு …
திட்டிய பின் …
தீண்டி விடுமே காதல் …
-சிவக்குமார் வீராச்சாமி
வரிசை
வெகுநேரம்
காத்திருந்தாலும்
வரிசை வரிசையாக தான்
செல்கிறது இரயில் பெட்டி…
– இரா.கார்த்திக் கென்னடி
உடைந்த இதயம்..
இறுக்கத்தால்
உடைந்து சிதறிய
கண்ணாடித் துகள்கள்
ஒவ்வொன்றிலும்
உன் கோபத்தால்
அழித்துக் கிழித்து
எறிந்த எந்தன்
காதலின் பிம்பங்கள்
– நிவியா சிற்றரசு
யார் அழைத்தது…?
புல்நுனியில் பனித்துளியில்
காலைக் கதிரவன்சதிராட
தேரென நளின வண்ணங்களோடு
வானளித்த இதழொற்றை
மறைக்கிறது அவசரமென
யாரழைத்ததோ?
– பூங்கோதை கனகராஜன்
தமிழ்ப்பற்று!
கம்பன் படைத்த கவிக்கடலுள்
காதல் கொண்டு குளித்திடுவாய்!
செம்பொன் அழகை வடித்திடுவாய்!
செந்தேன் தமிழைக் குடித்திடுவாய்!
நம்பும் கருத்தைப் பற்றிடுவாய்!
நலமாய்ப் பலனைப் பெற்றிடுவாய்!
இம்மண் செழிக்கும் தமிழாட்சி
ஏத்திப் போற்றிப் பரப்பிடுவாய்!
பதில் தேவை
பனி விழும் மலர் வனம்
முனிவரும் விழும் களம்
தனி யொருவனும் மீளா வனம்
கனி விழும் காதல் மனம்
உன் பார்வை என்னுள்
மின்னலாக நுழைந்து
என் பார்வையை பறித்ததால்
உன்னிடம் அடைக்கலம் ஆனேன்
பனி விழும் மலர் வனத்தில்
தேன் மலராய் நீ நின்றால்
உண்ணாமல் போகுமா வண்டு
கண்ணில்லாதபோதும் காட்சி உன் மேலே
பெண்ணே இன்னும் ஏன் மௌனம்?
உன்மனதை திறந்து சொல் அது நீ
பூக்களை கொண்டு வந்தாலும் சரி
வாட்களை கொண்டு வந்தாலும் சரி பதில் தேவை
– சரஸ்வதி ராசேந்திரன்