அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு மனம் திறந்த கடிதம் ! காலம் மாறிவிட்டது அண்ணே!
அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு, இன்று காலை நேரடியாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
- இப்படி ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்துவிட்டு அது குறித்து நீங்கள் சட்டசபையிலும், நாங்கள் இணையதளத்திலும் விளக்கமெல்லாம் தரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். அது நாமாக தேடிக்கொண்ட அவலம்.
நமக்கு நம்மையும் ஆகச்சிறந்த இந்த பேருந்து நிலையத்தையும் விளம்பரப்படுத்தவே தெரியவில்லை. விளம்பரமே வேண்டாம், வசதிகளை அனுபவிக்கப் போகும் மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும் என்று கூட நீங்கள் நினைத்திருக்கலாம்.காலம் மாறிவிட்டது அண்ணே !கலைஞர் சென்னையில் உருவாக்கிய அண்ணா மேம்பாலம் கட்டப்பட்ட 1973ல், அது தான்…
♦.ஆசியாவின் முதல் Grade Separator என்றோ
♦ இந்தியாவின் நீண்ட மேம்பாலம் என்றோ,
♦ சென்னையின் முதல் மேம்பாலம் என்றோ, நான் தெரிந்துக்கொள்ள Wikipedia வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.இன்றும் இப்படி விலாவாரியாக அண்ணா மேம்பாலத்தின் முக்கியத்துவமும் பெருமையும் 95% திமுகவினருக்கே தெரியாது.
கலைஞரால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையமே கூட ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டதாலும், எம்ஜிஆர் பெயரால் அபகரிக்கப்பட்டதாலும் தான் திமுகவினர் முண்டாத்தட்டிக்கொண்டு கோயம்பேடு திமுகவின் சாதனை என்று சொன்னார்களே தவிர…அது கலைஞராலேயே திறக்கப்பட்டிருந்தால் திமுகவினர் அதன் அந்நாளைய அருமைபெருமைகளை கண்டுக்காமலேயே போயிருப்பார்கள். திமுகவும் அதை அமைதியாக கடந்திருக்கும்.
இன்று கிட்டத்தட்ட அதே மாதிரியான சூழலில் தான் கலைஞர் நூற்றாண்டு நிலையமும் சிக்கியிருப்பதாக நம்புகிறேன்.
YouTube உள்ளே சென்று கிளாம்பாக்கம் என்று தட்டச்சு செய்தாலே கொட்டும் வீடியோக்கள் எல்லாமே பெரும்பாலும் பொய்யானதும் எதிர்மறையானதும் தான். நேர்மறையானதே அல்ல.
Facebook, Instagram என்று எந்த சமூகவளைதளங்கள் உள்ளே சென்றாலும் இத்தனை வசதிகளுடன் கூடிய, ஒரு விமான நிலையத்துக்கு ஈடான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தின் வசதிகளை, பெருமைகளை, அடிப்படையான & முக்கியமான தகவல்களை தரும் வீடியோ ஒன்று கூட இல்லை. இருக்கிறது என்றால் அது போதுமான அளவு என்னளவில் கூட Reach ஆகவில்லை விளம்பரப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை
கலைஞர் டிவி
திமுக இணையதளப்பரிவு
திமுக ஐடி விங்
என்றெல்லாம் ஆட்சியிலும் கட்சியிலும் வைத்திருக்கிறோம்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லூர் ராஜூவையும் பேருந்து நிலையத்துக்கு வாங்க என்று நீங்கள் அழைத்தப் போது உங்கள் முகத்தில் தெரிந்த தன்னம்பிக்கை தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் கைகளிலும் மொபைல் வீடியோ வழியாக சென்று சேர வேண்டியது.
நீங்களே அந்த வீடியோவில் தோன்றினாலும் சரி, வேறு யாராவது ஒரு YouTube / Instagram Influencer தோன்றினாலும் சரி…ஏன்? நம்ம அமைச்சர் உதயநிதி தோன்றினாலும் சரி, ஒரு முழுமையான வீடியோ ஒன்றை உருவாக்கவும். அதை திரையரங்குகளிலும், டிவிக்களிலும் ஔிபரப்பவும்.
அது இப்பேருந்து நிலையத்துக்கு ஒரு வழிக்காட்டியாகவும், உங்களின், கட்சியின், ஆட்சியின், முதலமைச்சரின் செயல்திறனை மக்கள் அறிந்துக்கொள்ளும் திறவுகோலாகவும் இருக்க வேண்டும் என்று விழைகிறேன்.
வருகின்ற மார்ச் 1 முதலமைச்சரின் பிறந்தநாள் வருகிறது. அன்று இந்த வீடியோ வெளியானால் மகிழ்வேன்.
இவன்
அ.சிவகுமார்.