கொன்றைக்காடு கொண்டாடும் காலகம் கிராமத்து மாணவி !
“அஞ்சாவது வரைக்கும் ஏதாவது ஒரு பள்ளியில புள்ளைய படிக்க வச்சிட்டா, ஆறாவதுல நம்ம கொன்னகாட்டில சேத்துபுடலாம்” என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
கிராமங்கள் கடந்து பல பள்ளிகளைத் தாண்டி இப்பள்ளியை நோக்கியே நகர்கிறது பேருந்துகள்.
கொன்றைக்காட்டைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் மாணவர்களுக்குக் கல்விக்கோவிலாக திகழ்கிறது கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி.
தற்பொழுது காலகம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி கொண்டாடி வருகிறது.
காலகம், கொன்றைக்காடு என்பது பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சிறிய கிராமங்களின் பெயர்கள்.
காலகத்தைச் சேர்ந்த மதியழகன், விஜி இணையரின் மகள் ரோகிணிஸ்ரீ. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்.
பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும் தனியார் பள்ளிகள் ஆக்கிரமிக்க தொடங்கி விடுவார்கள்.

மேல்நிலைக் கல்வியையும் அரசு பள்ளியிலேயே படிப்பேன் என்ற நம்பிக்கையோடு பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தஞ்சாவூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11, 12 வகுப்புகளை தொடர்ந்தார்.
உயர் கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளோடு செயல்படுகிறது தஞ்சாவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.
இங்கு வழங்கிய நீட் தேர்வுக்கான பயிற்சியில் 371 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாலும் அரசு கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இன்னும் ஓராண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி நிறைவுக்கு பின் நீட் தேர்வில் 515 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்பொழுது அரசு கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.
“மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்” மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக் கல்லூரி. காலகம் என்ற சிறிய கிராமத்தில் பயின்ற ரோகிணிஸ்ரீ-க்கு அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது.
உயர் கல்விக்கு அடித்தளம் போட்ட கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவி ரோகிணிஸ்ரீ-யை நினைத்து பெருமை கொள்கின்றனர்.
“அப்பா விவசாயி, அம்மா இல்லத்தரசி. அப்பா பத்தாவது படிச்சிருக்காரு, அம்மா, எம் எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்காங்க. என்னைய நல்லா படிக்க வைக்கணும்னு ரெண்டு பேரும் ரொம்ப ஆசைப்பட்டாங்க. இப்ப நான் டாக்டர் ஆக போறேன்” சொற்களில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வழிகிறது.
வாழ்த்துக்கள் ரோகிணி உங்கள் மருத்துவக் கல்விப் பயணம் தொடரட்டும்.
உங்களை உயர்த்திய அரசுப் பள்ளிகளையும், உங்கள் பெற்றோர்களைப் போன்ற ஊரகப் பகுதி மக்களையும் எந்த உயரத்திற்குச் சென்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பின்னால் நம்பிக்கை கொண்ட மாணவர்கள் நடந்து வருவார்கள். மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.
வாழ்த்துகளுடன்…
ஆசிரியர், மெய்ச்சுடர்