இந்திக்கு எதிராக தமிழ் சினிமாவில் ஒலித்த முதல் குரல்! –‘கொ.மோ.கொ.கா.’
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் பேனரில் ‘MY INDIA’ மாணிக்கத்தின் முதல் தயாரிப்பு ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’.
‘உன்னை நான் சந்தித்தேன்’,’உதயகீதம்’ ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற சில்வர் ஜூப்ளி படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் , கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா, இரண்டாவது நாயகனாக பரதன், இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல், மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் மாணிக்கமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வசனம்: பி.என்.சி. கிருஷ்ணா
ஒளிப்பதிவு :தாமோதரன்,
இசை : ஆர்கே.சுந்தர்,
எடிட்டிங்: கே.கே,
பாடல்கள்: காதல் மதி,
கலை: விஜய் ஆனந்த்,
நடனம் : சந்துரு
ஸ்டண்ட் : ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ்: தேனி சீனு
பி.ஆர்.ஓ: மணவை புவன்
வரும் மார்ச் 14-ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதையொட்டி டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 24- மாலை நடந்தது. இதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, வினியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் கே.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய சிலர்….
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குனர் கே.ரங்கராஜ்…
“வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் இருவேறு கோணங்களில் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக உண்மையான கிளைடர் ரக விமானத்தைபயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்தக் காட்சிகள் பார்க்க மிகவும் பிரம்மாண்டாமாக இருக்கும்.
அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்”.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார்
“முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர். அப்போதே ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசை. ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் ரங்கராஜ் சார் படு பயங்கர கண்டிப்பானவர்.அவரிடம் தான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல அற்புதமான படங்களை உருவாக்கியவர். அவர் மீண்டும் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி. அவர் மாணவன் நான். நிறைய நடிகர்களை இணைத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும்”. நடிகை சச்சு
“இங்கு எல்லோரும் எனக்கு ஜூனியர்கள் தான்.70 வருட சீனியர் நான். சினிமா தான் என் குடும்பம். ரங்கராஜ் சாரின் நெஞ்சமெல்லாம் நீயே படத்தை மறக்க முடியாது. என்னை இந்த படத்திற்கு ஞாபகம் வைத்து அழைத்ததற்கு மகிழ்ச்சியும் நன்றியும். இந்த மாதிரி படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்கள் வர வேண்டும். நான் பூஜிதா பாட்டியாக நடித்துள்ளேன். படம் அழகாக வந்துள்ளது. படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்”.
கே.ராஜன்
“இயக்குநர் ரங்கராஜ் சார் மிக அற்புதமான இயக்குநர். பல அருமையான படங்களை தந்தவர். மிக அழகான தமிழில் தலைப்பு வைத்து படமெடுக்கக் கூடியவர். அவரது இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படங்கள் தான் இப்ப வருது. கலாச்சாரத்தை நல்லபடியாக காட்டும் இந்தப் படம் வெற்றி பெறட்டும்”.
இசையமைப்பாளர் ஆர். கே.சுந்தர்
கே.ரங்கராஜ் சாரின் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் தாமோதரன் தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. வெட்டு, குத்து ரத்தம் இல்லாமல் பாணியில் மிக அழகான படத்தை தந்துள்ளார் டைரக்டர்.படம் மிக நன்றாக வந்துள்ளது”.
ஹீரோயின் பூஜிதா பொன்னாடா
“இது என் முதல் தமிழ் மேடை. பல திரைப் பிரபலங்களுடன் இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப்படம் மிக மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக கண்டிப்பாக இருப்பார். ஆனால் அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்”.
ஹீரோ ஸ்ரீகாந்த்
“திரையுலகில் 25 வருடம் நிறைவு செய்துள்ளேன். எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. ஷுட்ங்கில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார் ரங்கராஜ் சார்.அவர் படைப்பில் நான் இருந்தது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப் படுகிறேன். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள். ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா. எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை. நீங்கள் தந்து வரும் அன்புக்கு நன்றி”.
ஆர். கே. செல்வமணி
“இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார் தான். 35 வருட பழக்கம் அவர். கண்டிப்பானவர் என்கிறார்கள்.ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்துப் பேசுவார். மிக அமைதியான மனிதர். பாடல்கள் பார்த்தேன் கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார். கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள்.பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும். ரங்கராஜ் சாரின் திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும்.

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் எடுக்கிறார்கள் . பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள்.
ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள். அதில் நமக்கு லாபம் இல்லை. இப்போது தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
— மதுரை மாறன்.