நம்ம ஊரு கிட்டிப் புல்லு விளையாட்டைப் பாத்து காப்பி அடிச்சிட்டான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (12)
“என்ன பெரிய கிரிக்கெட்டு.. நம்ம ஊரு கிட்டிப் புல்லு விளையாட்டைப் பாத்து வெள்ளைக்காரன் காப்பி அடிச்சிட்டான்”
“கிட்டிப்புல்லுன்னா, கில்லி தாண்டு விளையாட்டை சொல்லுறியா?”
“ஆமா.. எங்க ஊருல இப்படி சொல்லுவோம். உங்க ஊருல அப்படி சொல்லுவீங்க. வெள்ளக்காரன் அதோட பேரையும் ஆட்டத்தையும் மாத்தி, கிரிக்கெட்டுன்னு சொல்லிப்புட்டான்.”
“நம்ம பசங்களும் இதை விட்டுட்டு, அதைப் புடிச்சிக்கிட்டு தொங்குறானுங்க. டி.வி.யில கிரிக்கெட்டு, தெருவுல கிரிக்கெட்டு, பள்ளிக்கூடத்துல கிரிக்கெட்டு, மொட்டை மாடியில கிரிக்கெட்டுன்னு அலையுறானுங்க”
ஊர் பெருசுகள் இப்படி சலித்துக் கொள்வது உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித விளையாட்டு இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டு மற்றொரு ஊரில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
கோலி (பளிங்கு) விளையாடும்போது, குறிப்பிட்டுக் காட்டப்படும் கோலியை சரியாக குறி பார்த்து அடிக்க வேண்டும். சரியாக அடித்தால் 50 ரூபாய் கிடைக்கும். தவறாகிவிட்டால் 50 ரூபாய் தர வேண்டும். சிறுவர்களின் விளையாட்டில் பணம் என்பது சிகரெட் அட்டைதான். ஒவ்வொரு பிராண்டு சிகரெட் அட்டைக்கும் ஒரு மதிப்பு உண்டு. உதாரணமாக, சிசர்ஸ் சிகரெட் அட்டை பெரும்பாலான இடங்களில் 50 ரூபாயாக மதிக்கப்படும். அப்போது பிரபலமாக இருந்த சிசர்ஸ், வில்ஸ், சார்மினார், கோல்டு ஃப்ளேக், பனாமா, பாசிங் ஷோ சிகரெட் அட்டைகளைக் கத்தையாக வைத்துக் கொண்டு சிறுவர்கள் விளையாடுவார்கள். இதில் பாசிங் ஷோ சிகரெட் அட்டை ஒரு இடத்தில் 20 ரூபாயாகவும், இன்னொரு இடத்தில் 200 ரூபாயாகவும் இருக்கும். 20 ரூபாய் மதிப்பு உள்ள இடத்தில் விளையாடுபவன், அதை 200 ரூபாய் மதிப்புள்ள இடத்திற்கு கொண்டு சென்று 4 சிசர் அட்டைகளாக (50 ரூபாய்) சில்லறை மாற்றி வாங்கிவந்து, தன்னுடைய இடத்தில் விளையாடுவான். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அவனுக்கு கூடுதல் ஆட்டங்கள் விளையாட கைகொடுக்கும். சிறுவர்களின் இந்த திறமையை பெரியவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
இங்கிலாந்தில் பந்துகளை உருட்டி விளையாடும் ஆட்டம் ஒன்று உண்டு. பவுல்ஸ் என்று பெயர். ஒரு பந்தை உருட்டி எதிரில் உள்ள பந்துகளை சரியாக அடிக்க வேண்டும். பின்னர் ஸ்நோ பவுலிங் போன்ற விளையாட்டுகள் இதனடிப்படையில்தான் உருவாகின. பந்தை உருட்டி விளையாடுவதில் சலிப்படைந்த சிறுவர்கள் சிலர், ஆட்டத்தில் கொஞ்சம் மாற்றம் செய்தனர். பந்தால் பந்தை அடிப்பதற்குப் பதில், உருட்டிவிடும் பந்தை ஒரு மரக் குச்சியைக் கொண்டு தடுத்து விளையாடுவது என்பதுதான் புதிய ஆட்டம்.
தடுத்து ஆடுவது என்பது அடித்து ஆடுவதாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆட்டத்தையும், செம்மறி ஆடுகள் மேய்க்கப்படும் புல்வெளிக்கு கொண்டு போகிறார்கள். ஆட்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒவ்வொருவரும் விளையாட நேரம் வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொருவராக அவுட் ஆகும் விக்கெட் என்கிற முறை புகுந்தது. செம்மறியாட்டுக் கம்பளியால் செய்யப்பட்ட பந்துகளைப் பயன்படுத்தி விளையாடினார்கள்.
சிறுவர்கள் விளையாடுவதை அரண்மனை கவனித்தது. இளவரசர் இரண்டாவது எட்வர்டும் அவருடைய அரண்மனைக் கூட்டாளிகளும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டினர். அரண்மனைக்காரர்கள் பங்கெடுக்கத் தொடங்கினால் தகரமும் தங்கமாகும். குச்சியை வைத்து விளையாடும் ஆட்டம், பேட்-பால்-ஸ்டம்ப்புடனான கிரிக்கெட் ஆட்டமாக வளர்ந்தது. ராஜ குடும்பத்தினருடன் ஆடக்கூடியவர்கள் குறைந்தபட்சம் பிரபுக்களாக இருக்கவேண்டும். சிறுவர்கள் ஆடத்தொடங்கிய விளையாட்டு, இங்கிலாந்து நாட்டு சீமான்களின் ஆட்டமாக மாறியது.
13 – ஆம் நூற்றாண்டிலிருந்த பவுல்ஸ் 18 – ஆம் நூற்றாண்டில் கிரிக்கெட் என்ற முழுமையான வடிவத்திற்கு வந்தது. விளையாடும் போது ஏற்படக்கூடிய குழப்பங்கள், அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் போட்டிக்கான விதிகள், உபகரணங்கள், உடைகள் உருவாக்கப்பட்டன. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிக்கெட்டின் அடிப்படை விதிகள் ஏறத்தாழ உருவாகிவிட்டன.

இளம் வெயில் வீசும் பருவத்தில், குளிர்காய்வதற்கு ஏற்ற வகையில் பகல் முழுவதும் ஆடும் ஆட்டமாக கிரிக்கெட் இருந்ததால், இங்கிலாந்து பிரபுக்கள் இந்த விளையாட்டை விரும்பினர். நாள் முழுவதும் விளையாடிவிட்டு வெறும் கையுடன் வீட்டுக்குப் போவதில் உற்சாகமில்லை. ஆட்டமும் விறுவிறுப்பாக இல்லை. அதனால், ‘பெட்’ கட்டி விளையாட ஆரம்பித்தார்கள். எந்த அணி ஜெயிக்கும் என்று பெவிலினியிலிருந்தபடியே பெட் கட்டிய பிரபுக்களும் உண்டு.
நேற்றைய கிரிக்கெட் பெட்டிங்கில் இந்த பிரபு இவ்வளவு தொகையை வென்றார் என்பது மறுநாள் பத்திரிகை செய்தியாக வெளியானது. பெட்டிங் கட்டி விளையாடுவதற்காகவே புதுப்புது டீம்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.
ப்ளேயர்கள் குதிரை. மேட்ச் என்பது ரேஸ்.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.