பொய் வழக்கு போடுவோம் என போலீஸார் மிரட்டியதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
பொய் வழக்கு போடுவோம் என
போலீஸார் மிரட்டியதால்
கலெக்டர் அலுவலகத்தில்
தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
தான் கொடுத்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், பொய் வழக்கு போட்டு கைது செய்வோம் என போலீஸார் மிரட்டியதால் மனமுடைந்த கூலித் தொழிலாளி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலித் தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகளையும் அழைத்துச் சென்றுவிட்டார்.
மனைவி மற்றும் மகளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக தனது மாமனார் வீட்டுக்கு மேகராஜ் சென்றுள்ளார். அப்போது மேகராஜை அவரது மாமனார் மற்றும் உறவினர்கள் தாக்கி, அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அவர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், அவர் மனு மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன், அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
தனது மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத நிலையில், போலீஸாரும் மிரட்டியதால் மனமுடைந்த மேகராஜ் இன்று காலை தனது தாயாருடன் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
கலெக்டரின் கார் நிற்கும் பகுதி அருகே வந்தவுடன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை வெளியே எடுத்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார் மேகராஜ்.
அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வல்லம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் துரிதமாக செயல்பட்டு மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை தீக்குளிக்க முடியாமல் தடுத்து நிறுத்தியதுடன், அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக நாச்சியார்கோவில் போலீஸார் மிரட்டியதால் தனது பிரச்சினையை கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தீக்குளிக்க முயன்றதாக மேகராஜ் தெரிவித்தார்.