அங்குசம் பார்வையில் ‘லால் சலாம் ‘எப்படி இருக்கு !
தயாரிப்பு: லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன். தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். லைக்கா ஹெட்: ஜி.கே.எம்.தமிழ்க்குமரன். டைரக்டர்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கதை -வசனம்: விஷ்ணு ரெங்கசாமி ஆர்ட்டிஸ்ட்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபில்தேவ் ( சிறப்புத் தோற்றம்) விஷ்ணு விஷால், விக்ராந்த், அனந்திகா சனில்குமார், நிரோஷா, ஜீவிதா, தங்கதுரை, விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன் இசை: ஏ.ஆர்ரகுமான்ஒளிப்பதிவு: விஷ்ணு ரெங்கசாமி, எடிட்டிங்: பிரவீன் பாஸ்கர், ஸ்டண்ட் ரைக்டர்ஸ்: அனல் அரசு, விக்கி. பிஆர்ஓ: ரியாஸ் அஹமது.
வடமாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மூரார்பாத் என்ற கிராமம். அங்கே மொய்தீன் பாய்( சூப்பர் ஸ்டார் ரஜினி) மாணிக்கம் ( லிவிங்ஸ்டன்)இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேபோல் தான் அங்கிருக்கும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் உறவுக்காரர்கள் போல நெருக்கமாக பழகுபவர்கள். தன்னுடைய மகன் சம்சுதீன் ( விக்ராந்த்) மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் மொய்தீன் பாய், மாணிக்கத்தின் மகன் திருநாவுக்கரசு ( விஷ்ணு விஷால்) மீதும் அதே அளவு பாசம் வைத்துள்ளார்.
நல்ல கல்வி கிடைக்க தனது மகன் சம்சுதீனையும் மாணிக்கம் மகன் திருவையும் வெளியூருக்கு அனுப்புகிறார் மொய்தீன் பாய். ஆனால் வெளியூர் போக விரும்பாத திரு, பாய் மீதும் சம்சுதீன் மீதும் கடும் வெறுப்பில் இருக்கிறார். இந்த வெறுப்பு பள்ளியில் படிக்கும் போது தீவிரமாகி, இருவருக்கும் இடையே மண்டை உடைப்பு அளவுக்கு சண்டையில் முடிகிறது. இதுவே பகை நெருப்பாக எரிகிறது. இளைஞர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. அந்த ஊரில் இருக்கும் கிரிக்கெட் டீமில் இருவரும் எதிரெதிர் அணியில் இருந்து மோதுகிறார்கள். தொழில் விசயமாக பம்பாய்க்கு( 1993-ல் கதை நடக்குது) குடிபெயர்கிறார் மொய்தீன் பாய். தனது மகன் சம்சுதீனை பெரிய கிரிக்கெட் வீரராக்கி இந்திய அணியில் இடம் பிடிக்க ஊக்குவிக்கிறார்.இதற்காககிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் பயிற்சி கொடுக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது.
மூரார்பாத்தில் ஓட்டுக்களை வாங்க மதநல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் வேலையில் இறங்குகிறார் எம்.எல்.ஏ.போஸ்டர் அன்புவின் மச்சான் விவேக் பிரசன்னா. கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து, திருவை எதிர்த்து விளையாட பம்பாயிலிருந்து சம்சுதீனை வரவைக்கிறார்கள் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விளையாட்டு விபரீத கலவரமாகிறது. சம்சுதீன் கையை வெட்டி விடுகிறார் திரு. இதனால் ஊருக்குள் மதக்கலவரம் தீவைப்பு, மதவெறுப்பு அரசியல் வேரூன்றுகிறது. க்ளைமாக்ஸ் என்ன, எதை வலுவாக வலியுறுத்துகிறது? இதான் ‘லால் சலாம் ‘. இந்தியா இப்போதிருக்கும் பேராபத்து சூழலில் விஷ்ணு ரெங்கசாமி யின் இந்த கதையை உள்வாங்கிக் கொண்டு அதை உணர்வுப்பூர்வமான சினிமாவாக பதிவு செய்தமைக்காகவே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கரம் கூப்பி வணங்கி வாழ்த்து சொல்லலாம்.
அதிலும் தேர் சம்பந்தப்பட்ட க்ளைமாக்ஸ் இருக்கே… இதான்டா தமிழ்நாடு என சங்கிகளுக்கு சாவுமணி அடிக்கிறது. சிறப்புத் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மதவெறியின் மண்டையைப் பிளந்திருக்கிறார். இதுவே பெரும் சிறப்பு. அவ்வப்போது அவரது சொந்தக் கருத்தும் குரலும் எப்படி ஒலித்தாலும் மனிதம் காப்போம் என்பதை இந்த சினிமாவில் அழுத்தமாக பதிவு செய்து மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் சூப்பர் ஸ்டார். இனிமேல் அவரே நினைத்தாலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து அவரால் விலக முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட சினிமா வரும், அதுவும் ரஜினியிடமிருந்து வரும் என சங்கிக் கூட்டம் எதிர்பார்த்திருக்காது. இது நிலைத்திருப்பதும் நீர்த்துப் போவதும் அடுத்தடுத்து ஒலிக்கப் போகும்ரஜினியின் குரலில் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. .
-மதுரை மாறன் .