வாசிப்பை வழக்கமாக்கினால் வாழ்க்கை வசமாகும் – செயின்ட் ஜோசப் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்
வாசிப்பை வழக்கமாக்கினால் வாழ்க்கை வசமாகும் – திருச்சி புனித சிலுவைக் கல்லூரி தமிழாய்வுத்துறை இலக்கியப் பேரவை நிகழ்வில் முனைவர் ஜா.சலேத் பேச்சு
திருச்சி புனித சிலுவைக் கல்லூரி தமிழாய்வுத்துறையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பேரவை செயல்பட்டு வருகிறது. பேரவையின் செயல்பாடாக “வாசிப்பால் அறிவை நிறைவு செய்வோம்!” என்கிற பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் எழுத்தாளர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார். வாசிப்பு பழக்கம் இளைஞர்களின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்றாக உறுதி எடுப்பதற்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் தம் உரையை தொடங்கியவர், உலகைக் குலுக்கிய ஐந்து நூல்களின் வரலாறுகளைக் கூறி, பேரறிஞர் அண்ணா, பகத்சிங், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சார்லி சாப்ளின் போன்ற ஆளுமைகளின் வாழ்வில் வாசிப்பால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்ளிட்டுப் பேசினார்.
அஃறிணை ஒவ்வொன்றும் வாழ்க்கையை தொடங்குகிறது. அனுபவங்களும் சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நூல்களாகத் தொகுத்து வைத்திருக்கிற மனித சமுதாயம் தான் வாழ்க்கையை தொடர்கிறது. நாம் வாழ்க்கையை தொடர்வதற்கு காரணமாக அமைவது நம்மிடம் இருக்கிற நூல்களே எனக் குறிப்பிட்டு, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் வீட்டு நூலகத்தின் அவசியம் குறித்து பெற்றுக் கொண்ட உறுதிமொழியைப் பதிவு செய்து தம் உரையை நிறைவு செய்தானர்.
தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சு.அனுலெட்சுமி வரவேற்புரையாற்றினார் நிறைவில் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா.அரும்பு நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை முதுகலை மாணவிகளான அருள்சகோதரிகள் நிர்மலா, சகாயராணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஜெசிந்தாராணி உள்ளிட்ட தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், இளங்கலைத் தமிழ் இலக்கியம் மற்றும் கணினித்துறை மாணவிகள், முதுகலை மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்று பயன் பெற்றனர்.
– அனிட்டா