வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் !
திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தலைமையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.
தேசிய அளவில் ஊழலை ஒழிக்க தேசிய அளவில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்பட வேண்டும் என 1967 ஆம் ஆண்டு முதலாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதம அமைச்சர் மத்திய அமைச்சர்கள் மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அமைப்பாக லோக்பால் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கிறது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் இல்லாமல் உள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழல் புகார்களை எவ்வாறு தாக்கல் செய்வது என்ற விவரங்களை மக்களுக்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஜனநாயகத்தில் உச்ச அதிகாரமான வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலக அரசியல் போக்குகளையும் வாக்கு மட்டுமே தீர்மானிக்கிறது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது, ஜனநாயகம் தொடங்குகிறது. ஜனநாயகத்தின் மூன்று அம்சங்களான வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழல் தொடங்கினால், ஊழல் இல்லாத ஜனநாயக ஆட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்பு (shared responsibility) குடிமக்களுக்கு உள்ளது என்றார் ராமராஜ்.
வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். மக்களுக்கு நலன் வழங்கும் மக்களாட்சி உருவாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய வாக்காளர்கள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தையும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களையும் (Election Tribunals) அமைக்கலாம். தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அரசியலமைப்பு அந்தஸ்தை வாக்காளர் ஆணையத்துக்கும் தேர்தல் தீர்ப்பாயங்களுக்கும் வழங்கலாம். இதற்கான அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் அவசியமானது என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.
பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது. இந்தக் தேர்வு குழு மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நியாயமான திறமையான நபர்களை தேர்தல் ஆணையராக நியமிக்குமாறு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம். இரு தரப்பு வாதங்களைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தேர்தல் ஆணையர்களை இறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தற்போதைய அரசியலுக்கு உகந்ததாகும் என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.
லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மாநில அளவிலான உயர் அமைப்பு லோக் ஆயுக்தா ஆகும். அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளில் சமரசம் பேசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்பு லோக் அதாலத் ஆகும்.
இந்த கருத்தரங்கில் நீதிபதிகளும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் முன்னதாக வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முத்துமாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.