யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் – 2
யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் – 2
இந்தியாவில் யானை அழிவின் விளம்பில் உள்ள உயிரினம். தமிழ்நாட்டில் வெறும் 2961 யானைகள் மட்டுமே உள்ளதாக கடைசியாக எடுத்த கணக்கெடுப்பில் உள்ளது. ஒவ்வொரு வருடம் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கண் முன்னே இறந்து போகிறது. இனி வரும் காலங்களில் நம் பிள்ளைகளுக்கு யானைகளை எப்படி காட்டப்போகிறோம்?
ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவை போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தை காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா.
ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும் இயற்கையை காக்கவும் உதவி புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாக கட்ட மைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்தக் கட்டமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது.
யானைகளை பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இந்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா?
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப் பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது.
இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.
(தடங்கள் தொடரும்)
-ஆற்றல் ப்ரவின் குமார்
(யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்)
முந்தைய தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்…
வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் ! புதிய தொடர் ஆரம்பம் !
[…] யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு… […]