களமாறிய காதல்..

களமாறிய காதல்..

போர்களத்திற்கு
நேரெதிரில் நின்ற காதலை
சாதிகள் சமரசத்திற்கு
அழைக்கும்
ரத்தம் தோய்த்தெடுத்த
மலர்செண்டுகளோடு..

பாறைகளில்
கடும் பாதைகளில்
நெருஞ்சி முட்களின் நடுவில்
சிறு தும்பைப் பூவைக் கூட
தூக்கிலிடும்
உங்க வறட்டு சாதிக் கயிறுகள்..

மென்தோல் போர்த்திய
சாதிப் புலிகளை
அடையாளம் தெரியாமல்
சிறு குட்டிகளும்
சிக்கிக்கொள்வதை இனி
பொறுப்பதில்லை நாங்கள்..

மன்னர் பரம்பரையென
மார்தட்டிக்கொண்டே
உங்கள் மகுடங்களில்
பதித்துக்கொள்ளும்
எங்கள் முதுகெலும்புகளை
தகர்த்தெறிவோம்..வண்ணத்துப்பூச்சிகளை
வேட்டையாடும்
உங்கள் சாதி அம்புகளை
எங்கள் தமிழனின் மரபு
வில்லேற்றாது விலங்கொடிக்கும் ..

ஆதியில்
வந்த காதலின் ஆணிவேர்களை
அழிக்க நினைப்பவர்களுக்கு
நீரூற்றி வளர்க்கும்
எங்கள் பிள்ளைகளின்
சமத்துவக்காதல்..

இரும்பைக் கண்டுபிடித்த
இறுமாப்பில்
கொலைக்கருவி செய்த
சாதிப்பட்டறைகளில் இனி
பிள்ளைகளின் கழுத்துக்கு
சமத்துவச் சங்கிலி செய்யப்படும்..

இடையில் வந்த ஆரியம்
கூறுபோட்ட காரியமென
மறைந்த மரபை
காதல் சிறகை
பூட்டிக்கொள்ளத் தயாராகிவிட்டது
எங்கள் பிள்ளைகளின் தோள்கள்..

காதலென்பது,
உறுதியான நம்பிக்கை..
நம்பிக்கையில் வரும் உறுதி.
முகம்மது அனஸ் எனும் பறவை
லில்லி ஸ்நேகா எனும்
கிளையில் அமரட்டும்..

இரு மனங்களுக்கு இடையில்
மதங்கள் மண்டியிடட்டும்..
அன்பைத்தவிர
வேறொன்றும் வேண்டுதலில்லை என
வாழ்ந்து காட்டட்டும்

என் பிள்ளைகளின் மணவாழ்வு சிறக்கட்டும் – அதில்
சமத்துவமும் சாதிமறுப்பும்
இரு கண்களாகட்டும்.

அம்மாவின் அன்பு வாழ்த்துகள்💐💐

—  பா.மகாலட்சுமி

Comments are closed, but trackbacks and pingbacks are open.