மின்வாரியத்தின் அலட்சியத்தால் அடுத்தடுத்து பலியாகும் வாயில்லா ஜீவன்கள் !
மதுரையில் தாழ்வாக நடப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்து பசுமாடு, கன்று குட்டி, நாய், கீரிப்பிள்ளை என அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மதுரை விளாங்குடி பகுதி 1-வது வார்டு ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் அந்த பகுதியில் சொந்தமாக தோப்பு ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அவரது தோப்பை கடந்து மின்கம்பங்கள் செல்லும் நிலையில், அண்மையில் மின்வாரியம் சார்பில் அந்தப் பகுதியில் இருந்த பழைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்களிலிருந்து 3பேஸ் மின்சார லயன்கள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும் அதை உயர்த்தி சரி செய்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வப்போது அந்த வழியே நடப்பட்ட புதிய மின்கம்பங்கள் சாய்வதும் அதை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 3 தினங்களாக மாலை வேளையில் மதுரையில் பெய்து வரும் மழையால் தோப்பில் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள் திடீரென சாய்ந்துள்ளது. இதில் தோப்பில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு மாடு, இரண்டு கன்று குட்டி, ஒரு நாய், ஒரு கீரிப்பிள்ளை போன்ற உயிரினங்கள் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்தசம்பவம் தொடர்பாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில், அவர்கள் மின்சார பகுதியை கட் செய்து தற்போது சாய்ந்து உள்ள மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்கள் மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முறையாக மின்கம்பங்களை நட்டிருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது எனவும்; நாங்கள் குறைகூறும் போதாவது மின்கம்பங்களை அதிகாரிகள் சரி செய்திருந்தால் வாயில்லா ஜீவன்கள் உயிர் தப்பி இருக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்