சம்பள பிரச்சினை..கணக்கு வழக்குகளில் குளறுபடி…ஆட்சேர்ப்பில் தில்லு முல்லு … என்னதான் நடக்கிறது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ?
சம்பள பிரச்சினை … கணக்கு வழக்குகளில் குளறுபடி … ஆட்சேர்ப்பில் தில்லு முல்லு … என்னதான் நடக்கிறது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ? கடந்த இரண்டு மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை; ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து 200-க்கும் அதிகமான பேராசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தின் காரணமாக பல்கலைகழகத்தின் வளாகங்கள் உள்ளிட்டு அனைத்து துறை அலுவலகங்களும் இழுத்து மூடப்பட்டன.
முக்கியமாக, நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுக்கான தேர்வுத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பல்கலைக் கழகத்தின் பல்வேறு உறுப்பு கல்லூரிகளிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள் தங்களது பணியை தொடர முடியாத சிக்கல் நிலவியது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அவர்கள் திரும்ப வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
தொடர்ச்சியாகவே நிலவிவரும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்கலை சார்ந்த பல்வேறு சிக்கல்களை உரிய அக்கறை எடுத்து தீர்வு காணாமல் சுணக்கம் காட்டும் துணைவேந்தரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, பல்கலை கழக துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்,
மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் – செயலருமான டாக்டர் எம்.தவமணி கிறிஸ்டோபர்.
“பல்கலைகழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்குவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது அந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் மன உறுதியையும் பாதிக்கக்கூடிய செயலாக அமைந்துள்ளது.
பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கிறது. பல்கலை கழகத்தின் நிதி நிலை அறிக்கை தணிக்கைக்கு உட்படுத்தியதில் தணிக்கைக்குழு சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தணிக்கை ஆட்சேபணைகள் குறித்து துணைவேந்தர் பேச தயக்கம் காட்டுவது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையின் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக உரிய தேதியில் ஓய்வூதியம் வழங்கப்படாததால், ஓய்வூதியர்கள் தரப்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். நிதி நெருக்கடிக்கு மத்தியில் தொழில் முன்னேற்றத் திட்டம் (CAS) அமல்படுத்துவது; புதிய பணியாளர்கள் தேர்வில் பதவி உயர்வு அளிப்பதில் சாதிய அடிப்படையிலும்; தனி நபர் நலனிலிருந்தும்; பணத்தை பெற்றுக்கொண்டும் தகுதியற்ற நபர்களை பணியமர்த்துவதாக கிடைக்கும் தகவல்கள் நேர்மையின் மீதான கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
* ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் விரைந்து வழங்க வேண்டும்.
* தணிக்கையில் கண்டறியப்பட்டு சுட்டிக்காட்டபட்டுள்ள ஆட்சேபனைகளை உரிய பொறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் கையாளுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தொழில் முன்னேற்றத் திட்டத்திற்காக நேர்முகத் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும். ” என்பது உள்ளிட்டு பல்வேறு விசயங்களை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் டாக்டர் எம்.தவமணி கிறிஸ்டோபர்.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்