என் நிலத்தைக் காணோம் – பதறிய பிளாட் ஓனர் ! தில்லாலங்கடி கும்பலை தட்டித்தூக்கிய மதுரை போலீசு !
என் நிலத்தைக் காணோம் – பதறிய பிளாட் ஓனர் ! தில்லாலங்கடி கும்பலை தட்டித்தூக்கிய மதுரை போலீசு !மோசடிகள் பலவிதம் ஒவ்வொன்றும் புதுவிதம் என்ற கதையாக, கிறுகிறுக்க வைக்கும் மோசடி ஒன்று மதுரையில் அரங்கேறியிருக்கிறது. அய்யா என் கிணத்தைக் காணோம் என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு அலறியதைப் போலவே, தனக்குச் சொந்தமான இடம் வேறொரு நபருக்கு கிரையமாகி அந்த இடத்தில் அவர் கட்டுமானப் பணிகளையே துவங்க ஆரம்பித்துவிட்ட நிலையில் மோசடி அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் 69 வயதை கடந்த முதியவர் சிவபாதம். இவருக்குச் சொந்தமான 2400 சதுர அடி அளவுள்ள இடம் மதுரை சிறுதூர் கிராமத்தில் இருந்தது. மதுரை கொக்கிக்குளம் சார்பதிவு அலுவலகத்தில் 1988 ஆம் ஆண்டு கிரையம் பெற்ற மேற்படி காலி இடத்தில், கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக மதுரைக்கு வந்த போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
மேற்படி நிலத்தின் உரிமையாளரான சிவபாதத்தின் மனைவி லெட்சுமி என்பவர் காலமாகிவிட்டதாகவும், அவருக்கு ஒரே வாரிசு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சத்யா என்பவர் மட்டுமே என்பதாக போலியான வாரிசு சான்றை உருவாக்கி, மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்த ஆ.ஜெகந்நாதன் என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம்நாள் பொது அதிகார ஆவணம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். மேற்படி பொது அதிகார ஆவணத்தைப் பயன்படுத்தி, ஜெகந்நாதன் என்பவர், மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அன்வர் – சுமையா தம்பதியினருக்கு கிரயம் செய்து விற்றிருக்கிறார்கள்.
இதற்கு உடந்தையாக, திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கோ.புதூரைச் சேர்ந்த சதாம் ஹூசைன், கே.கே.நகரைச் சேர்ந்த அப்துல்லா, கோ.புதூரைச் சேர்ந்த ஜாஹிர் ஹூசைன் ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டிருக்கின்றனர். மேலும், போலியாக பொது அதிகார ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அருண்குமார், போலி கிரைய பத்திரத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் ஜெய்னுள் ஆபுதீன் ஆகிய 10 நபர்களை மதுரை மத்தியக்குற்றப்பிரிவு – 3 போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.
1980 – ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவான பத்திர பதிவுகள் அனைத்தும் இன்னும் கணிணி மயமாக்கப்படாததை பயன்படுத்தி, பக்காவாக திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக இரவுப் பகல் பாராமல் குற்றவாளிகளை கண்காணித்து போதுமான ஆவணங்களை திரட்டி வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற மேற்படி பத்து நபர்களைத் தாண்டி, சசிக்குமார் என்பவரை தட்டித் தூக்கியிருக்கிறார்கள். இந்த மோசடியின் மூளையே சசிக்குமார் தான் என்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை கையாண்டு வரும் மதுரை மாநகர் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினியை அங்குசம் சார்பில் பேசினோம். “பிரச்சனை முதலில் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகாரானது. இதனையடுத்தே இவ்வழக்கின் தீவிரத் தன்மை உணர்ந்து, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் என்னிடம் விசாரிக்கும் பொறுப்பை வழங்கினார்.
எங்களது டீம் போலீசாரின் புலன்விசாரணையிலிருந்து இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சசிக்குமார் என்பவரை கைது செய்திருக்கிறோம். உரிமையாளர்களின் அனுபவத்தில் இல்லாத கணிணிமயமாக்கப்படாத ஆவணங்களை கொண்டு பதிவான சொத்துக்களை கண்டறிந்து மோசடியான முறையில் ஆள்மாறாட்டம் செய்து விற்று வந்திருக்கின்றனர்.
இதற்காக, இறந்தவர்களை காட்டி உயிருடன் இருப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ், ஆதார் வாக்காளர் அடையாள அட்டை, கைரேகை என அனைத்தையும் போலியாக தயார் செய்து அதற்கு ஏற்றார் போல் ஆட்களையும் ஆள் மாறாட்டம் செய்திருக்கிறான். இந்த வழக்கில்கூட, உரிமையாளர் நேரில் சென்று பார்த்த போது தான் இந்த விவரம் தெரிய வந்திருக்கிறது. இல்லை என்றால் இன்னும் குற்றவாளிகள் அடுத்து அடுத்து இன்னும் பல மோசடிகளை செய்திருப்பார்கள். அதற்குள்ளாக இந்த மோசடி கும்பலை கைது செய்துவிட்டோம்.
இதுபோல் இவர்கள் இதுவரை எத்தனை இடங்களை மோசடியாக விற்றிருக்கிறார்கள். இன்னும் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட ஆவண எழுத்தர்கள், பதிவுத்துறை ஊழியர்கள் என அனைவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.” என்பதாக தெரிவிக்கிறார், டி.எஸ்.பி. வினோதினி. நகையில் முதலீடு செய்தால் திருடு போகாமல் அதை பீரோவில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
அதைவிட, நிலத்தில் பணத்தைப் போட்டால் நாளுக்கு நாள் மதிப்பு உயரும். இன்று இல்லை என்றாலும் தன் பிள்ளைகள் காலத்தில் என்றாவது ஒருநாள் நல்ல பலனை கொடுக்கும் என்பதாகத்தான் நம்பி நிலத்தில் முதலீடு செய்கிறார்கள்.
அதுவும் தாம் வசிக்கும் இடம் வேறொன்றாக இருந்தாலும், நிலத்தை பெயர்த்தா தூக்கிக்கொண்டு போய்விடவா போகிறார்கள் என்று தமிழகத்தின் எந்த மூலையில் ஆஃபரில் இடம் கிடைத்தாலும் வாங்கிப் போடுவோம் என்று வாங்கிப் போடுகிறார்கள். இவ்வாறு வாங்கிப்போடும் பிளாட்டுகளில் பக்கத்து பிளாட் யாருடையது? என்ற எந்த விவரமும் பரஸ்பரம் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்கள் முற்படுவதுமில்லை. இதுவும் இந்தக் கும்பலுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.
பத்திரம் ”பத்திரமாக” பீரோவில் இருக்கிறதென்று அவ்வப்போது துலாவி பார்ப்பதோடு திருப்தி கொண்டால் மட்டும் போதாது, தங்கள் பெயரில் பதிவான சொத்து வேறொரு பெயருக்கு மாறியிருக்கிறதா? என்றும் மேற்படி இடத்தை வேறு யாரேனும் பயன்படுத்தாமல்தான் இருக்கிறார்களா? என்பதையும் அவ்வப்போது உறுதிபடுத்திக் கொள்ள வேண்டுமென்ற கட்டாய சூழலை உருவாக்கிவிட்டது, இந்த தில்லாலங்கடி மோசடி!
– ஷாகுல்,
படங்கள் ஆனந்த்.