மதுரைக்கு வந்த சோதனை! புறக்கணிக்கும் தொ.மு.ச.!
மதுரைக்கு வந்த சோதனை! புறக்கணிக்கும் தொ.மு.ச. !
புலம்பும் தொழிலாளர்கள் !!கடந்த மே- 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் முழுவதிலிருமிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளரகள் பங்கேற்றனர். மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வாக, அகில இந்திய பேரவை செயலாளர் அண்ணன் மு.சண்முகம் எம்.பி., பேரவை பொருளாளர் அண்ணன் கி.நடராஜன் அவர்களின் தலைமையில் மாபெரும் பேரணியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்டமான அப்பேரணியில், நாலாயிரத்து நூறு பேரை உறுப்பினர்களாகக் கொண்ட, மதுரை மாவட்டத்தின் அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. சார்பில் பங்கேற்றது, வெறும் நாலுபேர்.
தொ.மு.ச.வின் பொன்விழா மாநாடு சென்னையில் நடைபெறுகிறது என்பதே, மதுரை கிளை நிர்வாகிகளுக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியுமா? மண்டல நிர்வாகிகள் முறையாக தெரியப்படுத்தினார்களா? விடையில்லை! “தொழிற்சங்கத்தின் போர்வாள் அண்ணன் சுவாமி நாதன் இருக்கும் பொழுது கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வுக் கும் தொழிற்சங்கத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொழிற் சங்க உறுப்பினர்களை பேருந்து பிடித்து அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக பொதுச்செயலாளராக தொடரும் மேலூர் வி.அல்போன்ஸ் பழிவாங்கும் எண்ணத்தில் எங்களை புறக்கணித்துவருகிறார். சங்க உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை மட்டும் வருடந்தோறும் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளும், சங்கத் தலைமை இதுபோன்ற மாநாடுகள் நடைபெறுவதை சொல்லக்கூட செய்யாதா? இதுமட்டுமில்லை, கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் மதுரை வருகிறாரோ அப்போதெல்லாம் தொமுச உறுப்பினர்களை அழைத்துச் செல்வதில்லை.” என புலம்புகிறார் தொ.மு.ச.வின் மூத்த உறுப்பினர் ஒருவர். தொ.மு.ச. பேரவை, மதுரையை புறக்கணிக்கிறதா? அல்லது மதுரை மண்டல தொ.மு.ச. நிர்வாகிகள் பேரவையை புறக்கணிக்கின்றார்களா?
– ஷாகுல், படங்கள் – ஆனந்த்