லட்சம் ஹாரிபாட்டர் கதைகளுக்கு இணையான மந்திரக்கதைப் புத்தகங்கள் !
ஹாரிபாட்டர் என்கிற மந்திரக் கதை நாயகனைப் பற்றிய நாவலை பல பாகங்களில் இந்த உலகமே கொண்டாடியது நாம் அறிந்ததே ! ஆனால் லட்சம் ஹாரிபாட்டர் கதைகளுக்கு இணையான கற்பனை வளம் மிக்க மந்திர, மாயாஜாலக் கதைகள் நம் தமிழ் மொழியில் தான் அதிகம். அதுபற்றி தெரிந்து கொள்வோமா ! தமிழில் காமிக்ஸ் கதைப் புத்தகங்களின் சீஸன் துவங்கும் முன் மந்திரஜாலக் கதைகளுக்கு.. தனி நாவலே வந்தது !
அதிக பட்சம் 40 பக்கங்கள் அழுக்கு வெள்ளை ஆஃப் டோன் பேப்பரில் புத்தகம் இருக்கும்! அட்டை மட்டும் வண்ண ஆர்ட் பேப்பரில் ஜொலிக்கும். அந்த 40 பக்கங்களில் ஏராளமான விநோதங்கள் குவிந்திருக்கும்! இன்றைய யூ டியூப் வீடியோக்களின் டெம்ப்ளேட் வாசகங்கள் போல அவை நம் ஆவலைத் தூண்டும்! மாயலோகத்து மந்திரவாதி” “மாயக் குள்ளர்களும் மந்திரத் தீவும்”
“அந்தரத்தில் மந்திரக் கோட்டை” “வெள்ளை வெளவால் மனிதர்கள்” ““பறவைத் தீவில் பறக்கும் இளவரசன்” அந்தத் தலைப்புகளே நம்மை படிக்க இழுக்கும். இந்தக் கதைகளை எழுதுவோரின் பெயர்களும் அணில் அண்ணா, வாண்டு மாமா, முயல் அண்ணா என விநோதமாக இருக்கும்! உலகம் புகழும் ஹாரிபாட்டரில் கூட கற்பனை செய்திடாத வினோதங்கள், மந்திர தந்திரங்கள், மயிர் கூச்செரியும் சண்டைகள்,
வீர சாகஸங்கள் தமிழில் தான் அதிகம்! நமது புராணக் கடவுள்களான விநாயகர், அனுமன், வராகம், நரசிம்மம் என மனித உடலும் மிருகத் தலையும் கொண்ட அவதாரப் புருஷர்களை நாம் பார்த்துவிட்டதால், நமது கற்பனை மிகவும் விசாலமாக இருந்தது. இந்திரலோகத்து இந்திரனின் ஐராவதம் ஒரு பறக்கும் சக்தி கொண்ட வெள்ளை யானை என்று படித்திருப்போம்! நமது ஃபேண்டசி கற்பனையின் வீச்சு..
எவ்வளவு பெரியது என்பதை அறிந்துகொள்ளலாம்! வீரப் பிரதாபன் கதைகள், ஜகதலப் பிரதாபன் கதைகள், பட்டி விக்கிரமாதித்தன் கதைகள், போத்திராஜனிடம் பதுமைகள் சொல்லும் கதைகள், வேதாளம் சொல்லும் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் என தமிழில் மந்திரக் கதைகளின் பட்டியல் மிக நீளம்! எனக்குத் தெரிந்து உலக அளவில் இத்தனை வகைகளில் மந்திர தந்திரக் கதைகள்..

தமிழில் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். நமது தமிழ் காப்பியங்களில் கூட அறிவியல், மந்திரம், விஞ்ஞானம் எல்லாம் இருக்கிறது! இப்படி தமிழில் மந்திரக்கதைகளுக்கான பாரம்பரியம் மிக நெடியது ! தமிழில் இந்த மந்திரக் கதைகளை எழுதுபவர்களின் கற்பனைத் திறன் இன்னும் அபாரமானது! அணில் அண்ணாவின் கதைகளில் எலிகளின் உலகம் இருக்கும்! அங்கு எல்லா எலிகளும்..
எலிகளின் மொழியில் பேசிக் கொள்ளும்! ஆம் பாகுபலியில் எப்படி காலகேயர்களுக்கு ஒரு தனி மொழி இருந்ததோ அதேபோல எலிகளுக்கு ஒரு மொழியை அன்றே அணில் அண்ணா அந்தக் கதையில் எழுதியிருந்தார். அந்த எலி மொழிகளுக்கு பக்கத்திலேயே அடைப்புக் குறிக்குள் தமிழில் அர்த்தம் எழுதியிருப்பார்! உதாரணம் எலி ஒரு மனிதனிடம் கேட்கும் ‘தமிழு தர்பலு’ (தமிழ் தெரியுமா)
இப்படி அவர் எழுதியதை இன்று நினைத்தாலும் வியக்காமல் இருக்க முடியவில்லை. பெரும்பாலும் மந்திரவாதியின் உயிர் 7 மலைகள் 7 கடல்கள் தாண்டியோ அல்லது உயர்ந்த மலை மீதோ அல்லது ஆபத்தான தீவின் நடுவிலோ ஒளித்து வைக்கப்படும்! அதைத் தேடிப் போய் எடுத்து வந்து அந்த மந்திரவாதியைக் கொல்வது தான் கதா நாயகனின் வேலையாக இருக்கும். இந்திய மசாலா சினிமாவின்..
சக்ஸஸ் ஃபார்முலா போல இந்த ஒற்றை ஃபார்முலாவை வைத்துக் கொண்டு இவர்கள் படைக்கும் கற்பனையான சாகஸங்கள் தான் ஓவ்வொரு கதையையும் தனித் தனியாக தெரியவைக்கும். ஒரு கதையில் கிளியில் உயிர் இருந்தால் இன்னொன்றில் பாம்பு, மற்றொன்றில் மான், சிலநேரம் புலி இப்படி மிருகங்களுக்குள் அவன் உயிர் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்! இதில் அரசனின்..
உயிரைக் காக்கும் அரிய மூலிகை, முனிவரின் சாபத்திலிருந்து விமோசனம் பெற ரத்தினக்கல் போன்ற பிராப்பர்ட்டிகளை நாயகன் போகின்ற வழிகளில் இருந்து எடுத்து வரவேண்டும்! இது போக மந்திரக் கதைகளுக்கே உரிய பறக்கும் பாய், மந்திரக்கோல், உலகில் எதைக் கேட்டாலும் அதை அப்படியே காட்டுகின்ற கூகுளின் முன்னோடியான மாயக் கண்ணாடி போன்ற மாய பிராப்பர்ட்டிகள்..
பல வகையான கற்பனைத்திறன் மிளிர அந்தக் கதைகளில் வந்துபோகும். இது தவிர இதில் வரும் இடங்கள்.. கல் கோட்டை, மிதக்கும் மாளிகை, மலையுச்சி குகைகள், பாதாள உலகம், வேதாள உலகம், நெருப்புக் கடல், அமில ஆறு, எரிமலை, ஆழ்கடல் உலகம், ராட்சஸ லோகம், அரக்கர்கள், ஆதிவாசிகள், பழங்குடிகள், காட்டுவாசிகள், அதிசய மனிதர்கள், விசித்திர குள்ளர்கள்..
ராட்சத தேள், பாம்பு, பூரான், வண்டு, சிலந்திகள் இப்படி கதைகளில் வரும் பாத்திரங்கள் க்ரியேட்டிவிட்டியின் உச்சமாக இருக்கும். “பொன்னித்தீவில் பொன்வண்டு இளவரசி” என்று ஒரு கதை அதில் இளவரசியை மந்திரவாதி பொன்வண்டாக மாற்றிவிடுவான். அவனிடம் இருந்து வண்டு உருவத்திலேயே ஜெண்டாகும் இளவரசி அவள் காதலிக்கும் இளவரசனைத் தேடி அவன் நாட்டிற்கே போய்..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொன்வண்டாக இருப்பது நான் தான் என்று சொல்லி அவனை பொன்னித் தீவிற்கே அழைத்து வந்து மந்திரவாதியை பழி வாங்கி சாபவிமோசனம் பெறுவாள். அப்படியே நான் ஈ படத்தின் கதை போல இருக்கா? இதெல்லாம் சின்ன சாம்பிள் தான். மேலும் நாயகன் செல்லுமிடமெல்லாம் ஏதாவது ஒரு நாட்டு இளவரசி அவனைக் காதலிப்பாள்! இந்த யுக்தியை அப்படியே ஹாலிவுட்டில்..
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கட்டாயம் பின்பற்றியிருப்பார்கள்! ராஜமவுலியின் தந்தை மாயக் கதையாக எழுதியதை அப்படியே பாகுபலியில் பல காட்சிகளில் சேர்த்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எப்போதும் மந்திரக்கதைகள் சிறந்த க்ரியேட்டிவிட்டிக்கு சான்றாக இருக்கும்! வளமான கற்பனை, சுவாரஸ்யம், மர்மம், மந்திரம், மாயம் எல்லாம் சேர்த்து..
ஒரு புதிய உலகையும் பல புதிய ஜீவராசிகளையும் படைக்க வேண்டும்! அந்தப் படைப்புத்திறன் பெற்ற ஒவ்வொருவரும் பிரம்மனே! உலகில் அந்த பிரம்மர்கள் தமிழில் தான் மிக அதிகம்!
— வெங்கடேஷ் ஆறுமுகம் – நடிகர் & இயக்குநர்