விஜய்சேதுபதி என்ற சாதாரண ஒருவன் !
காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதி ஒரு வெட்டி உதார் ரவுடி, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தினக்குடிகாரன், நானும் ரவுடிதான், சூதுகவ்வும் படங்களில் கூட அவர் ரவுடியாக பாவனை செய்யும் ஒரு போலி ரவுடி. விக்ரம்வேதா படத்தில் ஆளுமைமிக்க ரவுடி, விக்ரம், மாஸ்டர், படங்களில் அரக்ககுணம் கொண்ட எதிர்க் கதாபாத்திரம், செக்கச்சிவந்த வானத்தில் அடக்கி வாசிக்கும் போலீஸ், சேதுபதியில் அதகளம் செய்யும் கமர்சியல் போலீஸ், சூப்பர் டீலக்ஸ்ல் திருநங்கை. அவர் ஏற்று நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்கும் அவர் பொருந்தியே போகிறார்.
தர்மதுரை முற்பாதியில் குடிகாரனாக அவர் செய்யும் அலும்புகள் அவருக்குக் கைவந்தகலை, ஒரு மருத்துவராக அவர் எவ்வாறு பரிணமிக்கிறார் என்பதைக் காண ஆவலாக இருந்தேன், ஆச்சர்யம். மருத்துவராக வரும்போது நிஜமாவே ஒரு படித்த மனிதனை ஒரு மருத்துவரை கண்முன் நிறுத்துகிறார்.
பொதுவாகவே விஜய்சேதுபதி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு “அவர் எல்லா திரைப்படங்களிலும் விஜய்சேதுபதியாகவே வருகிறார்.” மேலோட்டமாக யோசித்துப் பார்த்தால் ஆமாம். கொஞ்சம் நுட்பமாக அவதானித்தால், விஜய்சேதுபதி என்ற சாதாரண ஒருவன் டாக்டராக இருந்தால் எப்படி இருப்பான்? ரவுடியாக இருந்தால் எப்படி இருப்பான்? போலீசாக இருந்தால் எப்படி இருப்பான், பீட்சா டெலிவரி செய்பவனாக இருந்தால் எப்படி இருப்பான் என்று ஒரே விஜய்சேதுபதி பற்பல வேடங்களுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்வது தெரியும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தர்மதுரை இறுதிக் காட்சியில், இவர் திருடிக் கொண்டு வந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட பணத்தை எடுத்து தமன்னா கட்டிலில் வைத்திருப்பார். அப்படி ஒரு பணம் தன்னிடம் இருப்பதே அவருக்குத் தெரியாது என்பதால் அதனை தமன்னாவின் பணம் என்றே எண்ணி வங்கியில் செலுத்தச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருப்பார். அந்தக் காட்சி முழுக்கவே விஜய்சேதுபதியின் உடையும், நடையும் பேச்சும் அத்தனை இயல்பு, அழகு. கச்சிதம். ரசித்தேன்.
— யாத்திரி கார்த்தி – டிஜிட்டல் படைப்பாளி.