மக்கள் நலத்திட்டங்களால் மகுடம் சூடிய மண்ணச்சநல்லூர் கதிரவன்…! உதயநிதி புகழாரம்…!
எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சியில் ஏப்ரல்-12 அன்று பல்வேறு இடங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து, திருச்சி – நம்பர் ஒன் டோல்கேட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது., “மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவனை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை. அவர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். எளிதில் மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைக்கு தீர்வு காணக்கூடியவர்.
கடந்த ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தபோது மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு ஏராளமான மக்கள் நல பணிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக ரூ.55 கோடி மதிப்பீட்டில் தொகுதி முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 140 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் ரூ.120 கோடி மதிப்பீட்டில் தொகுதி முழுவதும் உள்ள தார் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ரூ.311 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.. மேலும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மரம் நடுதல், மரத்தோட்டங்கள் அமைத்தல், ஆகிய திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளியநல்லூர் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ.22 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், மண்ணச்சநல்லூர், திருவாசி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்பீட்டில் தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் மட்டும் 3 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம். இதுபோன்ற இன்னும் எண்ணற்ற பல்வேறு மக்கள் நலப் பணிகள் மண்ணச்சநல்லூரில் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன் கடந்த ஐந்தாண்டுகளில் செய்து முடித்துள்ளார்.
வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்திக் கொடுக்கப்படும். மேலும், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கான ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கவும், மண்ணச்சநல்லூர் தொகுதி மேலும் வளர்ச்சி அடையவும், நமது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கதிரவன் அவர்களை வெற்றி ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இப்பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்களான கே.பி.ஏ. செந்தில், வழக்கறிஞர் செந்தில், முசிறி ராமச்சந்திரன், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் டி.சீனிவாச பெருமாள், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசன், சமயபுரம் நகர செயலாளர் ராஜசேகரன், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன் உள்ளிட்ட கிளைக் கழக, பேரூர் கழக, நகர கழக, நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.