அப்புறம் எப்படி மஞ்சுமல் பாய்ஸ் தமிழ் நாட்டில் ஓடாமல் போகும் ?

1

அப்புறம் எப்படி மஞ்சுமல் பாய்ஸ் தமிழ் நாட்டில் ஓடாமல் போகும் ?

லவ் டுடே படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த முழுமையான தியேட்டரிக்கல் விருந்து என்றால் அது மஞ்சுமெல் பாய்ஸ் படம்தான்

ரோஸ்மில்

எப்படி என்று சொல்வதற்கு கொஞ்சம் வரலாற்றையும் பார்க்க வேண்டி இருக்கிறது .வரலாறு பொய் சொல்லாது . எனவே அடுத்து வரும் உண்மைகள் யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்க .

ஒரு காலத்தில் இந்திய முழுக்க பரவி இருந்த தமிழை – தமிழ் இனத்தின் பெரும்பான்மையை வெவ்வேறு விதங்களில் உடைக்க ஆரியமும் அதோடு பாரசீகமும் செய்த சதிகளின் பலனே இங்கே உருவான பல இனங்களும் மொழிகளும்., மொழி இனங்களும் .

- Advertisement -

- Advertisement -

அதில் ஒன்றுதான் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான மலையாளம் .

அதற்கு முன்பு வரை மலையாளிகளின் குல தெய்வம் என்றால் அது முருகன்தான் . அதுவும் முக்கியமாக பழனி முருகன்தான். இப்போதும் திண்டுக்கல்லில் இருந்து பழனி மலை நோக்கி வயது முதிர்ந்த மலையாள அம்மாக்களும் அய்யாக்களும் இன்னும் மாசுபடாத மரபணுவோடு பழனி மலை ஏறுவதைப் பார்க்கையில் கையெடுத்து கும்பிடத் தோன்றும் . நமது ரத்த உறவுகள் இவர்கள் என்ற உணர்வே வரும்

ஆனால் ஆரியம் மற்றும் பாரசீகக் கலப்பில் உருவான ஓர் உயர் மேட்டுக்குடி இனம் இதை மாற்ற திட்டமிட்டது .

ஒரு தமிழ் மன்னனுக்குப் பிள்ளையாக பிறந்த வாரிசையே கடவுளாக்கி , அதை தமிழக பக்தர்கள் மூலமே வளர்த்து , அதை வைத்து பழனிக்கு வரும் மலையாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது .

ஆனால் நம்மவர்களுக்கு இப்போது அந்த கோவில் யாத்திரை முக்கியமாகவும் பழனிக்குப் போவது துணைப் பயணம் என்று ஆகிப் போனது .

சினிமா உருவானது . மலையாள சினிமாவைத் துவக்கி வைத்த தயாரிப்பாளர் இயக்குனர்கள் தமிழர்கள்தான் . ஆனால் மலையாள சினிமாத் துறையை ஆக்கிரமித்த- தமிழினத்துக்கு எதிரான அந்த மலையாள உயர் மேட்டுக் குடியினர் அந்த வரலாற்றை புறக்கணித்தனர் . மறக்கடித்தனர்.

ஆரம்பத்தில் சிவாஜியை மலையாளிகள் கொண்டாடியது உண்டு. ரத்தத்தால் மலையாளியாகவும் சூழ்நிலையாலும் நன்றி உணர்ச்சியாலும் 90 சதவீதம் தமிழராக இருந்த எம்ஜி ஆரும் இரு தரப்பாலும் கொண்டாடப்பட்டார்.

ஆனால் ஒரு நிலையில் தமிழர்களை திட்டமிட்டே கேவலமாக சித்தரிக்கும் வேலையை பல மலையாளப் படங்கள் செய்தன . அதில் பெரிய மலையாள ஹீரோக்களும் அடங்குவார்கள் . மம்முட்டி அதிகம் செய்ததில்லை . காரணம் அவர் தனது செம்பு கிராமத்தில், பிய்த்துக் கொண்டு ஓடிய சிவாஜி படங்களைப் பார்த்து சிவாஜியை பிரம்மித்து நடிகராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர் .

ஆனால் மோகன்லால் மம்முட்டி போல் இல்லை. மோகன்லால் குடும்பத்தின் வளர்ச்சியிலும் சிவாஜியின் – தமிழ் சினிமாவின் பங்கு இருந்தாலும் அவர் அதை தூக்கித் தூரப் போட்டார்.

ஒரு படத்தில் துபாயில் ஒரு பெரிய பில்டிங்கைப் பார்க்கும் மோகன்லால் , ” அடேயப்பா எவ்வளவுய் பெரிய பில்டிங் . எல் ஐ சி பில்டிங்தான் உலகத்திலேயே பெரிய பில்டிங் என்று நினைக்கும் தமிழனுங்க இதைப் பாத்தா தூக்குப் போட்டுத் தொங்குவானுங்க” என்று சொல்வார் . ஆனால் கமல் கூட தமிழில் நடிக்கும்போது மட்டும் , ” கேரளா மட்டுமில்லே… தமிழ்நாடும் எண்டே தேசம்தான் ” என்பார் .

எல்லா மலையாள ஹீரோக்களும் இயக்குனர்களும் திரை எழுத்தாளர்களும் தங்கள் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் இந்த தமிழ் இன வன்மத்தைக் கொட்டி, தங்கள் சுய சொறி , அரிப்பை ரத்தம் வரச் சொறிந்து கொள்வார்கள்

அண்மையில் வந்த மாளிகைப்புறம் படத்தில் கூட சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களை பெண் பித்தர்கள் கடத்தல்காரர்கள் , சொந்தக்கார சிறுமியையே பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் என்றும் ஆனால் மலையாள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து மலைக்குப் போவது போலவும் பஞ்சமா பாதகமான காட்சிகளை வைத்து இருந்தார்கள் .

மம்முட்டி பற்றி சொன்னேன் . ஆனால் மம்முட்டி மகன் இந்த விசயத்தில் மோகன்லால் கட்சி. சொல்லப் போனால் மோகன்லாலுக்கும் மேலே.

அண்மையில் வந்த கிங் ஆஃப் கொத்தா படத்தில் தேவையே இல்லாமல் ஒரு தமிழ்ப் பெண்ணை வில்லனின் ஆள் போலக் காட்டி ஒரு காட்சியில் அவளைப் பார்த்து துல்கர் சல்மான் ” நீ அவுசாரி .. அவுசாரி மகள் ” என்று ரசித்து ருசித்து நாக்கைச் சுழற்றி வசனம் பேசுவார் . அது தேவையே இல்லாத காட்சி . தேவையே இல்லாத வசனம் .

கேட்டால் தமிழ் சினிமாவில் மலையாளப் பெண்களை மோசமாகச் சித்தரிக்க வில்லையா என்பார்கள் . நியாயம்தான் . ஆனால் தமிழ்ப் படத்தில் மலையாள பெண்களின் உடையின் கவர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள அப்படி காட்சி வைப்பார்கள். அதில் நகைச்சுவையும் கிளுகிளுப்பும்தான் இருக்கும் . வன்மம் இருக்காது

ஆனால் தமிழ்ப் பெண்களை அவுசாரி மகள் என்று வேண்டும் என்றே சொல்லும் அளவுக்கு மம்முட்டியின் மகனுக்கு வன்மம் ஏறியது ஏன் என்று யோசிக்க வேண்டும்

இன்னும் ஏழை எளிய உழைக்கும் வர்க்க மலையாளிகள் தமிழையும் தமிழர்களையும் நேசிக்கத்தான் செய்கிறார்கள் .

ஆனால் கேரளாவின் உயர் மேட்டுக் குடியாக உருவாகியவர்கள் அல்லது அவர்களின் வழி வந்தவர்கள் அல்லது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட மலையாள சினிமாக்காரர்கள்தான் இப்படி உண்மையை தலைகீழாக மாற்றி தமிழர்களையும் தமிழ்ப் பெண்களையும் கேவலமாக சித்தரித்து, சொந்த சொறி, புண், படை (கவனமாகப் படிக்கவும்) சிரங்கை .. ரத்தம் வடியும் அளவுக்கு, வரட்டு வரட்டு என்று சொறிந்து கொள்வார்கள் .

அவ்வளவு ஏன்? மழை வெள்ள பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்று இந்தியாவுக்கே சொல்லிக் கொடுத்த மக்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு . மாநகரம் சென்னை . ஆனால் கேரள மழை வெள்ள பாதிப்பு பற்றி வந்த படத்தில் கூட தமிழ் நாட்டில் நடந்ததை எல்லாம் அங்கே நடந்தது போல காட்சியாக வைத்துக் கொண்டதோடு , அதில் கூட தமிழர்களை கேவலமாக சித்தரித்து இருந்தார்கள் மனசாட்சி இன்றி

இவ்வளவு வன்மங்களுக்கு இடையேதான் ஏழை எளிய மலையாள மக்களின் வீடுகளில் ரேஷன் கார்டில் பேர் மட்டும் இல்லாத குடும்ப உறுப்பினராக மாறினார் இசைஞானி இளையராஜா . . விஜய்யும் அப்படியே சாதித்தார்

இந்த வயிற்றெரிச்சல் வேறு, மலையாளப் படங்களில் தமிழர்கள், உண்மைக்கு புறம்பாக நேர் மாறாக தலைகீழாக தவறாக சித்தரிக்கப்பட ஒரு காரணம் . இதற்கு அங்கே ஒரு சிறிய ரசிகர் கூட்டம் இருந்ததால் அதை வைத்துக் கொறச்ச கல்லா கட்டிக் கொண்டிருந்தது மலையாள சினிமா

இதை எல்லாம் இங்கே விளக்கமாகச் சொல்லக் காரணம் குத்திக்காட்ட அல்ல.

இதெல்லாம் சொன்னால்தான் மஞ்சு மேல் பாய்ஸின் சிறப்பு புரியும்

மேற்சொன்ன – தமிழர்கள் மீதான அநியாய அக்கிரம கேவல கீழ்த்தர வன்ம உணர்வை துடைத்து எறிந்திருக்கிறது மஞ்சுமெல் பாய்ஸ் படக் குழு

இந்தப் படம் தமிழக தியேட்டர்களில் ஒரு புயலாக அடிக்க அது ஒன்றே போதும்

ஆனால் அதை அவர் காட்சிகளில் நிறுவி இருக்கும் விதம் அபாரம் .

எப்படி என்று பார்ப்போம்

குணா படத்தில் கமல் படப்பிடிப்பு நடத்திய குகைதான் கதைக்களம் அங்கே நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்பதால் இந்தப் படம் கமல்ஹாசனையோ அவரது குணா படப் பாட்டையோ கொண்டாடுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதையும் மீறி இந்தப் படத்தின் இயக்குனர் தமிழ் தியேட்டரிக்கல் ரசிகர்களை எப்படி கனெக்ட் செய்கிறார் என்று பார்ப்போம்

பொதுவாக டைட்டிலில் நன்றி கார்டு போடும்போது, ஆரம்பத்தில் வரும் கார்டை விட பின்னால் வரும் கார்டுக்குதான் வேல்யூ அதிகம்

இதில் முதலில் நன்றி மம்முட்டி என்று போட்டு விட்டு அடுத்து நன்றி ‘ உலக நாயகன்’ கமல்ஹாசன் என்று போடுகிறார்கள். கவனிக்க மம்முட்டிக்கு மெகா ஸ்டார் என்று போடவில்லை

இது மலையாள சினிமா உலகம் காணாத அதிசயம்

படத்தின் டைட்டில் மலையாளத்தில் ஓட , அதன் மேலேயே குணா படத்தின் கண்மணி அன்போடு பாட்டு வருகிறது . அதில் கமல்ஹாசனின் முகம் கேரிகேச்சரில் வருகிறது.

அதுவே நாம் பார்ப்பது வேற்று மொழிப் படம் என்ற உணர்வையே குறைக்கிறது. (அதுவும் படத்தில் மீண்டும் கண்மணி அன்போடு பாட்டை பயன்படுத்தும் இடம் அக்மார்க் தமிழ் தியேட்டரிக்கல் சினிமா பாணி. அதில் மலையாள பாணி சிறிதும் இல்லை. )

எடுத்த உடன் பழனியில் படம துவங்குகிறது . அது கூட திரைக்கதை லாஜிக் என்றே வைத்துக் கொள்வோம்

ஆனால் பழனி மலைக்கும் ஜொலிக்கும் முருகனின் வேலுக்கும் தனியாக ஷாட் போடுகிறார் இயக்குனர் . படத்தின் கடைசிவரை இந்த ஷாட்கள் தொடர , முருகனை பயபக்தியோடு காட்சிப் படுத்துகிறார் இயக்குனர்

டீக்கடை .

கல்லாவுக்கு பின்னால் நடிகர் திலக்ம் சிவாஜி கணேசனின் புகைப்படம் .

அந்தப் புகைப்படம் கொஞ்சம் கூட அவுட் ஆப் போகஸ் ஆகி விடக் கூடாது .. செண்டர் ஆப் போகஸ் இதில் இருந்து மிஸ் ஆகி ஃபிரேம் அவுட் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் இயக்குனர் .

4 bismi svs

சற்றும் கிண்டல் கேலி வன்மம் இல்லாமல் ஒரு தமிழ் ஆளைப் பார்த்து ஒரு மலையாளி அண்ணே என்று ஆரம்பித்து பேசுவதாகத் துவங்குகிறது ஒரு மலையாளப் படம் !

படம் முழுக்க எளிய மனிதர்கள் வருகிறார்கள் .

சில இடங்களில் தமிழ் நாட்டு போலீஸ் , வனத்துறை ஆட்கள் பற்றி தவறாக சொல்ல ஆரம்பிப்பது போல தோன்றும்போது, வழக்கமான மலையாளப் படங்களின் தமிழ் இன வன்மம் தெரிகிறதோ என்று தோன்றினாலும்…

ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கதைப் பாய்வின் முடிவிலும் அது தமிழர்கள் மீதான வன்மம் அல்ல … தனிப்பட்ட கதாபாத்திரங்களின் தொழில் முறை ரீதியான விமர்சனமே என்று அழகாகப் புரிய வைக்கிறார இயக்குனர் . முழுசாக கன்வின்ஸ் ஆகிறது மனசு

அதுவும் கடைசியில் தமிழ் நாட்டு இன்ஸ்பெக்டர் அவர்களை அக்கறையோடு மிரட்டி அனுப்பி வைக்க அவர்கள் நன்றியோடு பார்க்கும் காட்சி….. நாம் பார்ப்பது மலையாளப் படம்தானா என்ற பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது .

ஏழை எளிய உழைக்கும் தமிழ் மக்களை வஞ்சகன், அயோக்கியன் , அல்பம் , திருடன், துரோகி , மாமா வேலை பார்ப்பவன் என்று கொஞ்சமும் மனசாட்சி இன்றி காட்சிகள் வைக்கும் மலையாள சினிமாக்காரர்களின் ———————– தனத்துக்கு (கோடிட்ட இடத்தில் உங்களுக்குப் பிடித்த கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளலாம்) நேர்மாறாக

இந்தப் படம் முழுக்க எளிய உழைக்கும் தமிழ் மக்களை கொண்டாடி இருக்கிறார்கள் . (தமிழ் நாட்டு ஆட்கள் என்றால் எல்லாருமே கருப்பாக குண்டாக அழுக்காக இருப்பார்கள் என்ற எள்ளல் மட்டும் இருக்கிறது )

கடுமையாகக் காட்டப்பட்ட தமிழ்நாட்டு போலீஸ் , வனத்துறை ஆட்களையும் ஒரு நிலையில் நல்லவர்களாக காட்டுகிறார்கள் .

படம் பார்க்கும்போது , இந்தக் குகைக்குள் நுழைவதே இவ்வளவு கஷ்டமாக உயிர் ஆபத்து தரும் விசயமாக இருக்கிறதே … அப்படியானால் இங்கே ஒரு படத்தை எடுக்க கமல்ஹாசன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்ற ஓர் உணர்வு அவர்கள் சொல்லாமல் தானாக வரும் பாருங்கள் ..

அந்த இடத்தில் கமலையே பிடிக்காத ஒரு தமிழ சினிமா ரசிகன் கூட , ”ஒரு மலையாளப் படத்தில் நம்ம ஆளைக் கொண்டாடறாங்கப்பா.. ‘ என்று நெகிழ்ந்து பெருமைப் படுவான் அப்புறம் ஏன் இந்தப் படம் தமிழ் நாட்டில் ஓடாது .சொல்லுங்கள்

இது போதாது என்று திரைக்கதையிலும் பின்னிப்,பெடல் எடுத்து இருக்கிறார்கள் .

ஆரம்பத்தில் முதல் பத்து நிமிஷம் இந்தப் படம் போரடிக்கும் . ஓர் அரைகுறைத் தயாரிப்பாளரிடம் இந்தத் திரைக்கதை போயிருந்தால் அந்த சீன்களை எல்லாம் தூக்குங்க என்று சொல்லி சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்டு இருப்பார் . ஆனால் அந்த ஆரம்ப அலுப்பு இந்தத் திரைக்கதைக்கு தேவை

இதெல்லாம் நம்ம ஊரில் பலருக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது . அது எப்படி என்றால்… நன்றாக பசிக்க விட்டு விருந்து இலையில் உட்கார வைக்கிற மாதிரி .

அது மட்டுமல்ல. ஒரு நல்ல திரைக்கதை கிளைமாக்ஸ் வருவதற்கு முன்பே ஜெயித்து விடும் . எந்த அளவுக்கு வெற்றி என்பதையே கிளைமாக்ஸ் முடிவு செய்யும்

சின்னக் கவுண்டர் படத்தில் இடைவேளைக் காட்சியில் இலைக்கு அடியில் ஹீரோ தாலியை வைத்தபோதே அந்தப் படத்தின் வெற்றி உறுதியானது.

அது கூட இடைவேளை . அம்மன் படத்தின் ஊருக்குள் வந்திருக்கும் அம்மன் ஊரிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் “நான் வரும்வரை இங்கேயே இருக்க வேண்டும் “என்று அம்மனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் கிணற்றில் விழுந்து செத்துப் போன போதே அந்தப் படத்தின் வெற்றி உறுதியானது

அப்படி ஓர் அற்புதமான விஷயம் இந்தப் படத்திலும் இருக்கிறது . (படம் பார்க்கும்போது கண்டு பிடித்து ரசியுங்கள்)

எனினும் அதில் திருப்தி அடையாமல் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர், குணா கமல் போலவே ஒரு கதாபாத்திரத்தை வைத்து இருப்பது , கயிறு இழுக்கும் போட்டிக் காட்சியை பின்னால் பயன்படுத்துவது , குழியில் விழுந்தவனின் சிறு வயது வாழ்வை ஈஸ்தெட்டிக் ஆகக் காட்சிப்படுத்தியது.. குணா குகை , விழுந்தவன் , மீட்புப் பணி என்று அட்டகாசமான மேக்கிங் வேறு கொடுத்து இருக்கிறார் .

அதனாலதான் சொல்கிறேன் . பெரிய நடிகர்களின் படங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் லவ் டூடே படத்துக்குப் பிறகு நான் பிரம்மித்த திரையரங்கு வெற்றிப் படம் என்றால் அது இந்த மஞ்சுமெல் பாய்ஸ் தான்

இத்தனைக்கும் தமிழில் வந்த அறம் படத்தை ஒப்பிட்டால் கருத்தியலாக இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஒன்றுமே இல்லை. அறம் படத்தின் கால் தூசுக்கு ஆகாது இந்தப் படம்.

ஆனால் திரையரங்கு ஆடியன்சை ஒரு கொண்டாட்ட மன நிலைக்கு தயார் படுத்தி கனெக்ட் செய்து, தான் சொல்ல வரும் கதைக்கு ஏற்ப மயக்கி, கட்டிப் போட்டதில் மஞ்சுமெல் பாய்ஸ் அபாரம் .

இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு நன்மை நிகழும் . இனி மலையாளப் படங்களில் தமிழர்களை அநியாயமாக கேவலமாக சித்தரிக்கும் அல்பத்தனம் ஒழியும் . தமிழர்களைப் பாராட்டினால் அங்கேயும் படம் ஓடும் போல இருக்கே; கல்லா கட்டலாம் போல இருக்கே என்று யோசிப்பவர்கள் . அவர்களுக்கு கல்லாதான் எல்லாம்

படத்தைப் பார்த்த கமல் சார் , ‘ நாம இதை மிஸ் பண்ணிட்டோம் ‘ என்று சொன்னதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை

நாம கொஞ்சமாவா மிஸ் பண்றோம்?

மஞ்சுமெல் பாய்ஸ் திரைக்கதையை ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பாளரிடம் கொண்டு போனால் , எத்தனை பேர் படமாக எடுக்க முன் வந்திருப்பார்கள்? . நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது . மூஞ்சிலேயே தூக்கி வீசி அனுப்பி இருப்போம் .

ஒரு நல்ல திரைகதையை ஆர்வமோடு சொல்லும்போதே சட்டென்று கடுமையான வார்த்தைளை சொல்லி தயாரிப்பாளர்கள் கட் செய்த அனுபவம் எல்லாம் உண்டு

மஞ்சுமெல் பாய்ஸ் க்கும் மேல் மேல் மேல் மேல் திரைக்கதைகள் நம்மிடம் உண்டு . ஆனால் அதன் பல்ஸ் புரிந்து தயாரிக்க யாரும் இல்லை

இங்கே ஒரு படம் உருவாக திரைக்கதை, தொழில் நுட்பத் திறமை , உழைப்பு இவை மற்றும் போதவில்லை. இவை மட்டுமே இருப்பவனை விரக்தியின் விளிம்பில் தள்ளாமல் ஓய்வதில்லை., இவற்றையும் மீறி வேறு என்னவோ தேவைப்படுகிறது .

ஒருவன் முகத்துக்கு முன்னால் உட்கார்ந்து மூணு மணி நேரம் முழுக் கதையையும் சிறப்பாக சொல்லி முடித்தால் அவனை கம்பளிப் பூச்சியை பார்ப்பது போலப் பார்க்கும் நபர்கள் இப்போது இங்கே உண்டு . நல்லாருக்கு ஆனா எனக்குப் பிடிக்கல என்று சொல்லும் வினோத நபர்கள் உண்டு .

ஒருவர் பல ஆண்டுகள் செலவு செய்து ஒரு நல்ல ஸ்கிரிப்ட் எழுதி அதில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்று பெயர் போட்டுக் கொடுத்தால் பக்கத்தில் நீயே தயாரிசுக்க என்று கிண்டல் செய்யும் தயாரிப்பு நிறுவனம் இங்கே உண்டு

ரெண்டு வாக்கியம் ஒழுங்கான தமிழில் இல்லாமல் நினைப்பதை சரியாக எழுத்தில் கூட சொல்ல முடியாமல் இருந்த — தலைவலி மாத்திரை போட்டுக் கொண்டு நான் படித்த ஒரு திரைக்கதை — இப்போது படமாக ஆரம்பிக்கிறது

இனிமே தியேட்டர்களை மட்டும் நம்பி படம் எடுத்தால் ஜெயிக்க முடியாது என்று சில தயாரிப்பாளர்களே மேடை ஏறிப் பேசுகிறார்கள் . தியேட்டரிகல் சினிமா இருக்கும் வரைதான் தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மவுசு. அது போனால் எல்லாரும் கார்பரேட் கம்பெனிக்காரனிடம் முறைவாசல் செய்யப் போக வேண்டியதுதான் .

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . தியேட்டரிக்கல் ஸ்கிரிப்ட் மற்றும் படம் என்பது கள்ளங்கபடமில்லா மக்களின் கல்யாண வைபவம் போல . அங்கே உற்சாகம் , சந்தோசம் கூச்சல் குழப்பம் கொண்டாட்டம் எல்லாம் எல்லாம் இருக்கும் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு தும்மல் வரத்தான் செய்யும் . ஒரு குழந்தை தாம்பாளத்தட்டில் மூத்திரம் பெய்யும். இன்னொரு குழந்தை லட்டை எடுத்து நம்ம மூஞ்சியில் அப்பும் . ஒரு புதிய காதல் புன்னகையோடு பூக்கும் . ஒரு நல்ல காதல், அவ்வளவு ஏன் கள்ளக் காதல் கூட கண்ணீரோடு முறியும் . எல்லாம் இருக்கும் . அதுதான் வாழ்கை

ஆனால் ஓ டி டி கன்டென்ட் என்பது எலைட் தனமான வீட்டின் இழவு போல . யாரும் குரலெடுத்து அழக் கூட மாட்டார்கள் .

தமிழ் சினிமா கொஞ்ச நாளாக என்ன செய்கிறது என்றால்…

செத்துப் போன பிணத்தைக் கொண்டு போய் கல்யாண வீட்டில் உட்கார வைத்துக் கொண்டு கொண்டாடு கொண்டாடு என்கிறது . “இனிமே கல்யாணம் பண்ணி பிரயோஜனம் இல்லை . வாங்க எல்லோரும் நேரடியா செத்துப் போலாம் “என்கிறது (ஓம் சனீஸ்வரனே போற்றி)

ஒரு மலையாளப் பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒரு நேரடி மலையாளப் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் தியேட்டரிக்கல் ஆடியன்சை மயக்கி வளைத்துக் கட்டிப் போட்டு விட்டார்கள் .

நாம என்ன செய்யப் போறோம் ?

(பின்குறிப்பு : தாரளமாக ஷேர் செய்யலாம் . ஆனால் எவனாவது அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சொந்தப் பதிவு போலப் போட்டால் .. அப்புறம் ……………………….. அந்தக் கெட்ட வார்த்தைதான் அவனுங்க வாழ்க்கை என்று அர்த்தம்)

கட்டுரையாளர்

ராஜா திருமுருகன் சு.செந்தில்குமரன்
ராஜா திருமுருகன் சு.செந்தில்குமரன்

– ராஜா திருமுருகன் சு.செந்தில்குமரன்

5 national kavi
1 Comment
  1. ஶ்ரீ says

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.நான் நிறயெ பாத்திட்டே…(இப்போது இல்லை மக்கள் மன அளவில் மாற்றீடாங) உங்களைப் போல கொஞ்சம் பெயர் இன்னும் இருக்கிறது என உதாரணமாக நீங்களும் உங்கள் கட்டுரையும். அங்குசம் புகழுக்கு பஞ்சுல் போய்ஸும் கேரள மாநிலமும் ஒரு காரணம் ஆகியது சந்தோஷம்.

Leave A Reply

Your email address will not be published.