குழந்தையின் கழுத்தை அறுத்த பட்டத்தின் மாஞ்சா நூல் – 2 பேர் கைது
குழந்தையின் கழுத்தை அறுத்த பட்டத்தின் மாஞ்சா நூல் – 2 பேர் கைது
பெற்றோருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3½ வயது குழந்தை காயம் அடைந்தது. இதையடுத்து மாஞ்சா நூல் காற்றாடி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்றத்தூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 36). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுபித்ரா(33). இவர்களுக்கு 3½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை சரவணன், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி சுபித்ரா மற்றும் குழந்தையுடன் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
தாம்பரம் ரங்கநாதபுரம் அருகே வந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று குழந்தையின் கழுத்தை அறுத்தது. இதில் ரத்தக்காயம் அடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்த இடத்தில் தையல் போடப்பட்டது.
சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் பகுதியில் மாஞ்சா நூல் காற்றாடி விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(25), முரளி(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 மாஞ்சா நூல் காற்றாடிகள், மாஞ்சா நூல் கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரையும் சிறையில் அடைத்தனர்.