அங்குசம் பார்வையில் ‘மரியா’
தயாரிப்பு—எழுத்து & இயக்கம் : ஹரி கே.சுதன். தமிழ்நாடு ரிலீஸ் : ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ். ஆர்ட்டிஸ்ட் : சாய்ஸ்ரீ பிரபாகரன், சுதா புஷ்பா, பாவல் நவகீதன், சித்து குமரசேன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், அபினயா. ஒளிப்பதிவு : ஜி.மணிசங்கர், இசை : அரவிந்த் கோபாலகிருஷ்ணன் & பரத் சுதர்சன், எடிட்டிங் : கே.குமரேஷ் & நிஷார் ஷெரிப், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஆதவன் அரசு, தலைமை இணை இயக்குனர் : ஹரிஷ்குமார், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம் ]
‘எனக்கு எந்த மதத்தின் மீதும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. அதே சமயம் மதத்தின் பெயரால் இருக்கும் சில கட்டுப்பாடுகள், பெண்களின் உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைத் தான் இப்படத்தில் சொல்லியிருக்கேன்” என டைட்டில் கார்டு போடுவதற்கு முன்பே தன்னிலை விளக்கம் கொடுத்துவிடுகிறார் டைரக்டர் ஹரி.கே.சுதன்.
ஆனால் அந்த தன்னிலை விளக்கத்திற்கு நேர்மாறாக கிறிஸ்தவ மதத்தில் கன்னியாஸ்திரியாக மாறிய ஒரு இளம் பெண், சராசரி வாழ்க்கையில் ஜாலியாக இருக்கும் வேறு ஒரு இளம் பெண், மற்றும் அவளது பெண் தோழி, ஆண் தோழர்களை சந்தித்த பின், தான் ஏன் கன்னியாஸ்திரி ஆனோம். தனக்கும் ஆசாபாசங்கள், காம உணர்ச்சிகள் இருப்பதை ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து எல்லாவற்றையும் அனுபவித்தால் தான் என்ன? என்று நினைத்து அந்த ஆசைகளை அடைந்த பின் ஏற்படும் முடிவைத் தான் கிறிஸ்தவத்தின் மீது ஒருவித மாய வெறுப்பின் விளைவாக இந்த ‘மரியா’ வை சினிமாவாக்கியிருக்கிறார் டைரக்டர்.
எந்த மதத்தின் மீதும் வெறுப்பு இல்லை என்கிறார் டைரக்டர். நமக்கோ அதில் உடன்பாடில்லை. ஏன்னா இந்த ‘மரியா’வில் டைரக்டர் ஹரி கே.சுதன் வலியுறுத்திச் சொல்லும் ஒரே விஷயம் என்னன்னா… இயேசு கிறிஸ்து என்பவர் கடவுள் இல்லை. அவரும் ஒரு சராசரி மனிதர் தான். ஆனால் ஒரு கும்பல் தான்… [நன்றாக கவனிக்கவும், ‘ஒரு கும்பல்’ தான்] அவரைக் கடவுளாக்கிவிட்டது. சாத்தானின் பைபிளில் இது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என பாவல் நவகீதன் கேரக்டர் மூலம் சொல்கிறார்.
கிறிஸ்தவ மதத்தில் இது நாத்திகம் என்ற கணக்கிலும் வராத, சாத்தான்களை மட்டும் நம்பும் ஒரு கூட்டத்தின் விஷமம் தான் இந்த மரியா. இப்படிப்பட்ட மரியாக்களை சென்சார் போர்டு வலதுசாரிகள் ரத்னக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.
இந்து மதச் சாமியார்கள் எல்லாருமே காம வெறியர்களாக, கார்ப்பரேட் காவாலிகளாக இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக சொல்ல, இன்னும் சொல்லப் போனால் ஒரு இளம் பெண் இந்து மதச் சாமியாரிணியாகிய பிறகு சல்லாபத்திற்காக ஏங்க ஆரம்பித்தால்..என்னவாகும் என்பதை ஹரி கே.சுதன்களால் சினிமாவாக எடுத்துரமுடியுமா? எடுத்தாலும் ரிலீஸ் பண்ணிரமுடியுமா? இது நடந்தால் இந்த மரியாவை வரவேற்கலாம். தப்பில்லை.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தனது அம்மாவிடம் பேசும் மரியா [ சாய்ஸ்ரீ பிரபாகரன்] “நானும் சராசரி பெண்ணா வாழப்போறேன்” எனச் சொல்கிறார். அப்போது அவரது அம்மா, “நீ கன்னியாஸ்தியா இருப்பது கடவுள் இயேசு கொடுத்த வரம்டி” என்கிறார். உடனே மரியா, “நீ நல்லா சுகத்தை அனுபவிச்சதால தானே நான் பொறந்தேன். ஆனா நான் மட்டும் எந்த சுகத்தையும் அனுபவிக்கக் கூடாது” என சீறுகிறார். இதனால் பெற்ற தாயாலேயே வீட்டைவிட்டு விரட்டப்படுகிறார்.
அதன் பின் தனது புனித உடையை களைந்தெறிகிறார். சாத்தான்களை நம்பும் பாவெல் நவகீதன் கூட்டத்தில் சேர்கிறார். க்ளைமாக்ஸில் தனது தோழியின் ஆண் நண்பனுடன் தனது செக்ஸ் ஆசையையும் தீர்த்துக் கொள்கிறார். இதை அந்த தோழி [ சுதா புஷ்பா] பார்த்துவிட்டு மரியாவை சகட்டுமேனிக்கு அடித்து வீட்டைவிட்டு விரட்டுகிறார்.
இதற்கு மேல் விமரிக்க விரும்பவில்லை.
— ஜெடிஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.