அங்குசம் பார்வையில் ‘மாரீசன்’
தயாரிப்பு : ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரி, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்கள் : ‘இ-4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ்’ முகேஷ் மேத்தா, சி.வி.சரத். டைரக்ஷன் : சுதீஷ் சங்கர், கதை-திரைக்கதை-வசனம் & கிரியேட்டிவ் டைரக்டர் : வி.கிருஷ்ணமூர்த்தி. நடிகர்-நடிகைகள் : ‘வைகைப்புயல்’ வடிவேலு, ஃபக்த் பாசில், சித்தாரா, கோவை சரளா, ஹரிதா, விவேக் பிரசன்னா, ரேணுகா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா. ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி, இசை : யுவன்சங்கர் ராஜா, எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங், பி.ஆர்.ஓ. : யுவராஜ் & ரியாஸ் கே.அஹமத்.
திருட்டுக் கேஸில் விடுதலையாகி, பாளையங்கோட்டை ஜெயிலிலிருந்து வெளியே வருகிறான் தயா [ ஃபகத் பாசில் ]. கிடைக்கும் கேப்பிலெல்லாம் ஆட்டையைப் போட்டபடி, இரவு நேரம் செமத்தியான திருட்டு வேட்டைத் திட்டத்துடன் நாகர்கோவிலில் இருக்கும் வேலாயுதம் பிள்ளை [ வைகைப்புயல் வடிவேலு ] வீட்டிற்குள் நுழைகிறான் தயா. அங்கே கை-கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கட்டிலில் அமர்ந்திருக்கிறார் வேலாயுதம் பிள்ளை.
தனக்கு ஞாபகமறதி [ அல்சைமர்] வியாதி இருப்பதால், போலீசில் வேலை பார்க்கும் தனது மகன் குமார், இப்படிச் செய்துவிட்டுப் போயிருப்பதாகவும், தன்னை வெளியில் கூட்டிப் போனால், 25 ஆயிரம் தருவதாகவும் சொல்கிறார் வேலாயுதம் பிள்ளை. ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, வேலாயுதம் பிள்ளையின் அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதை ஏடிஎம் டிஸ்ப்ளேவில் பார்த்துவிடுகிறான் தயா. அந்த 25 லட்சத்தை எப்படியாவது ஆட்டையப் போட்டுவிடவேண்டும் என ப்ளான் போட்டு, வேலாயுதம் பிள்ளையின் ஆசைப்படி பைக்கிலேயே திருவண்ணாமலைக்கு கிளம்புகிறான் தயா. அந்த 25 லட்சத்தை தயா ஆட்டையப் போட்டனா? என்பதன் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘மாரீசன்’.
ஜெயிலிலிருந்து வெளியே வந்ததுமே தனது கைவரிசையை வரிசையாகக் காட்டும் தயாவாக ஃபகத் பாசில். வள்ளி தியேட்டரில் ஜாக்கிசான் படம் பார்த்துவிட்டு, ஒரு யமஹா பைக்கை ஆட்டையப் போட்டு, வடிவேலுவின் வீட்டுக்குள் நுழைந்து, பின் அவருடன் பைக்கிலேயே பயணிக்கும், பணத்திற்காக மயக்கும் மாரீசனாக முதல் அரைமணி நேரம் ஃபகத் பாசில் கொடி தான் பறக்கிறது. போகும் வழியிலேயே அவருடைய கூட்டாளி விவேக் பிரசன்னாவுடன் போனிலேயேபேசி 25 லட்சத்திற்கு ஸ்கெட்ச் போடும் வரை ஃபகத் தான் பக்காவாக தெரிகிறார்.
வீட்டிற்குள் ஃபகத்தைப் பார்த்ததும் “வா குமாரு.. வந்துட்டியா.. ஏம்பா இவ்வளவு லேட்டு” என தனது மகனைக் கூப்பிடுவது போல கொஞ்சம் மெதுவான குரலில் கூப்பிடும் போதே ’வைகைப்புயல்’ மையம் கொண்டுவிட்டாலும், இடைவேளை நெருங்கும் நேரத்தில் தான் இந்தப் புயல் வலுவடைந்து தீவிரமாகிறது. ஃப்ளாஷ்பேக்கில் தனது மனைவி மீனாட்சிக்கு [ சித்தாரா] இருக்கும் அல்சைமரை நினைத்து கலங்குவது, அவர் தற்கொலை செய்து கொண்ட பின் லேசான உடல் அதிர்வுடன் அழுவது, விவேக் பிரசன்னா யார் எனத் தெரிந்ததும் ஷாக்காகி க்ளைமாக்ஸில் ஆங்கார பெர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இடத்தில் வைகைப்புயலின் நடிப்புக் கொடி பறக்கிறது. வடிவேலுவின் காஸ்ட்யூமும் லுக்கும் சிம்பிள் & அட்ராக்டிவ் ரகம்.
வடிவேலுவின் நண்பனாக திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும் லிவிங்ஸ்டன், ஒரு பெண் குழந்தையின் தாயாக வரும் ஹரிதா, ஃபகத்தின் அம்மாவாக வரும் ரேணுகா இவர்களுக்கு ஓரிரு காட்சிகள் என்றாலும் நிறைவு. ஆனால் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஃபரிதா பேகமாக வரும் கோவை சரளாவுக்கு வேலையே, “செல்போன் டவரை வாட்ச் பண்ணுங்க, விட்ராதீங்க அவனை, கொலைகாரனை பிடிச்சே ஆகணும்” இதைச் சொல்வது தான். “ஆமாம் மேடம்.. ஓகே மேடம்… எஸ் மேடம்..” போடுவது தான் இன்ஸ்பெக்டராக வரும் தேனப்பனின் வேலை.
நாகர்கோவில், மதுரை, கோவை, திருவண்ணாமலை என ரோட் ட்ரிப்பில் நன்றாகப் பயணித்துள்ளது கலைச்செல்வன் சிவாஜியின் கேமரா. பாடல்களில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் முக்கால்வாசி சீன்களில் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் யுவன்சங்கர் ராஜா.
பொதுவாக எடுத்த படத்தை விமர்ச்சிப்பது தான் நமது பழக்கமும் வழக்கமும். அதே போல் இந்த மாரீசனிலும் சில சீன்கள், அதாவது மதுரை அருகே போகும் போது ஆட்டை அடித்துவிட்டு,ஃபகத் ஏடிஎம்மில் பணம் எடுத்து வந்து தரும் சீன், கோவையில் இரவில் லாட்ஜிலிருந்து வெளியேறும் வடிவேலுவை ஃபாலோ பண்ணிவிட்டு, மீண்டும் லாட்ஜுக்கே வந்து ஃபகத் கதவைப் பூட்டிக் கொள்ளும் சீன், அதே போல் திரும்பத் திரும்ப வரும் சீன்கள் இதையெல்லாம் வெட்டி ஒட்டியிருந்தால், இரண்டு மணி நேரத்திற்குள் நல்ல க்ரைம் ஜானர் எஃபெக்டும் இந்த மாரீசனுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் படம் ஓடுவதால் ரொம்பவே டயர்டாக்கிவிட்டான் இந்த ‘மாரீசன்’. மற்றபடி அப்படி எடுத்திருக்கலாம், இப்படி எடுத்திருக்கலாம் எனச் சொல்வது நாகரீகமில்லை. அது நமது வேலையுமில்லை.
— மதுரை மாறன்