அங்குசம் பார்வையில் ‘மருதம்’
தயாரிப்பு: சி.வெங்கடேசன். எழுதி இயக்கியவர்: வி.கஜேந்திரன். ஆர்டிஸ்ட்: விதார்த், ரக்ஷனா, மாறன், அருள் தாஸ், சரவண சுப்பையா, ‘ தினந்தோறும்’ நாகராஜ், ஒளிப்பதிவு: அருள் கே.சோமசுந்தரம், இசை: என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டிங்: பி.சந்துரு, ஆர்ட் டைரக்டர்: தாமு, பி.ஆர்.ஓ: ஏ.ராஜா ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் கதைக் களம்.
கெமிக்கல் உரங்களை நம்பாமல் இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் செய்து மண்ணின் தரம் காக்கும் விவசாயி கன்னியப்பன் ( விதார்த்). தனது மகனை உயர்தர தனியார் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு தனது அப்பா பெயரில் இருக்கும் விவசாய நிலத்தை மூன்று லட்ச ரூபாய்க்கு காய்கறி வியாபாரி அருள்தாஸிடம் அடகு வைக்கிறார். மகனின் கல்விக் கனவுடன் இருப்பவரின் தலையில் இடியை இறங்குகிறது அரசு வங்கி ஒன்று.
அந்த நிலத்தை அவரது அப்பா அந்த வங்கியில் அடமானம் வைத்து நெல் அரைக்கும் மிஷின் வாங்கியதாகவும் கடனை கட்டாததால் நிலத்திற்கு வேலி போட்டு ஏலத்திற்கு விடப்போவதாகவும் அடாவடி பண்ணுகிறார்கள் வங்கி அதிகாரிகள். தன் அப்பா வாங்காத கடனுக்கு ஏலமா? என அதிர்ச்சியாகும் கன்னியப்பன், களத்தில் இறங்கிய பிறகு தான் பல அதிர்ச்சிகள், வங்கியின் அயோக்கியத்தனங்கள் அம்பலத்திற்கு வருகின்றன.
வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன். இந்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? என்பதை இந்தியாவையே அதிரவைக்கும் க்ளைமாக்ஸுடன் வந்திருக்கும் சினிமா தான் இந்த ‘மருதம்’.
மக்கள் பணத்தில் செழிப்பாக வாழும் நடிகன், உண்மையான மனிதனாக இருந்தால், அந்த மக்கள் பக்கம் நின்று மக்களுக்கான சினிமாவைத் தான் கொடுப்பான் என்பதற்கு சமகால சாட்சி என்றால் சத்தியமாக அது விதார்த் தான். நீட் கொடூரத்தை சொன்ன ‘அஞ்சாமை’ இப்ப விவசாயிகளை நசுக்கும் வங்கிகள், கார்ப்பரேட் கொள்ளையன்களை கூண்டில் ஏற்றிய மருதம் என நடிகன் விதார்த் மனிதம் பேசும் மகா கலைஞன் என்பதை பெருமிதத்துடன் பதிவு செய்ய வேண்டியது நமது கடமை. இதைவிட கூடுதல் பெருமிதத்துடன் வணங்கி வரவேற்க வேண்டிய உன்னத படைப்பாளி டைரக்டர் கஜேந்திரன். இந்த இருபெரும் கலைஞர்களை இணைத்து, காசு பணம் கிடக்கட்டும்டா வெண்ணெய்களா…
இந்த தேசத்தின் ஆன்மாவான விவசாயப் பெருங்குடிகள் பக்கம் நிற்போம் என்ற உயரிய உள்ளத்துடன் படத்தை தயாரித்த சி.வெங்கடேசனுக்கு ஒரு ராயல் சல்யூட். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கைலி-சட்டையுடன், கயவர்களை எதிர்த்து போராடும் சாமானிய விவசாயியாகவே வாழந்திருக்கார் விதார்த். மக்களின் வக்கீல் கந்தனின் ( தினந்தோறும் நாகராஜ்) துணையுடன் கோர்ட்டில் துணிவுடன் வாதாடும் காட்சி, “உன்னோட தாத்தா செத்துட்டாரு, நான் சாகலம்மா” என தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் பேத்தியிடம் மன்றாடும் காட்சியிலும் விவசாய சொசைட்டி அயோக்கியர்களால் உயிர் இழந்த தனது நண்பன் மாறனை நினைத்து கோர்ட்டில் வெடித்து அழும் காட்சியிலும் கல் மனசையும் கரைய வைத்துவிட்டார் விதார்த். இவரின் மனைவியாக ரக்ஷனாவின் நடிப்பும் அபாரம். இவரின் காஸ்ட்யூமே அந்த கேரக்டரின் வலியைச் சொல்லிவிடுகிறது.
வட்டிக்கு கொடுக்கும் அருள் தாஸின் கேரக்டர் கூட மனிதம் பேசுவது மனதில் நிற்கிறது. தினந்தோறும் நாகராஜ் வந்த பிறகு படம் சும்மா அதிருது ரகம் தான். அயோக்கிய வங்கியின் மேனேஜராக சரவண சுப்பையாவின் திமிர், க்ளைமாக்ஸில் அடங்கி ஒடுங்கி விடுகிறது. இந்த மருதத்தில் இசைக்கருவிகள் இரைச்சல், பாடகர்களின் காட்டுக்கத்தல் இல்லாமல் மனதை மயக்கும் பாடல்களை கவிஞர் நீதி வழியாக நம்ம காதுகளுக்குள் கடத்துகிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகு நந்தன்.
மலையையும் மலை சார்ந்த நிலத்தையும் இயல்பாக காட்சிப் படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரம். உள்ளத்தில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் இயக்குனர் கஜேந்திரன் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டி தோள் கொடுப்போம். இந்த மருதம் எனும் சினிமாவுக்கு மக்களும் தோள் கொடுப்பது மிகவும் அவசியம்…
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.