அங்குசம் பார்வையில் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’
தயாரிப்பு- டைரக்ஷன்: ‘டி பிக்சர்ஸ்’ தயாள் பத்மநாபன். ரிலீஸ்: ஆஹா ஒரிஜினல் ஓடிடி. நடிகர்—நடிகைகள்: வரலட்சுமி சரத்குமார், மஹத் ராகவேந்திரா, ஆரவ், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், சுப்பிரமணிய சிவா. ஒளிப்பதிவு: சேகர் சந்திரா, இசை: மணிகாந்த் கத்ரி( பிரபல சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகன்) . எடிட்டிங்: ப்ரீத்தி பாபு. ஸ்டண்ட்: சேத்தன் டிசோசா. பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா & ரேகா ’டி ஒன்’
நம்ம விழுப்புரத்தைச் சேர்ந்த தயாள் பத்மநாபன், கன்னட சினிமாவில் 30—க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவிட்டு, ‘கொன்றால் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகி கவனிக்க வைத்தவர். அந்த தயாள் பத்மநாபனின் இரண்டாவது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாரான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படம் ஆஹா ஒரிஜினல் ஓடிடியில் 18-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது.
சென்னையில் ஒரு இரவு நேரம். பள்ளிச் சிறுமியை ரவுடிக்கும்பல் ஒன்று கடத்துகிறது. இதை தனது செல்போனில் பதிவு செய்துவிட்டு, படபடபுடன் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார் மஹத். அங்கே அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு, மஹத்துடன் அந்த க்ரைம் ஸ்பாட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர்.
அரட்டல் உருட்டலுடன் போகும் இன்ஸ், ரவுடிகளின் தலைவன் நாகாவுடன் கைகுலுக்குகிறார். இதனால் அதிர்ச்சியாகும் மஹத், அங்கிருந்து தப்பி ஓடுகிறார். அதன் பின் அவருக்கு என்ன நேர்ந்தது, அதே மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக இருக்கும் வரலட்சுமி இதை எப்படி ஹேண்டில் பண்ணுகிறார்? என்பது தான் ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’.
ரவுடிகளுக்கும் போலீசுக்கும் இருக்கும் கள்ள உறவு, வரவு—செலவு டீலிங்குகளை செண்டிமெண்ட் ஃப்ளாஷ்பேக்குகளை லிங்க் பண்ணி, திரைக்கதையை நன்றாகவே நகர்த்திக் கொண்டு போகிறார் டைரக்டர் தயாள் பத்மநாபன்.
வரலட்சுமியின் போலீஸ் பெர்ஃபாமென்ஸுக்கு தாராளமாக பாஸ் மார்க் போடலாம். அதே போல் மஹத்துக்கும் வருவுக்கும் இடையே உள்ள உறவு, சந்தோஷ்பிரதாப்பும் அவரது நண்பர்களும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனித்தனியாக வந்ததன் பின்னணி, போலீஸ் உயரதிகாரியாக வரும் ஆரவ்வுக்கும் மஹத்துக்கும் இடையே உள்ள உறவு என எல்லா கேரக்டர்களுக்கும் டீடெய்லாகவும் ஷார்ட்டாகவும் திரைக்கதையில் சொல்லி சுவாராஸ்யபடுத்தியிருக்கார் டைரக்டர். ரவுடி நாகாவாக சுப்பிரமணிய சிவா கச்சிதமாக கனெக்ட் ஆகிறார்.
க்ரைம் சப்ஜெக்ட்டுக்கு மிகப் பொருத்தமான இசையை மணிகாந்த் கத்ரியும் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவும். அதுசரி டைரக்டரே, க்ரைம் ஸ்பாட்டுக்கு தனது பைக்கில் இன்ஸுடன் வரும் மஹத், ரவுடியும் இன்ஸும் கைகுலுக்குவதைப் பார்த்துட்டு, பைக்கை போட்டுவிட்டு, ஓட்டமா ஓடுறாரே ஏன்? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மஹத்தின் அப்பாவுக்கு உள்ளூரிலேயே இருக்கும் அனாதை ஆஸ்ரமத்தில் 21 வருசமா மகன் இருப்பது தெரியாதா? இல்ல ஆறேழு வயசு மகனான மஹத்துக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணாதா? பட்டப்பகல்ல பப்பளப்பான்னு அம்புட்டு ரவுடிகளையும் ஸ்டேஷன் வெட்டவெளியில நிக்க வச்சு விசாரிக்காரு ஆரவ். ஆனா ஒரு டி.வி.மைக்கையும் காணோமே? அதுசரி, அவய்ங்களுக்கு வேற முக்கியமான வேலை இருந்திருக்கும்.
இப்படி ஒண்ணு ரெண்டு ஓட்டைகள் இருக்கத்தான் செய்யுது. ஆனா ஸ்க்ரீன் ப்ளே ட்விஸ்டுகள் அதை மறக்கச் செய்யுது. அதனால் ஆஹா ஓடிடியின் ஹிட் லிஸ்டில் ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ இருக்குது.
–மதுரைமாறன்