திருச்சி கிழக்கில் தீக்குச்சி !
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்டிருக்கும் மறுமலர்ச்சி திமுகவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் மூன்றில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடப்போகிறது என்ற முடிவு கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள். தற்போது, தி.ராஜேந்திரன், ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா மற்றும் மணி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக இருந்து வரும் நிலையில் இந்த நால்வருமே இந்த முறை எப்படியும் எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.
இங்கேதான் சிக்கல். நான்கில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடப்போகிறது என்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மதிமுக கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுதான் வேட்புமனுவே தாக்கல் செய்ய முடியும். கட்சிப்பதவியா? எம்.எல்.ஏ. பதவியா? என்ற கேள்விக்கு, ஒரே குரலில் எம்.எல்.ஏ. பக்கம் கையை உயர்த்தியும் விட்டார்களாம்.

தற்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை இழந்து நிற்கும் நிலையில், இந்த தேர்தலில் ஒரு தொகுதியிலாவது தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. போராடி பெற்றிருக்கும் அந்த ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் போட்டியிடப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதுதான் இப்போதைய விவாதமாகி வருகிறது. தற்போது எம்.பி.யாக இருக்கும் துரை.வைகோ, கட்சியின் சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தனது எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய சட்டமன்ற தொகுதி ஒன்றில்தான் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையை தலைவரிடத்தில் வைத்திருக்கிறாராம்.
இதன்படி பார்த்தால் திருச்சியை சேர்ந்த டாக்டர் ரொஹையா பக்கம்தான் காற்று பலமாக வீசுவதாக தகவல். சமீபத்தில் எம்.பி. துரை.வைகோ மற்றும் கழகத் தோழர்களுடன் களப்பணியாற்றி முடித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட சென்றபோது, ஆண்கள் எல்லோரிடமும் என்ன வேண்டுமென்று கேட்டுவிட்டு தன்னிடம் கடைசியாகத்தான் மெனு ஆர்டர் வாங்கினார் சர்வர் என்பதாக ஒரு பதிவிட்டிருந்தார்.
மேலும், அரசியல் சூட்டை தணிக்க இளநீர் சாப்பிடவும் பரிந்துரைத்திருந்தார். மருத்துவமனையிலிருந்து கட்சி கொடி பறக்கும் காரில் ஏறுவது போலவும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டு திமுக தோழர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் தானும் பங்கேற்ற வீடியோக்களையும் அடுத்தடுத்து பதிவு செய்திருந்தார். இதையெல்லாம்விட, தனது தொகுதிக்குள் நடைபெற்ற நிகழ்வொன்றில், தீப்பெட்டியை உரசி குத்துவிளக்கை ஏற்றுவதற்கான வாய்ப்பையும் டாக்டர் ரொஹையாவுக்கு வழங்கியிருந்தார் எம்.பி. துரை.வைகோ. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது திருச்சி கிழக்கில் தீப்பெட்டிதான் களம் காணப்போகிறது என்றே கணிக்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.