‘ மேக்ஸ்’ டிரெய்லர் ரிலீஸ் ஃபங்ஷன்!
கன்னட ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் படம் ‘மேக்ஸ்’ நாளை (டிச.27) தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதனால் டிச.24 ஆம் தேதி மதியம் சென்னை சத்யம் தியேட்டரில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் & தயாரிப்பாளர் கிச்சா சுதீப், படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி , தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கொட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட பிரசாத், படத்தில் நடித்துள்ள நம்ம ஊரு நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கலைப்புலி எஸ். தாணு நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி இப்படம் அதன் தனிப்பட்ட கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார். பாடல்களை உருவாக்கிய அஜனீஷ் லோக்நாத் திறமையை பாராட்டினார்.
படத்தின் ஹீரோவும் இணைத்தயாரிப்பாளருமான கிச்சா சுதீப் பேசும் போது ‘மேக்ஸ்’-ன் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் கதையையும், தயாரிப்பாளர் தாணுவின் தாராள மனதையும் ரொம்பவே புகழ்ந்தார். காக்க காக்க படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணுவை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து, ஒரு காசும் வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கிய அவரது நற்குணத்தையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். மேலும், தாணு கன்னடத் திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார்.
இயக்குனர் மிஷ்கின் பேசும் போது, தாணுவின் அவரின் தயாரிப்பில் இப்போது தயாராகும் தனது படமான ‘ட்ரெய்ன்’-ல் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருடைய கதை கூறும் கனவுகளை நிறைவேற்ற உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ரவி கொட்டாரக்காரா பேசும் போது, ஊடகத்தினர் அனைவரும்சினிமாவை நேர்மையாக ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். சிறந்த படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால், தயாரிப்பாளர்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடக ஆதரவு முக்கியம் என்பதை முக்கியமாக வலியுறுத்தினார்.
— மதுரை மாறன்.