தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் : தமிழக சுற்றலாத்துறை அமைச்சர் தகவல்!
தஞ்சை பெரிய கோயிலை
உலக அதிசய பட்டியலில் சேர்க்க
முயற்சி மேற்கொள்ளப்படும் :
தமிழக சுற்றலாத்துறை அமைச்சர் தகவல்!
உலகப் புராதனச் சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க சுற்றுலாத்துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள அருங்காட்சியகம், அரண்மனை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகம் ஆகிய இடங்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலுக்கு பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் தங்குமிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 1.80 கோடி சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூருக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. நடப்பாண்டில், கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர் எனக் கூறிய அமைச்சர், நிகழாண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்துவரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது என்றார் அமைச்சர்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது என்றும், தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்க சுற்றுலாத்துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.