அனுமதியின்றி செயல்படும் போலி மருத்துவ கல்லூரி ! கேள்விக்குறியான மாணவர்கள் !
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள மஹாராஜாஸ் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு Bsc. Cardiac, Diploma Nursing, BAMS, BNYS உள்ளிட்ட 8 பாடப் பிரிவுகள் உள்ளன.
இக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டில், எந்த பாடப்பிரிவிற்கும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெறவில்லை. முதல் பருவத் தேர்வில், மூன்று பாடங்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 8 பாடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும், போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகளோ இல்லை. மேலும், BAMS பாடப்பிரிவிற்கு நீட் கட்டாயம் என்ற விதியை மீறி நீட் தேர்வு எழுதாதவர்களை BAMS பாடப் பிரிவில் சேர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இக்கல்லூரி ராஜஸ்தானில் உள்ள Sunrise University-இன் கீழ் செயல்படுவதாக நிர்வாகத் தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர். ஆனால், இப்பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இப்பல்கலைக்கழகமானது ராஜஸ்தான் மாநிலத்திற்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் அனுமதியையோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையோ பெறவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்கண்டவை உள்ளிட்டு ஏராளமான பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால், உண்மையிலேயே இது ஒரு கல்லூரிதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் துணையோடு 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 23.07.2025 அன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், மகாராஜா கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பாகவும், மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்கக் கோரியும் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 23.07.2025 அன்று மாலை கிணத்துக்கடவு தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரும், 24.07.2025 அன்று காலை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களும் கல்லூரியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
இப்பிரச்சினைகளை மூடி மறைக்க கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. மாணவர்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்த்தி, மோசடியாக பணம் பறிப்பதை மட்டுமே இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.
எனவே, இக்கல்லூரியின் நிலை குறித்த உண்மை நிலையை “காலதாமதமின்றி” ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.