கர்நாடக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 31-ல் மேகதாது முற்றுகைப் போராட்டம்! – மல்லை சி.ஏ.சத்யா!
புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்
நலம் வாழிய நலனே
மதிப்புமிகு அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
ஆகஸ்ட் 31 கர்நாடக அரசைக் கண்டித்து திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம்.
தமிழ் நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து மேகதாதுவில் அணைக்கட்ட ஆயத்தமாகி வரும் கர்நாடக அரசை கண்டித்து 31/08/2026 திங்கட்கிழமை திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மேகதாது முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் பங்கைப் பெறுவதற்கு சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது, மீண்டும் 1924 ஆம் ஆண்டு மற்றோரு ஒப்பந்தம் போடப்பட்டது,
1974 ஆம் ஆண்டிலிருந்து நடுவர் மன்றம் அமைக்க கோரி 16 ஆண்டுகள் போராடியதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது, 1990 ல் இருந்து நடுவர் மன்றத் தீர்ப்பிற்க்காக 17 ஆண்டுகள் போராடி 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் தீர்ப்பு கிடைத்து அதை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இப்படி ஒரு தலைமுறையை இழந்து போராடி பெற்ற உரிமையே காவிரி நீர்.
தமிழ்நாடு சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற காவிரி நீர் உரிமையை மறுத்து கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் நீதிமன்ற தீர்ப்பையும் நடுவர் மன்ற உத்தரவையும் மதிக்காமல் சட்டவிரோதமாக தடுப்பனைகளைக் கட்டி குடிநீர் மற்றும் பயிர் பாசனப் பரப்பை விஸ்தரிப்பு செய்து கொண்டு தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட அடாவடியாக ஆயத்தமாகி வருகிறது கர்நாடக மாநில அரசு. இதைக் கண்டும் காணாமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் கள்ளமொளனம் காக்கிறது ஒன்றிய பாஜக அரசு, இந்த நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையேயான இங்சிங் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழ்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் ஆறுகளை நம்பித்தான் இருக்கிறது, காவிரி ஆறு குடகு மலையில் ஊற்று நீராக சுரந்து பொங்கி பிரவாகம் எடுத்து பூம்புகார் வரை பயணிக்கும் தூரம் 800 கிமீ. தமிழ்நாட்டில் 416 கிமீ தூரம் வடிநிலப் பரப்பளவு 50 லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர் 44,016 சதுர கிலோமீட்டர்.
கர்நாடகாவில் 320 கிமீ தூரம் வடிநிலப் பரப்பளவு 41 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் 34,273 சதுர கிலோமீட்டர் இருமாநில எல்லை 64 கிமீ
இந்தியாவின் தமிழ்நாடு கடைமடை மாநிலமாக இருப்பதால் தலைமடை மாநிலங்கள் காவிரியில் கர்நாடகவும் பாலாற்றில் ஆந்திரவும்,

முல்லைப் பெரியாற்றில் கேரளாவும் அடாவடி செய்வதும் பெருமழைக் காலங்களில் வெள்ளநீர் வெளியேறி உயிர்களுக்கும் பயிர்களுக்கும் சேதத்தை விளைவிக்கும் போது திறந்து விடப்படும் உபரி நீரை பெறும் மாநிலமாக தமிழ்நாட்டை சகோதர மாநிலங்கள் நினைக்கின்றது.
நாம் கேட்பது பிச்சை அல்ல உரிமை என்பதை நிலைநாட்ட 31/08/2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆற்றுப் படுகை வழியாக கர்நாடக மாநிலம் மேகதாது நோக்கி திராவிட வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் விவசாய அணி மாநிலத் தலைவர் திராவிட ரத்னா மீஞ்சூர் எழிலரசன், மாநில செயலாளர் விழுப்புரம் சம்மந்தன், மாநில இலக்கிய அணி தலைவர் இலுப்புலி நடேசன்,சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் சக்திவேல்,மாநகர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தை திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் மானமிகு கொளத்தூர் மணி அவர்கள் தொடங்கி வைத்து விளக்க உரையாற்ற உள்ளார்.
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்ட கழகம் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் பெரும் திரளாக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றிட உரிமையுடன் அழைக்கின்றேன். விவசாயிகளின் நலன் காக்க களத்தில் நிற்போம்.
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்…
மல்லை சி ஏ சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.