மேகேதாட்டு அணை ஒரு நீர்மின் அணை (Hydroelectric Dam) என்கிறார் கர்நாடக முதல்வர். அதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்கிறார். முன்னொரு காலத்தில் நீர் மின்சாரமே முதன்மை ஆதாரமாக இருந்தது என்பது உண்மைதான். அதற்கெனவே, பல அணைகளும் கட்டப்பட்டன. இன்று பல்வேறு காரணங்களால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.
பெரிய நீர்மின் திட்டங்களுக்கு எதிரான குறிப்பிடத்தக்க குறைபாடு, அதற்காகச் செலவிடப்படும் மாபெரும் தொகையாகும். திட்டமிடலில் ஏற்படும் தவறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழல் போன்றவற்றின் காரணமாக அணைகள் 44% காலத்தாமதத்தையும், 96% திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக செலவு மீறல்களையும் சந்திக்கின்றன என்கிறது Energy Policyயின் ஆய்வுக் கட்டுரை. மேலும், காலப்போக்கில் நீர்த்தேக்கங்களில் சேரும் வண்டல் மண் அதன் பராமரிப்புச் செலவை அதிகரிக்கிறது.
“2020ஆம் ஆண்டு நீர்ப் புத்தகம்” என்ற அறிக்கை, (Water Year Book: Central Asis and Around the Globe 2020) உலகிலுள்ள பெரும்பாலான நீர்மின் திட்ட மேம்பாடுகள் நிலைத்தன்மையற்றவை என்று கூறியுள்ளன. மேலும், அவை வளர்ச்சி நோக்கங்களுக்கு பாதகமாக நடைபெறுகின்றன என்பதையும் விளக்குகிறது. .
‘நீர்மின் திட்டங்களிலிருந்து விலகும் ஒரு கொள்கை முடிவு தேவைப்படுகிறது’ என்று ‘சர்வதேச ஆறுகள்’ அறிக்கை வலியுறுத்துகிறது. காரணம், நீர்மின் திட்டத்தை நம்பியிருந்த பல நாடுகள் நீர் வறட்சியின் காரணமாக மின் பற்றாக்குறையையும், கடும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றன. சான்றாக 66% நீர்மின் திட்டத்தைச் சார்ந்திருந்த கென்யா, வறட்சியினால் உருவான மின் பற்றாக்குறையை, ஜெனரேட்டர்களைக் கொண்டு ஈடுசெய்து வருவதால் தொடர்ந்து பொருளாதார இழப்புக்குள்ளாகி வருகிறது.
விக்கிபீடியாவில் தேடினாலே, ‘தோல்வியடைந்த நீர்மின் திட்டங்களின் பட்டியல்’ என்று உலகளாவிய பட்டியல் கிடைக்கும். அதில் கர்நாடகாவின் பக்கத்து மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்த ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. அதில் 1987-இல் ஓராண்டுக்கு மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது ஏன்? 2009 அக்டோபர் 2இல் அந்த அணைக்கு நேர்ந்த விபத்தின் காரணம் என்ன? போன்ற விபரங்கள் கிடைக்கும். இதையெல்லாம் கர்நாடக முதல்வர் அறிந்திருக்க மாட்டாரா என்ன?
வழக்கம் போலவே இதன் பின்னேயும் ஒரு கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது. பொதுவாக காலநிலை மாற்ற விளைவின் காரணமாக புவி நிலப்பரப்பில் உள்ள நீர் இருப்பு குறைந்து வருகிறது. இத்துடன் நீர்ப்பிடிப்பு பகுதிகள் சிதைந்த பின்னர் அணையின் கொள்ளளவும் கேள்விக்குள்ளாகிறது. அணையின் மீத்தேன் வெளியீடு காலநிலை மாற்றத்தைத் தூண்டுகிறது என்பது பொதுவாக நாம் அறிந்ததே.

இருப்பினும், இதுபோன்ற உண்மைகளுக்கு நேர்மாறாகக், ‘காலநிலை நெருக்கடியைத் தவிர்க்க நீர்மின் திட்டங்கள் ஒரு தீர்வு’ என்று சர்வதேச நீர்மின்சக்தி சங்கம் (IHA) தொடர்ந்து ஒரு பொய்யை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது International Rivers அமைப்பு. IHA அமைப்பு என்பது அணைத்தொழில் சார்ந்த ஒரு குழும அமைப்பாகும்.
IHA அமைப்பு வேறு சில குழுக்களுடன் இணைந்து உலகின் மொத்த நீர்மின் மின்சாரத்தின் அளவை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் சான்று, IPCC அறிக்கை உள்ளிட்ட சான்றுகளை அது கருத்திலேயே கொள்வதில்லை. அத்துடன் நீர்மின் திட்டத் தொழிலுக்குக் காலநிலை மாற்ற நிதியை மானியமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, மேகேதாட்டு அணை முதலில் யாருக்கு இலாபமாக இருக்கப் போகிறது என்ற கேள்வி முதலில் எழுகிறது. உண்மையில் கர்நாடக மக்களுக்கா? இதில் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்று கர்நாடகா முதல்வர் கூறுவது மற்றொரு வேடிக்கை. மனதுக்குள் இவ்வாறு மேலும் பல கேள்விகள் எழுகின்றன.
காரணம், இந்த கான்கிரீட் கனவின் திட்டத்தொகையான 9000 கோடி ரூபாய்.
தொடரும்
எழுத்தாளர் நக்கீரன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.