அங்குசம் சேனலில் இணைய

அப்பா முக்கியமான மீட்டிங் பேச போயிருக்காங்க … கண்களை குளமாக்கிய கவிஞர் நந்தலாலா நினைவலைகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இலக்கிய வானில் நிலவாய் வலம் வரும் மறைந்த கவிஞர் நந்தலாலாவின் 70-ஆவது பிறந்த நாளை, களம், வானம், தமுஎகச ஆகிய அமைப்புகள் இணைந்து திருச்சியில் ஆக-30 அன்று சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

திருச்சி – மத்திய பேருந்து நிலையம், கலையரங்கம் வளாகத்தில் செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், என்.சேதுராமன், பி.ரமேஷ்பாபு, ப.குமாரவேல், வி.ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்க, எம்.செல்வராஜ், பி.கே.மாதவன், சிவவெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை நிகழ்த்தினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

பல்வேறு தளங்களில் கவிஞர் நந்தலாலாவுடன் பயணப்பட்ட ஆளுமைகள் பலரும் அவருடனான தங்களது அனுபவங்களை அவையில் பகிர்ந்து கொண்டார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“சிலர் இருந்தும் இல்லாது இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இல்லாமலும் இருக்க முடியும் அல்லவா” என்பதாக ஞானி மறைவையொட்டி நந்தலாலா எழுதிய கட்டுரையின் கடைசி வரிகளை குறிப்பிட்டு, ”அதுபோலவே அப்பாவும்  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு அப்பா முக்கியமான மீட்டிங் பேச போயிருக்காங்க. அதான் இங்கே வரலை.” என நந்தலாலாவின் மகள் பாரதி நந்தலாலா பேசியபோது அவரது நா தழுதழுத்தது. அரங்கம் நிறைந்திருந்த அனைவரது கண்களையும் ஈரமாக்கியது.

பாரதி நந்தலாலா.
பாரதி நந்தலாலா.

“அப்பா எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருப்பார். அப்பா எங்களோடு நேரம் செலவிட வேண்டுமென்று ஏங்கியிருக்கிறோம். அப்பாவிடமும் கேட்டிருக்கிறோம். வீட்டில் மைக் வைக்கவா? அப்போவாவது வீட்டில் இருப்பீர்கள்தானே என்றுகூட கேட்டிருக்கிறேன். அப்போதும் கோபப்பட மாட்டார். மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு கடந்து செல்வார். நேரம் குறைவு என்றாலும், குடும்பத்தை அவர் கவனிக்காமலும் இல்லை. இரண்டையும் பேலன்ஸ் செய்திருக்கிறார்.

அவர் காதலித்தது இரண்டை மட்டும்தான். ஒன்று புத்தகங்கள். மற்றொன்று அவரது நண்பர்கள். நண்பர்களைக்கூட, செட், செட்டாக வைத்திருப்பார்.  காலையில் வாக்கிங் போவது ஒரு செட் நண்பர்களுடன். இலக்கியக் கூட்டங்களுக்கு தனி வகை நண்பர்கள். தொழிற்சங்க இயக்க நண்பர்கள் அவர்கள் தனியாக இருப்பார்கள். அதுபோல எல்லோரையும் பராமரித்தவர் அப்பா.” என்றார், பாரதி நந்தலாலா.

நிகழ்வின் சிறப்புரையாற்றிய கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், நந்தலாலாவுடனான அந்த காலத்து அனுபவங்களை தனக்கே உரிய நயத்துடன் பதிவு செய்தார்.

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“இவனுங்களுக்கு என்னப்பா, பட்டிமன்றம் பட்டிமன்றமா பேசி இலட்சத்துல சம்பாதிக்கிறானுங்கனு பேசுறவங்க இருக்காங்க. அவங்க சொல்ற அளவுக்கு இல்லையென்றாலும், இன்றைக்கு ஓரளவு வசதியோடு இருக்கிறோம். ஆனால், அந்த காலத்தில் அப்படியெல்லாம் கிடையாது. ஒழுங்கான ரோடு வசதி இருக்காது. பஸ்லதான் போகனும். எங்களோட இரவு தூக்கம் பெரும்பாலும் பேருந்துகளில் தான் இருக்கும். போற இடத்துல நேரத்துக்குத்தான் பஸ் கிடைக்கும். ஊருக்கு ஊர் கொசுக்கடிக்கு மத்தியிலதான் பேருந்துக்கு காத்திருப்போம்.

சாலமன் பாப்பையா கூட நகைச்சுவையாக சொல்வார். இந்த ஊர் கொசு ரொம்ப மோசம் என்பார். எப்படி சொல்கிறீர்கள் என்பேன். நான் கொசுக்கடி வாங்கியிருக்கிறேன்ல என்பார். அதுபோல, பட்டிமன்றம் பேசிவிட்டு பஸ் பிடித்து ஊர் திரும்பியாக வேண்டும். அடுத்தநாள் அவர் கேஷியர் பணிக்கு போயாக வேண்டும். சாவி அவரிடம்தான் இருக்கும். ஆனாலும் என்ன சிரமப்பட்டாலும் பணிக்கு சென்றுவிடுவார்.” என்பதாக, தொடக்க கால நினைவுகளை பகிர்ந்தார்.

“நந்தலாலாவைப் போல டைமிங் காமெடி பன்ன முடியாது. ஒருமுறை விபூதியை காட்டி, மற்ற பொருட்களுக்கெல்லாம் எக்ஃபயரி டேட் இருக்கும். விபூதிக்கு மட்டும் இருக்காது. ஏனென்றால், அது எப்போதும் கெட்டுப்போகாத ஒரு உன்னதமான பொருள் என்றார் ஒருவர். உடனே, சொன்னார் நந்தலாலா, ஆல்ரெடி அதுவே எக்ஸ்பயரி ஆனதுதானே அதனாலதான் அதுக்கு எக்ஸ்பயரி டேட்டுனு ஒன்னு போடலனு சொன்னார். இதுதான் நந்தலாலா.” என்றபோது, எழுந்த சிரிப்பொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது.

கவிஞர் நந்தலாலா நினைவலைகள்மேடையில் அவர்கள் இருவரும் ”மாப்ள” என்று முறை சொல்லி பேசிக் கொள்வது தொடங்கி, பட்டிமன்றத்துக்கு பேருந்தை தவறவிட்டு தாமதமானால் எப்படி அதை சமாளித்து பேசுவார்? அவர் முன்னரே வந்து தாமதமாக வந்துசேரும் அணியினரை எப்படி நையாண்டி செய்வார் என்பது போன்று, ஒவ்வொரு பட்டிமன்ற நிகழ்வுகளின் போதும் அவர் அந்த கணத்தில் பேசிய முத்தாய்ப்பான சொல்லாடல்களை பட்டியலிட்டு, அவரது தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். அவ்வாறு அவர் விவரித்த தருணங்களில், 70-வயது குழந்தையாகவே ஓரு கணம் தோன்றி மறைந்தார் நந்தலாலா.

அவர் எழுதிய “ஊரும் வரலாறும்” என்ற நூல் இன்றளவும், ஒரு மாவட்டத்தின் வரலாற்றை எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டுமென்பதற்கு பாடத்திட்டம் போல அமைந்திருப்பதை சுட்டிக் காட்டினார்.

நல்ல வாசிப்பு அனுபவம் உடையவர். எவ்வளவு பெரிய நூலையும் விரைவாக வாசித்து விடுபவர். அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி. அவருக்கென்று எதிரிகள் யாருமே கிடையாது. எல்லாரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். நட்பு பாராட்டக்கூடியவர். பெரியாரை போற்றுகிறவர்கள் பாரதியை இகழ்வார்கள். பாரதியை உயர்த்திப்பிடிப்பவர்கள் பெரியாரை தாழ்த்துவார்கள். ஆனால், இரண்டிலும் உள்ள நல்லதுகளை எடுத்துக்கொண்டு பெரியாரையும் பாரதியையும் இரயில் தண்டவாளங்களை போல ஆக்கி அதில் பயணித்தவர் நந்தலாலா என்பதாக அவரது பண்பட்ட பண்பின் மேன்மையை பறைசாற்றினார்.

கவிஞர் நந்தலாலா நினைவலைகள்அவர் குருதிவழி குடும்பமாக இல்லாதிருந்தாலும், நம்மையெல்லாம் கொள்கை வழி குடும்பமாக ஆக்கியவர் நந்தலாலா. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, அவர் ஒரு நல்ல தண்ணீர் கிணறு. வாளிகள் வேறுபட்டாலும் பாகுபாடு காட்டாமல் நல்ல தண்ணீரை எப்போதும் வழங்கியவர். என்பதாக நிறைவு செய்தார், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.

அரங்கம் நிறைந்த விழாவாக அமைந்தது. கவிஞர் நந்தலாலா குறித்த ஆவணப்படம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் வெளியாகும் என்பதாகவும் மகிழ்வான அறிவிப்பை செய்தார் பாரதி நந்தலாலா.

ஞானியின் மறைவையொட்டி அவரது நினைவுகளை தொகுத்தது போலவே, கவிஞர் நந்தலாலாவின் நினைவுகளையும் தனி நூலாக தொகுக்க இருப்பதாகவும்; இன்றுபோலவே, இனி வருடந்தோறும் அவரது பிறந்தநாளில் சொற்பொழிவு நிகழ்வு தொடரும் என்ற அறிவிப்பு தந்த மனநிறைவோடும், நந்தலாலா என்ற ஆளுமையின் உயரிய பண்புகளை அசைபோட்டபடியே, அரங்கைவிட்டு பிரிய மனமில்லாது மெல்ல நகர்ந்தது மொத்தக் கூட்டமும்.

    —  இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.