அங்குசம் பார்வையில் ‘ மெரி கிறிஸ்துமஸ் ‘ எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘ மெரி கிறிஸ்துமஸ் ‘
தயாரிப்பு: ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்’ ரமேஷ் தெளரானி, சஞ்சய் தெளரானி, ஜெயா தெளரானி, கேவல் கார்க். டைரக்டர்: ஸ்ரீராம் ராகவன்.ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராதிகா ஆப்தே, கவின் பாபு, ராஜேஷ். ஒளிப்பதிவு: மதுநீலகண்டன், இசை: ப்ரீத்தம், பாடல்கள்: யுகபாரதி தமிழில் உதவி: பிரதீப் குமார், அப்துல் ஜஃபார், பிரசன்னா நடராஜன், லதா கார்த்திகேயன். பிஆர்ஓ: யுவராஜ்.
ஒரு கிறிஸ்துமஸ் நாள். பாம்பேயின் ( இப்போது மும்பை) இரவு நேரம். ஒரு ரெஸ்டாரன்ட் டில் கேத்ரினா கைஃப்பை குழந்தையுடன் எதேச்சையாக சந்திக்கிறார் விஜய் சேதுபதி. டின்னர் முடிந்தபின், கேத்ரினாவுக்கு துணையாக, அவரது குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறார் விஜய் சேதுபதி. தனது வீட்டுக்குப் போன பின், மது அருந்திய படியே, ட்ரக் அடிக்ட்டான தனது கணவன், பிரிந்து சென்ற ஃப்ளாஷ் பேக் கதையை சொல்கிறார் கேத்ரினா. தனது லவ்பிரேக் ஃப்ளாஷ் பேக்கை சொல்கிறார் விஜய் சேதுபதி.
அதன் பின் குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இருவரும் நைட் வாக் கிளம்புகிறார்கள். ஒரு சாங் முடிந்ததும் இருவரும் விஜய் சேதுபதி வீட்டுக்குத் திரும்புகிறார்கள், சரக்கடிக்கிறார்கள். மீண்டும் கேத்ரினாவுடன், அவரது வீட்டுக்கு வருகிறார் விஜய் சேதுபதி. அங்கே கேத்ரினா வின் கணவன் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சோஃபாவில் செத்துக் கிடக்கிறான். அதிர்ச்சியில் உறைகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை அவரது வீட்டுக்கு போகச் சொல்கிறார் கேத்ரினா.
அதன் பின், அதே நாள், சர்ச்சில் நள்ளிரவு பிரார்த்தனையின் போது மயங்கி விழும் கேத்ரினாவைத் தெளிய வைத்து, அவரது வீட்டுக்கு கூட்டி வருகிறார் இன்னொரு நபர். மீண்டும் கேத்ரினா வீட்டுக்குள் சென்றால், அதே டெட் பாடியைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் விஜய் சேதுபதி. இது கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிக்க வருகிறார்கள் இன்ஸ்பெக்டர் சண்முகராஜனும் கான்ஸ்டபிள் ராதிகா சரத்குமாரும். இதன் க்ளைமாக்ஸ் தான் ‘ மெரி கிறிஸ்துமஸ் ‘. இந்த சினிமா சொல்லும் கலாச்சார வரம்பு மீறிய தொடர்புக் கதைகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுதலாம். இதெல்லாம் பெங்காலி, மராத்தி மொழி சினிமாக்களில் அடிக்கடி வருவதுண்டு.
ஆனால் நாம் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற ‘பேரலல்’ சினிமாக்களில் நடிக்கத் துணிந்த விஜய் சேதுபதியைத் தான். இந்தி சினிமாவின், புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் நானாபடேகர், இது போன்ற சினிமாக்களில் தொடர்ந்து நடித்து, தன்னை ஒரு பண்பட்ட நடிகராக நிரூபித்து வருகிறார். அந்தப் பாதையைத் தான் விஜய் சேதுபதியும் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த மெரி கிறிஸ்துமஸிலும் பல சீன்களில் சேதுபதியின் நடிப்பும் உடல் மொழியும் சபாஷ் போட வைக்கிறது. அதே போல் கேத்ரினா கைஃப் பையும் சும்மா சொல்லக்கூடாது.
தனது ஃப்ளாஷ் பேக்கை சொல்லி குமுறி அழும் போது நமது மனசை கணக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் லவ்வராக ராதிகா ஆப்தே வுக்கு ஒரே சீன் தான், அதுவும் ஐந்து நிமிடங்கள் தான். ஆனால் நம்ம ராதிகா சரத்குமாரும் சண்முகராஜனும் தங்களின் நடிப்பு அனுபவத்தையும் பங்களிப்பையும் மிகவும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியை இந்தக் கதைக்குள் கொண்டு வந்ததற்காகவும் நுட்பமான பல சீன்களை க்ரியேட் பண்ணியதற்காகவும் டைரக்டர் ஸ்ரீராம் ராகவனுக்கு சபாஷ் போடலாம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பதாலும் அப்போதைய பம்பாயைக் காட்டுவதற்காகவும் நல்ல உழைப்பைத் தந்துள்ளார் கேமரா மேன் மது நீலகண்டன். மியூசிக் டைரக்டர் ப்ரீத்தம் தான் படத்தின் மிகப்பெரிய சப்போர்ட்டர். பின்னணி இசையில், குறிப்பாக, வசனமே இல்லாமல் எட்டு, ஒன்பது நிமிடங்களுக்கு மேல் ஓடும் க்ளைமாக்ஸ் சீனில் பின்னிட்டாரு போங்க. மசாலா சினிமாக்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போனவர்களுக்கு இந்த ‘மெரி கிறிஸ்துமஸ் ‘ பிடிக்கும். .
–மதுரை மாறன்