அங்குசம் பார்வையில் ‘மிடில் கிளாஸ்’
தயாரிப்பு: ‘ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி’ & ‘ குட் ஷோ’ தேவ் & கே.வி.துரை, டைரக்டர்: கிஷோர் முத்துராமலிங்கம், ஆர்டிஸ்ட்: முனீஸ்காந்த், விஜயலட்சுமி, ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி,கோடங்கி வடிவேலு , ஒளிப்பதிவு: சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை: பிரணவ் முனிராஜ், எடிட்டிங்: ஷான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர்: எம்.எஸ்.பி. மாதவன், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
சென்னையில் மனைவி அன்புராணி[விஜயலட்சுமி] மற்றும் பெண் குழந்தையுடன் வசிக்கிறார் மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்தும் நடுத்தர வர்க்கத்தின் காரல் மார்க்ஸ் [ முனீஸ்காந்த்]. கணவனின் சுமையைக் குறைப்பதற்காக பார்ட் டைம் வேலை பார்க்கும் அன்புராணிக்கு சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது கனவு. எக்ஸ்ட்ரா வருமானத்திற்காக யூடியூப் சேனலை நடத்துகிறது மார்கஸ் குடும்பம். காரல் மார்க்ஸுக்கோ சொந்த ஊரில் நிலம் வாங்க வேண்டும் என்பது லட்சியம்.
இந்த நிலையில் ஆயுத பூஜைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது, கம்யூனிஸ்டான தனது அப்பா சிவபுண்ணியம் [ வேல ராமமூர்த்தி] 1970-ல் வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் என்ற இளைஞனுக்கு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது கடையை எழுதிக் கொடுக்க, பதிலுக்கு அந்த இளைஞன், சிவபுண்ணியத்திற்கு எழுதிக் கொடுத்த கடன் பத்திரம் கிடைக்கிறது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ராம்லாலைத் தேடிப் போகிறான் காரல் மார்க்ஸ்.
இப்போதும் சிவபுண்ணியத்தின் மீது விசுவாசமாக இருக்கும் ராம்லால், அவரது மகனான காரல் மார்க்ஸுக்கு நன்றிக் கடனாக 1 கோடி ரூபாய்க்கு பெயர் எழுதாத செக்கைக் கொடுக்கிறார். அதை பேரானந்தத்துடன் காரல் மார்க்ஸ் வாங்கிக் கொண்டு வரும் வழியில் அந்த செக் மிஸ்ஸாகிவிடுகிறது. அன்புராணி—காரல் மார்க்ஸ் இருவரின் கனவும் லட்சியமும் என்னாச்சு? இதான் ‘மிடில் கிளாஸ்’.
இந்த கிளாஸ் படங்கள் இதற்கு முன்பு பல நூறு வந்துவிட்டன. இன்னும் பல நூறு படங்கள் வரும். ஆனால் இது மனித நேயமிக்க நடுத்தர வர்க்கத்தின் கதை, அந்தக் கதையின் நாயகனாக முனீஸ்காந்த், நாயகனின் பெயர் காரல் மார்க்ஸ் என்பதாலே கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
தம்பி கல்யாணத்திற்கு அஞ்சு பவுன் நகை போட கணவனைப் பாடாய்படுத்துவது, 1 கோடி ரூபாய் செக் கிடைத்த தகவல் கிடைத்ததுமே கந்து வட்டிக்குப் பணம் வாங்கி டாம்பீகமாக செலவழிப்பது, கணவனிடம் சிடுசிடுப்பு, பிறகு கிளுகிளுப்பு என அன்புராணி கேரக்டரில் விஜயலட்சுமி கனகச்சிதம்.
படத்தின் முழுமையான, முதன்மையான காரல் மார்க்ஸ் கேரக்டருக்கு முனீஸ்காந்தைத் தவிர வேறு யாரும் பொருந்திப் போக முடியாது. செக் தொலைந்து போனது தெரிந்ததும் யூடியூப்பில் தன்னை கேவலமாக திட்டிப் பேசிய விஜயலட்சுமியை நினைத்து கண்கலங்கி நிற்கும் சீனில் அற்புதமாக ஸ்கோர் பண்ணி அசத்திவிட்டார் முனீஸ்காந்த்.
இவருக்கு உதவும் கரங்களாக வரும் கோடங்கி வடிவேலு மற்றும் குரேஷியும் லைட்டான காமெடிக்கு மட்டுமல்ல மனதில் நிற்கும் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார்கள்.
செக்கைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் தலைவராக ராதாரவி, மனநல மருத்துவராக ராதாரவியின் மனைவியாக மாளவிகா அவினாஷ், இந்த இருவரும் தான் காரல் மார்க்ஸ் குடும்பத்தின் ஹேப்பினெஸ்க்கு க்யாரண்டி தருகிறார்கள். காரல் மார்க்ஸின் சில ஆக்டிவிட்டீஸ்களை வீடியோவில் பார்த்துவிட்டு, அதிலிருந்து ஒரு சின்ன க்ளூவைப் பிடித்து, செக்கைக் கண்டு பிடிக்கும் சீன் செம அருமை.
‘மனித நேசத்தைவிட பெரிய புரட்சி எதுவுமில்லை’ என டைட்டில் கார்டு போட்டுத் தான் படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் கிஷோர் முத்துராமலிங்கம். அதையே படத்தின் பிரதானமான திரைக்கதையாக்கி க்ளைமாக்ஸில் மிடில் கிளாஸ் மக்களை கண்கலங்க வைத்துவிட்டார். என்ன ஒண்ணு க்ளைமாக்ஸை பேஸிக்காக வைத்துக் கொண்டு இடைவேளைக்குப் பின்பு டிடெக்டிவ், சைக்கியாட்ரிஸ்ட் என திரைக்கதை கொஞ்சம் திக்குமுக்காடுகிறது…நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் போல. 1 கோடி ரூபாய் செக்கை முனீஸ்காந்த் தொலைக்கும் போதே அந்த கேரக்டர் மீது நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு கோபம் வருவது படத்தின் பலவீனம். ஆனால் அதையே கடைசியில் வேலராமமூர்த்தியின் பொதுவுடமைச் சிந்தனையைச் சொல்லி பலமாக மாற்றி சபாஷ் வாங்கிவிட்டார் டைரக்டர் கிஷோர் முத்துராமலிங்கம்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.