விருதுநகரில் கனிமவளத் திருட்டில் சிக்கிய முக்கிய ஆவணம் ! 7 பேரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட ஆட்சியர் !
சாட்டையை சுழற்றிய கலெக்டர்! 7 பேர் சஸ்பெண்ட்!
விருதுநகர், இ.குமரலிங்கபுரம் கிராமத்தில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி விவசாய பயன்பாட்டிற்கு களிமண் எடுக்க அனுமதி வாங்கி கிராவல் மண் எடுத்து சட்டவிரோதமாக கனிமவள திருட்டில் ஈடுபட்டதாக 12 வாகனங்களை பறிமுதல் செய்து முதல் குற்றவாளியாக சிவரஞ்சனி என்ற பெண் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த செய்திகள் வெளியான நிலையில்.
இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கனிமவள திருட்டு நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பார்த்த மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் பல கோடி மதிப்பில் கனிமவள கொள்ளை நடந்திருப்பது உறுதி செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்கிறார்.
இதற்கிடையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சிவரஞ்சனி போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இந்த கனிமவள கொள்ளைக்கும், எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது, என்னுடைய ஆவணங்களை போலியாக பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட 3 முக்கிய ஆவணங்களை இணைத்து புகார் மனு அளிக்கிறார்.
உடனடியாக சாட்டையை சுழற்றிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அதில் பல அதிகாரிகள் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்களில் அடிப்படையிலும்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிலும் குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட சிவரஞ்சனி பெயரில் கடந்த பல மாதங்களாக 5 முறைக்கு மேல் அதுவும் ஒரே பெயரில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து ரசீது பெற்று கனிமவள திருட்டில் ஈடுபட்டதும்,
இதன் அடிப்படையில் தான் கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர், ராமநாதன், துணை வட்டாட்சியர், நவநீதன், கிராம நிர்வாக ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அஜிதா, கிராம உதவியாளர் குருசாமி, வேளாண் உதவி அலுவலர் முத்து குரு, நீர்வளத் துறை உதவி பொறியாளர், என மொத்தம் 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிடுகிறார்,

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர், துணை கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த சங்கத்தினர் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தக் கனிமவள திருட்டுக்கு அதிகாரிகள் புது விளக்கம் ஒன்று அளித்துள்ளனர். அந்த பகுதியில் கிராவல் மண் எடுத்தது உண்மை எனவும், கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டம்புத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் வழித்தடங்களுக்காக இந்த கிராவல் மண் எடுத்து பயன்படுத்தப்பட்டதாகவும்,
இந்தச் செயலுக்கு அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

விவசாய பயன்பாட்டிற்காக களிமண் எடுக்க அரசு அனுமதி அளித்து அறிவித்த தேதி கடந்தாண்டு 08/07/2024 ஆனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த தேதி: 28/01/2025 கிட்டத்தட்ட 6 மாத காலமாக முதலமைச்சர் வருவதற்காக மேடை மற்றும் வழித்தடம் அமைக்க கிராவல் மண்ணை இரவும் பகலுமாய் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.