அரசியலில் தவிர்க்க முடியாத டீ மாஸ்டர்கள் ; அமைச்சரானார் மீண்டும் ஒரு டீ மாஸ்டர் !
தமிழக மற்றும் இந்திய அரசியல் டீக்கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பாராளுமன்றம், சட்டமன்றங்களை கடந்து டீக்கடைகளில் தான் அதிகம் அரசியல் பேசப்படுகிறது.
தமிழகத்தில் கடைகளில் இருக்கும் பெஞ்ச்களும், பேப்பர்களும் தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் மூல காரணிகளாக இருக்கின்றன. இப்படி டீக்கடைக்கும் அரசியலுக்குமான தொடர்பு நீங்காத ஒன்றாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவினுடைய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி டீ விற்றவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் தன்னை காட்சிப்படுத்தினார். பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக உள்ளார்.
மேலும் அதிமுகவின் இரண்டாம் தலைவராக இருக்கக் கூடிய ஓ பன்னீர்செல்வம் டீக்கடை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்றும் அவருடைய டீக்கடை உள்ளது. மேலும் ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக, துணை முதல்வராக, நிதியமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இதிலும் ஒரு டீ மாஸ்டருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தான்.
இவர் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய பொன்முடியின் கோட்டையில் உதயமாகி இருக்கக்கூடிய மற்றொரு அமைச்சர். இவர் திமுகவின் ஆளுமைகளில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
செஞ்சி மஸ்தான் 1976 திமுகவில் இணைந்து. 1986 முதல் 2016 வரை 5 முறை பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்கு சென்றிருந்த நாஞ்சில் மஸ்தான், தற்போது தமிழக அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் அவருடைய டீக்கடை செஞ்சி பஸ் நிலையம் எதிரே கே எஸ் எம் டீ கடை என்ற பெயரில் இன்றும் இயங்கி வருகிறது.
இவ்வாறு அரசியலுக்கும் டீக்கடை களுக்குமான தொடர்பு இணைபிரியா பந்தமாகவே உள்ளது.