திருச்சி திமுகவில் அரசியல் உள்குத்து..! அத்துமீறி ரெய்டு நடத்தி சிக்கலில் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!
திருச்சி திமுகவில் அரசியல் உள்குத்து..!
அத்துமீறி ரெய்டு நடத்தி சிக்கலில் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!
திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில், மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் நுழைந்து சோதனை என்ற பெயரில் அத்துமீறியதாக அப்பகுதி மக்கள் வாத்தலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விசாரிக்க நாம் அப்பகுதிக்குச் சென்றோம்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஊராட்சி, கல்லூர் கிராமத்தில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் மணிவேல். இவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த வியாழன்று (13.05.2021) காலை 10.30 மணி அளவில் வாத்தலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மணிவேல் மற்றும் அப்பகுதியில் உள்ள சிலரது வீட்டிற்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் பொருட்களை சேதப்படுத்தியும் பெண்கள் தனியாக இருந்த வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை மேற்கொண்டுள்ளார்.
அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைவதற்கு ஊர் பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அதைப் பொருட்படுத்தாமல், ”சோதனை செய்யச் சொல்லி ஐ.ஜி., எஸ்.பி உத்தரவு… நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கூறி அப்பகுதி மக்களை மிரட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள், சோதனை நடந்த அன்று இரவு 7 மணி அளவில் வாத்தலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். அப்போதும் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ”உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கங்க… என்னை ஒன்னும் செய்ய முடியாது” எனக் கூறி பொது மக்களை மிரட்டி அனுப்பியுள்ளார்.
இன்ஸ்பெக்டரிடன் அத்துமீறல் குறித்த தகவல் ஒருபுறம் இருக்க, சம்பவத்திற்கு காரணம் மணிவேலுக்கு எதிராக அப்பகுதி திமுகவிற்குள் நடக்கும் உள்குத்து தான் காரணம் என ஒரு அதிர்ச்சி தகவலும் நமக்கு கிடைத்தது.
குணசீலம், கல்லூர் கிராமத்தில் திமுகவில் சீனியர் அரசியல் பிரமுகராக வலம் வருபவர் கிளைச் செயலாளர் மணிவேல். இவரை அப்பகுதியில் பிடிக்காத சிலர் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதி தான் மணிவேல் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக பொய்யான தகவலை கூறி ரெய்டு நடத்தச் செய்துள்ளனர்.
இந்த உள்குத்து வேலையை புரிந்து கொள்ளாத வாத்தலை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தவறான தகவலை வைத்துக் கொண்டு, சோதனை என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி செய்தது காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவம் குறித்து அப்பகுதி திமுக பிரமுகர்கள் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசியுள்ளனர். அதன் பின்பே, பொய்யான தகவலை கொண்டு ரெய்டு நடத்தியது தவறு என ஒப்புக் கொண்டுள்ளார்.
உயரதிகாரிகளின் பெயர்களைக் கூறி ரெய்டு நடத்திய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் தரப்பை அறிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்ட போது நம் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.
-ஜித்தன்