திமுகவில் இணைய முயற்சி செய்யும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் !
திமுகவில் இணைய அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அதிமுகவில் ஆளுமை செலுத்தக்கூடிய நபர்களை திமுகவின் பக்கம் இழுத்து வர முயற்சி எடுத்து வருகின்றனர். இப்படி அதிமுக மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திமுகவினர் தொடர்பு கொண்டு வருகின்றனர். மேலும் அதிமுகவினரை திமுக பக்கம் அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் கரூர் மாவட்ட நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாது பல அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளையும் திமுக பக்கம் கொண்டு வந்திருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, அதிமுகவின் ஆட்சி காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீல் திமுகவில் இணைவதற்கு பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலோபர் கபீலின் எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து நிலோபர் கபீல், செந்தில் பாலாஜி மூலமாகவும் திமுக தலைமைக்கு தூது விட்டு உள்ளாராம். ஆனால் இவை எதையும் திமுக தலைமை பொருட்படுத்தி கொள்ளவில்லையாம்..
காரணம் என்ன என்று கேட்கும் போது, நிலோபர் கபீலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நபரை திமுகவில் தற்போது இணைப்பது தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கும். மேலும் நிலோபர் கபீல் வருவதால் திருப்பத்தூர் மாவட்டத்திலோ, வாணியம்பாடி பகுதியிலோ திமுகவில் எந்தவித அரசியல் மாற்றமும் நிகழப் போவதில்லை, மேலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அரசியல் செல்வாக்கு இல்லாத நபரை திமுகவில் அழைத்து என்ன பயன் என்று திமுக தலைமை கூறிவிட்டு நிலோபர் கபீலினுடைய தூதை கிடப்பில் போட்டுள்ளதாம்.