கடந்த 2021 மே மாதத்தில் திமுக பொறுப்பேற்றவுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி சார் “வெள்ளை அறிக்கை” வெளியிட்டது போன்ற செயல்பாடுகளில் முன்னணியில் இருந்தார். கோயில் நிலங்களை மீட்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோயில்களுக்குப் பயணம் செய்து, கோயில்களில் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்திட உத்தரவுகள் பிறப்பித்து, நிதியமைச்சரை ‘ஓவர்டேக்’ செய்து முன்னணிக்கு வந்தார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
இந்து அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது,“இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் (2021-22) 10 கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், “ஒரு கல்லூரி தொடங்கச் சுமார் 12 கோடி தேவைப்படுகின்றது. 10 கல்லூரிகள் தொடங்க 120 கோடி இந்து அறநிலையத்துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மக்களிடம் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கியது.
“10 கல்லூரிகளின் பட்டியல்”
இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் 10 கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் உடன் வெளியிடப்பட்டது.
1.சென்னை கொளத்தூர்
2. சென்னை கீழ்ப்பாக்கம்
3.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம்
4.திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி
5.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு
6.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்
7.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி
8.திருச்சி மாவட்டம் லால்குடி
9.தென்காசி மாவட்டம் கடையம்
10.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது
“நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட 4 கல்லூரிகள்”
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
1.சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி
2.திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி,
3.ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி,
4.விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியச் சுவாமி கலை, அறிவியல் கல்லூரி
ஆகிய 4 கல்லூரிகளில் தற்காலிகமாகத் தனியார் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட இந்து அறநிலையத்துறையால் அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் முற்றிலும் சுயநிதிக் கல்லூரிகளாகச் செயல்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட உயர்கல்வித்துறையும் மறுப்பின்மை சான்றிதழையும் (No Objection Certificate) வழங்கியது.
“இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் – எதிர்த்து வழக்கு”
இந்து அறநிலையத் துறையின் கீழ்ச் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அக்டோபர் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். இந்தப் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ளத் தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்துச் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தாய் மொழியைத் தமிழாகக் கொண்ட எனக்கு அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்றத், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் அந்த அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனவும், அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
“கோயில் நிதியில் கல்லூரி வேண்டாம் – மேலும் ஒரு வழக்கு”
தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ”முதல் கட்டமாக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதற்காக மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கான அரசாணை கடந்த மாதம் 6-ம் தேதி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரியும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தடை விதிக்கக்கோரியும், கோவில் சொத்துகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரியும் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
“அறநிலைத் துறையின் பிரமாண வாக்குமூலம்”
இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து அறநிலையத்துறை அளித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில்,“இந்து அறநிலையத்துறை சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள், இந்து அறநிலைத் துறையின் நிதியில் தொடங்கப்பட்டுள்ள சுயநிதிக் கல்லூரிகள். எனவே, இங்குப் பணியாற்றும் ஆசிரியர்களும், அலுவலர்களும் இந்துக்களாகவே இருக்கவேண்டும் என்று இந்து அறநிலைத் துறையின் ஒழுங்காற்று சட்டம் விதி 10இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்துக்களிடம் மட்டும் விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறோம். அறநிலைத் துறை கோயில்களுக்கான ஒழுங்காற்று சட்டத்தின்படிதான் செயல்படுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
“கி.வீரமணி – கூட்டணி கட்சியினர்
பிரமாண வாக்குமூலத்திற்கு எதிர்ப்பு”
இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழங்கிய பிரமாண வாக்குமூலம் “இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. கோயில் ஒழுங்காற்று சட்டம் கல்லூரிகளுக்குப் பொருந்தாது. கல்வி எல்லாருக்கும் பொதுவானது என்பதில் மதம் நுழையக்கூடாது” என்று திராவிடர் கழகத் தலைவர் மற்றும் திமுக ஆட்சியை வழிநடத்துபவர் என்ற பெருமைகொண்டுள்ள கி.வீரமணி விடுதலை நாளிதழில் கருத்து வெளியிட்டிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இடதுசாரி இயக்கங்கள் இந்து அறநிலையத்துறையின் பிரமாண வாக்குமூலத்தை ஏற்க மறுத்து அறிக்கை வெளியிட்டன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் “இந்து அறநிலையத்துறை ஒழுங்காற்று சட்டத்தின்படியும் விதியின்படிதான் கல்லூரிகள் செயல்படும்” என்று கூறிவந்தார். சமூக ஆர்வலர்கள் பலரும், “அறநிலையத்துறை ஒழுங்காற்று சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து, அனைத்து மதத்தினரையும் ஆசிரியர்களாக, அலுவலர்களாக நியமனம் செய்யலாம்” என்ற கருத்தையும் தெரிவித்திருந்தனர். “அப்படியெல்லாம் திருத்தம் செய்யமுடியாது” என்று அமைச்சர் சேகர்பாபு உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
“அறநிலையத்துறை சட்டங்கள் – திருத்தம் வேண்டும் – வழக்கு”
1990இல் பெரியாரியச் சிந்தனையாளர், புதிய குரல் ஆசிரியர் தோழர் ஓவியா அவர்கள், இந்து அறநிலையத்துறையின் விதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு,‘இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர்கள் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் பிறமதத்தினரும் பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் எப்படி விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாக ஆனார்கள். இந்து மதத்தைச் சார்ந்த ஆண்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இந்து பெண்களுக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்பது அரசியல் சாசனத்தின் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று கூறும் 14ஆவது விதிக்கு எதிரானது. இந்து பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்பதை நீதிமன்றம் அறிவிக்கவேண்டும்” என்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தோழர் ஓவியா அவர்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. பின்னர்த் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் இந்த வழக்கை நடத்தினர்.
“அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் – நீதிமன்றம் தீர்ப்பு”
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலைத் துறை சார்பில் அளிக்கப்பட்ட பிரமாண வாக்குமூலத்தில்,‘பெண்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை தீட்டு என்னும் மாதவிலக்கு ஏற்படுகின்றது. இந்தக் காலங்களில் பெண்கள் கோயில்களில் பணியாற்றுவது என்பது கோயிலின் புனிதத்தைக் கெடுத்துவிடும் என்பதால் பெண்கள் கோயில் பணிகளில் பணியாற்றுவது என்பதை ஏற்கமுடியாது’ என்று தெரிவித்திருந்தது. வழக்கை விசாரித்த நீதியரசர் சந்துரு,‘மாதவிலக்கு என்பது பெண்களுக்கான இயற்கை நிகழ்வு. இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது.
அப்படியானால் கோயிலில் உள்ள பெண் தெய்வங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாதா?” என்று கேள்விகளைக் கேட்டு, “கோயில் பணிகளில் பெண்கள் பணியாற்றலாம்” என்று தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர்தான் அறநிலையத்துறை கோயில்களில் பெண்கள் செயல் அலுவலர் பொறுப்புக்கு வரமுடிந்தது. மேலும், பெண்கள் அறநிலையத்துறையில் இணை இயக்குநர் பொறுப்பிலும் இருந்தனர். இன்றளவும் இருந்து வருகிறார்கள். இதன் மூலம் இந்து அறநிலையத்துறையின் சட்டங்களும் விதிகளும் மாற்றங்களுக்குட்பட்டது என்பது தெளிவாகிறது. அமைச்சர் சேகர்பாபு ‘விதிகளைத் திருத்தமுடியாது’ என்று சொல்வதன் மூலம் அவருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.
“அறநிலையத்துறையின் உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்கள்”
இந்து அறநிலைத் துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் குறிப்பாக இந்து அறநிலையத்துறையின் சார்பில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 5 நடைபெற்று வருகின்றன. அவை :
1.அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்
2.அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்
3.ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்
4.ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம்
5.பூம்புகார் கல்லூரி, மேலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் (தற்போது மயிலாடுதுறை மாவட்டம்)“கோயில் சட்டம் வேறு; தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் வேறு”
இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் மேற்கண்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிடுவதுபோல் இந்து மதம் சார்ந்தவர் மட்டுமல்லாமல் எல்லா மதத்தினரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களாக உள்ளனர். இந்தக் கல்லூரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு தற்போது அறிவித்துள்ள கல்லூரிகளுக்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்திட, இந்து அறநிலையத்துறைக் கல்லூரியில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஆசிரியர் சங்கத் தலைவராகவும் விளங்கி, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் அங்குசம் செய்தி இதழுக்காக நம்மிடம் உரையாடினார்.
அப்போது,“அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தொடங்கிய இந்து அறநிலையத்துறை தற்போது ஏன் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கவேண்டும்? அரசே சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்குவது நல்ல முன்னுதாரணமாக இருக்காது என்பது என் சொந்தக் கருத்து. மாண்புமிகு இந்து அறநிலைத் துறை அமைச்சர் அவர்கள், அறநிலைத் துறையின் கோயில் ஒழுங்காற்று சட்டம் விதி 10ஐயும் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் (1976)ஐயும் இணைத்துக் குழப்பமாகப் பேசி வருகிறார். 1976இல் உருவாக்கப்பட்ட தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தின் பல விதிகள் அண்மையில் உருவாக்கப்பட்ட தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதி மன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போதைய திமுக அரசு அறநிலைத் துறையின் சார்பில் தொடங்கியுள்ள இந்த 4 சுயநிதிக் கல்லூரிகளையும் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் கட்டுப்படுத்தும். தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில் மதம் சார்ந்து ஆசிரியர் அலுவலர் நியமனம் நடைபெறலாம் என்று குறிப்பிடப்படவில்லை.
கோயில் ஒழுங்காற்று சட்டமும் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டமும் தனித்தனியானது. இரண்டையும் இணைத்துப் பார்க்கக்கூடாது. பிரித்தே பார்க்கவேண்டும். இந்து அறநிலையத்துறையிடம் கல்லூரிகள் தொடங்கப்போதுமான நிதி இருக்கும் நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளாக இந்த 10 கல்லூரிகளை அறிவித்திருக்கலாம். அல்லது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசின் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மானியக் கோரிக்கையில் தெரிவித்திருந்தார். அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடியே 20 கல்லூரிகள் அரசின் சார்பில் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கலாம். அதை விடுத்து அறநிலையத் துறையின் சார்பில் சுயநிதி கல்லூரி என்ற அறிவிப்பில்தான் குழப்பம் உள்ளது. இந்தக் குழப்பமும் அமைச்சர் சேகர்பாபு ஏற்படும் குழப்பம்தான். விதிகளில் எந்தக் குழப்பம் இல்லை” என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.
“அறநிலையத்துறையின் 4 கல்லூரிகள் – நீதிமன்றம் கருத்து”
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் 15.11.2021ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதி மன்றத்தில்,‘அறங்காவலர் இல்லாமல், நீதிமன்ற அனுமதியின்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் துவங்கக்கூடாது. கூடுதல் கல்லூரிகள் தொடங்க அறநிலையத்துறை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது.
ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது. மேலும், ஏற்கனவே துவங்கப்பட்ட 4 கல்லூரிகளிலும் இந்துமத வகுப்புகள் துவங்க வேண்டும். கல்லூரி துவங்கிய ஒரு மாதத்திற்குள் இந்து மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த முடியாது’என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு,“உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், இந்து அறநிலையத்துறை சட்டத் திட்டங்களின்படியும் தொடங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்கப்படும். இந்து மதம் சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் மட்டுமே கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதில் அறநிலையத்துறை உறுதியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“திமுக ஆட்சி – இந்து மதச் சிந்தனையில் சமரசமா?”
கலைஞர் மறைவுக்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றிய மு.க.ஸ்டாலின் தன்னை ‘திராவிடன்’ என்று பெருமையோடு அறிவித்துக்கொண்டார். மதச்சிந்தனைக் கொண்ட மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். திராவிடம் என்பது சாதிகளையும் மதங்களையும் கடந்து மனிதகுல ஓர்மைக்கான சிந்தனை கொண்ட கருத்தாக்கம். இந்து மதம் பிறப்பில் வேற்றுமை பாராட்டுகின்றது; சனாதானக் கொள்கையைப் பின்பற்றுகின்றது என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றத் திமுக, பதவியேற்ற 6 மாதத்திற்குள் கல்லூரிகளில் இந்து மதம் சார்பான வகுப்புகளை அரசின் நிதியில் நடத்தப் போகிறது என்பதும் அக் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்றிட முடியும் என அரசியல் சாசனத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு ஏற்படுத்தியுள்ள முதல்கோணல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முதல்கோணல் திமுக ஆட்சியை முற்றும் கோணலாக மாற்றிவிடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
–ஆதவன்