திமுக கூட்டணியில் சிதைக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி -தனித்தனியே நடக்கும் ஆலோசனை!
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஒருபுறம் தீவிரமாக செய்து வரக் கூடிய நேரத்தில் அரசியல் கட்சிகளும் விருப்ப மனு பெறுதல், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போன்ற பணிகளை மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் திமுக தலைமையை தொடர்பு கொள்ள முயன்றும், தொடர்பு கொள்ள முடியவில்லையாம். முதல்வர் வெள்ள நிவாரண பணி சுற்றுப்பயணம் என்று தொடர்ந்து களத்திற்கு சென்று வருவதால் அறிவாலயத்தில் உள்ள இரண்டாம் நிலை நிர்வாகிகளே கூட்டணி கட்சியினருக்கு விளக்கம் அளிக்கின்றார்களாம். மேலும் ஏதேனும் விவரம் என்றால் சேகர்பாபுவை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களாம்.
தேர்தலுக்கு முன்பு எதற்கெடுத்தாலும் ஆலோசனை கூட்டம், கூட்டணி கட்சிகளோடு பல்வேறு இயக்கங்கள் என்று அனைத்தையுமே கூடி கூடி முடிவெடுத்த திமுக தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணிக் கட்சியினரை ஒதுக்குவது கூட்டணிக் கட்சியினரிடம் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கூடிய மற்ற கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்களாம்.
மேலும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லையே என்ற வருத்தத்தில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என்று சமீபத்தில் துரைமுருகன் கூறியிருந்தார்.
இதனால் திமுக கூட்டணியில் இடம் பெற்று கூடிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட தலைமைகளை தொடர்பு கொண்டால் “பார்த்துக் கொள்ளலாம், அமைச்சருக்கு ஊருக்கு வரட்டும், இப்ப என்ன அவசரம்… கூட்டணியோடு தான் தேர்தலை சந்திப்போம்” என்று கூறி நேரடி சந்திப்பை தவிர்த்து வருகிறார்களாம்.
இதனால் திமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தனி தனியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைகளை தொடங்கிவிட்டனர்.
மேலும் மதிமுக போன்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் கூட்டணிக் கட்சி நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறியது, திமுக ஒருபுறம் தேர்தல் பணியை முன்னெடுக்கிறது. நாங்களும் ஒருபுறம் தேர்தல் பணியை முன்னெடுத்து இருக்கின்றோம். எப்பொழுது கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பு வருகிறதோ அப்பொழுது பேசி ஒதுக்கப்படும் வார்டுகளையும் தேர்வு செய்வோம் என்று கூறினார். மேயர் பதவிக்கான முடிவை மாநில தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.